
இந்து சமய அறநிலைத்துறையின் ஆட்சேபனையை மீறி முறைகேடாக பட்டா வழங்கிய நில அளவை வட்ட துணை ஆய்வாளர் கதிர்வேல் மற்றும் வட்டாட்சியர் ரமேஷ் மீது அதிரடி நடவடிக்கை எடுப்பாரா மாவட்ட ஆட்சியர்..!!!
திருச்சியின் மையப் பகுதியான தில்லைநகர் அடுத்துள்ள அண்ணாமலை நகர் பகுதியில் உள்ள வார்டு: G, பிளாக்: 16,
டவுன் சர்வே எண்: 8-க்கான நகரளவை பதிவேட்டில் தாயுமானவர் சுவாமி கோவில் நிலம் என பதிவாகி உள்ள நிலையில் கடந்த 24.01.2019 தேதியிட்ட கடிதம் மூலம் மேற்படி
சர்வே எண்ணுக்கான பட்டா பெயர் மாற்ற விண்ணப்பம் குறித்து தங்கள் கருத்தை தெரிவிக்குமாறு மலைக்கோட்டை தாயுமானவர் திருக்கோயில் உதவி ஆணையருக்கு திருச்சி மேற்கு வட்டாட்சியர் அவர்களால் கடிதம் அனுப்ப, அதற்கு பதிலளிக்கும் விதமாக, 31.01.2019 தேதியிட்ட கடிதம் வாயிலாக மலைக்கோட்டை கோயில் நிர்வாகத்தால் பட்டா பெயர் மாற்றத்திற்கு ஆட்சேபனை தெரிவித்ததால் திருச்சி மேற்கு வட்டாட்சியரால் சாமியப்பன் என்பவரது பட்டா பெயர் மாற்றம் மனு எண்
2019/0154/15/000397-க்கு கோயில் நிலம் என சான்று அளித்து மனுவை நிராகரித்து உள்ளனர்.
அதன் பின்னிட்டு கடந்த 12.09.2020 தேதியன்று பட்டா மாற்றத்திற்கு ஆட்சேபனை தெரிவித்து மீண்டும் தாயுமானவர் கோவில் உதவி ஆணையர் அவர்களால் நினைவூட்டு கடிதமும் அனுப்பப்பட்டுள்ளது.
இந்நிலையில் கோவில் நிலம் என சான்று அளித்து நிராகரிக்கப்பட்ட மனுதாரர் சாமியப்பன் அவர்களால் மீண்டும் அதே இடத்திற்கு கடந்த 08-01-2022 தேதியன்று கோயில் நிலத்தில் உட்பிரிவு செய்து பட்டா பெயர் மாற்றம் செய்ய மனு எண்: 2021/0154/15/000818 படி விண்ணப்பித்த நிலையில் மலைக்கோட்டை தாயுமானவர் கோவில் நிர்வாகம் சார்பில் ஏற்கனவே கொடுக்கப்பட்ட ஆட்சேபனை கடிதங்கள் அனைத்தையும் புறந்தள்ளிவிட்டு வட்டாட்சியர் ரமேஷ், வட்ட துணை ஆய்வாளர் கதிர்வேல், முதுநிலை வரைவாளர் வினோபா மற்றும் நகர சார் ஆய்வாளர் கார்த்திக் ஆகியோர் கூட்டாக சேர்ந்து பல லட்சங்கள் கையூட்டு பெற்றுக் கொண்டு கோயில் நிலத்தில் முறைகேடாக கடந்த 25-02-2022 தேதியன்று பட்டா வழங்கியது பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மலைக்கோட்டை தாயுமானவர் கோவில் நிர்வாகத்தால் மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் ஆகியோருக்கு ஆதார ஆவணங்களுடன் புகார் கொடுக்கப்பட்டு கடந்த இரண்டு வருடங்களாக மாவட்ட வருவாய் அலுவலர் நடவடிக்கை எதுவும் எடுக்காமல் மிகவும் அலட்சியமாக செயல்பட்டு வருவதாக இந்து சமய அறநிலை துறை அதிகாரிகள் தகவல் தெரிவிக்கின்றனர்.
மலைக்கோட்டை தாயுமானவர் கோவில் நிலத்தில் முறைகேடாக உட்பிரிவு செய்து தனிப்பட்டா வழங்கிய விவகாரத்தில் தவறு செய்த திருச்சி மேற்கு வட்ட அலுவலர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எதுவும் எடுக்காமல் இரண்டு ஆண்டுகளாக இழுத்தடிப்பதும், தவறை மூடி மறைக்க மாவட்ட நிர்வாகம் பெரும் முயற்சி செய்து வருவது சமூக ஆர்வலர்கள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.
