

குகேஷ் தொம்மராஜூ..
செஸ் விளையாட்டின் புதிய மன்னராக அறிவிக்கப்பட்ட தருணங்களை விவரிக்க வார்த்தைகள் இல்லை. கேன்டிடேட் செஸ் தொடரில் வெற்றியின் மூலம் உலக செஸ் போட்டியில் விளையாடும் வாய்ப்பை பெற்று இந்த போட்டிகளில் முதல் சுற்றில் தோற்ற பின்பும், மீண்டு எழுந்து, உற்சாகமூட்டி இறுதிச் சுற்றில் கருப்பு காய்களுடன் விளையாடும் வாய்ப்பை பெற்றும் தன்னம்பிக்கை இழக்காமல் எதிரியின் ஒரு தவறான நகர்த்தலை மிகச் சரியாக பயன்படுத்தி உணர்ச்சிவசப் படாமல் வெற்றியைத் தனதாக்கி இருக்கிறார்.
வெற்றி பெற்ற பின்பும் கூட உடனடியாக விளையாட்டுக்கு மதிப்பளிப்புக்கும் விதமாக காய்களை சரி செய்து அதே இடத்தில் வைத்து அதன் பின்பு இறைவனுக்கு நன்றி செலுத்திய பின்பு செய்தியாளர் சந்திப்பு நடப்பதற்கு முன்பாக தன் தந்தையை ஆரத்தழுவி கண்ணீர் விட்டு, பின்பு நடந்த செய்தியாளர் சந்திப்பில் தன் அம்மைவைக் காண்பது தான் தற்போதைய எண்ணம் என்பதை வெளிப்படுத்திய தருணங்கள், செய்தியாளர் சந்திப்பு முடியும் தருணத்தில் தனது சக போட்டியாளரான சீன நாட்டின் டீங் லெரனை எழுந்து நின்று வழியனுப்பி வைத்து விட்ட பின்பே மீண்டும் உட்கார்ந்து விருந்தோம்பல் எனும் இந்திய கலாச்சாரத்தை வெளிப்படுத்திய விதம் போன்றவை,
மேக்னஸ் கார்ல்சன் உலக பட்டத்தை வென்ற போது, அதனை தானே இந்தியாவிற்கு எடுத்து வர விரும்பினேன், அதனைக் கொண்டு வருவேன் என சபதமிட்டு பத்தாண்டுகள் கழித்து நனவான கனவை மகிழ்ச்சியோடு வெளிப்படுத்தி ஐந்து முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற தனது குருவான விஸ்வநாதன் அவர்களுக்கும், இந்தியாவிற்கும், தமிழகத்திற்கும் பெருமை சேர்த்து, செஸ் உலகில் இந்தியாவின் பெருமை நிலைநாட்டும் தருணங்கள் இனி தொடர்ந்து கொண்டே தான் இருக்கும் என்பதை அழுத்தம் திருத்தமாக உரைத்திருக்கிறார் இந்தியாவின் இளம் வீரர் குகேஷ் தொம்மராஜூ.
