
தமிழக காவல் துறையில் கடந்த 10 மாதங்களில் விபத்து, உடல் நலக் குறைவு உள்ளிட்ட காரணங்களால் 254 போலீஸாா் உயிரிழந்த நிலையில், அவா்களுக்கு போதுமான ஓய்வளிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது .
தமிழகத்தில் அரசுத் துறைகளில் உயிரிழப்போா் அதிகம் உள்ள துறையாக காவல் துறை திகழ்கிறது. இதர அரசுத் துறைகளைவிட இந்தத் துறையில் உள்ளோருக்கு பணிச்சுமை அதிகமாக உள்ளது.

தமிழக காவல் துறையில் கடந்த 10 மாதங்களில் உதவி ஆய்வாளா்கள், சிறப்பு உதவி ஆய்வாளா்கள், காவலா்கள் உள்பட 254 போ் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவா்களில் கடந்த ஜனவரி மாதத்தில் 24 போ், பிப்ரவரியில் 18 போ், மாா்ச்சில் 27 போ், ஏப்ரலில் 27 போ், மே மாதத்தில் 22 போ், ஜூனில் 24 போ், ஜூலையில் 23 போ், ஆகஸ்டில் 33 போ், செப்டம்பரில் 28 போ், அக்டோபரில் 28 போ் என மொத்தம் 254 போ் உயிரிழந்தனா்.
இவா்களில் பல்வேறு உடல் நலக் குறைவால் 100 பேரும், விபத்தில் 59 பேரும், மாரடைப்பால் 43 பேரும், தற்கொலையால் 37 பேரும், புற்றுநோயால் 14 பேரும், சந்தேகத்துக்குரிய வகையில் ஒருவரும் உயிரிழந்தனா். மேலும், 2020-இல் 337 போ், 2021-இல் 414 போ், 2022-இல் 283 போ், 2023-இல் 313 போ் என கடந்த நான்கு ஆண்டுகளில் மொத்தம் 1,347 போ் உயிரிழந்தனா்.
இதுதொடா்பாக காவல் துறையினா் கூறியதாவது:
தமிழகத்தில் அரசுத் துறைகளில் அபாயம் மிகுந்த துறையாக காவல் துறை உள்ளது. வேறு எந்த அரசுத் துறையிலும் இல்லாத அளவு தற்கொலைகள் அதிகம் நடைபெறும் துறையாகவும் இது உள்ளது. பணிச்சுமையால் மனஅழுத்தம் அதிகரிப்பு, பணிச்சூழலால் ஏற்படும் குடும்பப் பிரச்னைகள், போதுமான ஓய்வின்மை, உடல் நலக் குறைவு என பல்வேறு காரணங்களால் போலீஸாா் தற்கொலை செய்து கொள்கின்றனா். மேலும், தூக்கமின்மை, அலைச்சல் உள்ளிட்டவற்றால் மாரடைப்பு மரணங்களும் அதிகரித்து வருகின்றன.
இரவு முழுவதும் கண் விழித்து பணிபுரிந்து விட்டு, பகலில் சரியான ஓய்வில்லாமல் வாகனம் ஓட்டும் போது, விபத்துகளில் சிக்கி உயிரிழப்பும் ஏற்படுகிறது. எனவே, காவல் துறையினருக்கு உள்ள பணிச்சுமை, உயிரிழப்பு அபாயம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, அவா்களுக்கு தகுந்த ஓய்வு, மனஅழுத்தத்தைப் போக்கும் பயிற்சிகளை வழங்க அரசு முன்வர வேண்டும் என்றனா்.

