ஸ்ரீரங்கம் சேர்மன் கொடியாலம் வாசுதேவ ஐயங்கார் தோட்டம்.
சுமார் 17 ஏக்கர் பரப்பளவு உள்ள இந்த தோட்டம் ஸ்ரீரங்கத்தை சேர்ந்த பாரதிய ஜனதா கட்சியின் மாநில விவசாய அணியின் செயலாளர் கோவிந்தன் என்கின்ற கோவிந்தராஜனிடம் குத்தகைக்காக கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு கொடுக்கப்பட்டிருக்கின்றது. இந்த நன்செய் நிலத்தில் அவர் தெண்ணை மா கொய்யா சப்போட்டா போன்ற மரங்களையும் செந்சந்தனமரங்களையும் வளர்த்து பராமரித்து வருகின்றார்.
இந்த தொகுப்பினில் ஆயிரம் தெண்ணை மரங்களும் 600 மாமரங்களும் மூன்று செஞ்சந்தன மரங்களும் 200க்கும் மேற்பட்ட கொய்யா மரங்களும் உள்ளன. கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக மெல்ல மெல்ல புதர்காடாக மண்டி இருந்த இந்த தோப்பினை செப்பணிட்டு அதை மிகவும் அழகான முறையில் பராமரித்து வருகின்றார்.

இன்று காலையில் அந்த தோப்பு முழுவதையும் சுற்றிப் பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. கிட்டத்தட்ட 4 கிலோமீட்டர் பரப்பளவுக்கு அந்த தோப்பானது நீண்டு செல்கின்றது. இதில் என்னை அதிசய வைக்க ஒரு விஷயம் என்னவென்றால் அந்த தோப்பின் பின்பகுதியில் தோப்பில் உள்ளே ஒரு மண்டபம் உள்ளது அந்த மண்டபத்திற்கு அருகிலே ஒரு தெப்பக்குளமும் உள்ளது.
பரந்து விரிந்த இந்த தோப்பை தான் இப்பொழுது தமிழகத்தின் மிகவும் பிரபலமான ரியல் எஸ்டேட் நிறுவனமான ஜி ஸ்கொயர் தனக்கு சொந்தம் கொண்டாட தொடங்கியுள்ளது. இப்பொழுதெல்லாம் பருவம் தவறி மழையும் வெயிலும் மாறி மாறி நம்மை வாட்டி வதைக்கின்ற சூழலுக்கு காரணமே புதிது புதிதாக உருவான பிரம்மாண்டமான வில்லாக்களும் அப்பார்ட்மெண்ட்ஸ்களுமே தான்.

ஸ்ரீரங்கம் ஒரு காலத்தில் மிகப்பெரிய நந்தவனங்களை கொண்டிருந்தது. காவிரி ஆற்றின் செழுமையினால் ஸ்ரீரங்கம் நகர் முழுவதும் எங்கு திரும்பினாலும் தெண்ணை மரங்களும் மா மரங்களும் கொய்யா மரங்களும் கொண்டு செழிப்பான பூமியாக இருந்தது. அந்த பூமி இன்று வறண்டு முழுவதுமாக அப்பார்ட்மெண்ட்களை கொண்டு தன்னுடைய சுயத்தை இழந்துவிட்டது.
இந்த தோப்பிற்கு அருகிலேயே உள்ள அப்பார்ட்மெண்ட் மேலூர் சாலையில் உள்ள அப்பார்ட்மெண்ட்ஸ்களும் முன்பு தோப்புகளாக இருந்தவை தான். அந்த அப்பார்ட்மெண்ட்ஸ்களில் தான் இன்றைக்கும் பெருமாளை எழுந்தருளச் செய்து பக்தர்களுக்கு தரிசனம் தருவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
இதை ஸ்ரீரங்கத்தை பூர்வீகமாக கொண்ட ஒவ்வொருவருமே நன்கு அறிவர். மனிதர்களின் சுயநலத்திற்காக இன்று ஸ்ரீரங்கத்தில் இருந்த பல மயில்களும் சிட்டுக்குருவிகளும் மான்களும் காணாமலேயே போய் விட்டன. மரங்கள் இருந்த பூமி இன்று அசுர வளர்ச்சி பெற்ற கட்டிடங்களாக மாறி உள்ளது. இந்த சூழலில் ஸ்ரீரங்கத்தில் அமைந்துள்ள இந்த அற்புதமான தோப்பினை இப்பொழுது மனிதர்கள் தன்னுடைய சுயநலத்திற்காக அழித்து அங்கே கட்டிடங்கள் கட்டுவதற்கு தயாராகி வருகின்ற சூழலை காண்கின்ற வேளையிலே இந்த பூமி சிறிது சிறிதாக மலடாகி வருவதை நாம் உணர முடிகின்றது.

இப்பொழுது எல்லாம் ஸ்ரீரங்கத்தில் தண்ணீரின் தட்டுப்பாடும் அதிக அளவில் உருவாகிவிட்டது. அதற்கு காரணம் ஸ்ரீரங்கத்தில் புதிது புதிதாக உருவாக்கி உள்ள அப்பார்ட்மெண்ட்ஸ்களே ஆகும்.
தாயுள்ளம் கொண்ட தமிழக முதல்வர் திரு மு க ஸ்டாலின் அவர்கள் இந்த பிரச்சனையை தொலைநோக்கு பார்வையோடு கையில் எடுத்து இந்த 17 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த தோப்பினை அரசு கையகப்படுத்தி அந்த இடத்தில் மேலூரில் அமைக்கப்பட்டிருக்கும் வண்ணத்துப்பூச்சி பூங்கா போன்று இங்கும் ஸ்ரீரங்கத்திலும் ஒரு மிகப்பெரிய வனத்தை உருவாக்கலாம். அங்கு மிகவும் அரிதான மரங்களை பழ வகைகளை பயிரிட்டு மக்களுக்கு அந்த வனத்தை ஒரு சுற்றுலா தளமாக மாற்றுவதன் மூலமாக இயற்கையையும் பாதுகாக்க முடியும் தமிழகத்திற்கான வருமானமும் அதிகரிக்க முடியும் என்பதே இயற்கை ஆர்வலர்களின் கோரிக்கை ஆகும்.