
மூத்த திரைப்பட நடிகர் டெல்லி கணேஷ் உடல்நலக்குறைவு காரணமாக உயிர் இழந்தார். அவருக்கு வயது 81. விமானப்படையில் வேலை செய்த அவர் திரையுலகிற்கு வந்து தன் அபார நடிப்பால் ரசிகர்களிடம் நல்ல பெயர் எடுத்தவர்.

ஆகஸ்ட் 1 1944 அன்று திருநெல்வேலி ஜில்லாவில் பிறந்தவர் டெல்லி கணேஷ். விமானப்படையில் இணைந்து 1964-74 வரை தேசப்பணி ஆற்றியவர் தொடர்ந்து டெல்லியின் பிரபலமான தக்க்ஷன பாரத நாடக சபாவின் முக்கியமான நடிகராக பரிமாணித்தார். காத்தாடி ராமமூர்த்தி அவர்களின் நாடக்க்குழுவில் அவர் இருந்த வேளையில் டௌரி கல்யாணம் என்கிற மேடை நாடகத்தில் குசேலர் என்கிற பாத்திரத்தில் நடித்தார். அந்த நாடகத்தின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இயக்குனர் சிகரம் மறைந்த கே.பாலச்சந்தர் அவர்கள் கணேஷின் நடிப்பினை வெகுவாக பாராட்டி தன்னுடைய திரைப்பட்த்தில் முதன்முதலாக வாய்ப்பளித்தார்.
சிவாஜி கணேசன் ஜெமினி கணேசன் என முன்பாதியில் பட்டப்பெயரோடு பெரிய நட்சத்திரங்கள் இருந்த காரணத்தினால் இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர் அவர்கள் நெல்லை கணேஷை டெல்லி கணேஷாக மாற்றி பட்டிணப்பிரவேசம் செய்ய வைத்தார். ஆம் அதுதான் டெல்லி கணேஷ் தமிழ்த்திரையில் அறிமுகமான முதல் படம். முதல் பட்திலேயே மோதிரக்கையால் குட்டுப்பட்டவர் தொடர்ந்து மறைந்த இயக்குனர் விசு தொடங்கி உலக நாயகன் கமல்ஹாசன் வரை அனைவருக்குமான நடிகராக மாறினார். கணேஷ் இல்லாத கமல் படங்களே இல்லை என்பது போல அதிகப்படங்களில் கமலோடு நடித்தவர் டெல்லி கணேஷ்.
இயல்பாகவே மிகவும் சாந்தமான குணமுடைய இவரை முதன்முதலாக கமலஹாசன் தன்னுடைய அபூர்வ சகோதரர்கள் திரைப்படத்தில் வில்லனாக அறிமுகப்படுத்தினார். அதில் அவருடைய வில்லத்தனம் கலந்த வழக்குரைஞர் கதாபாத்திரம் இன்றளவும் பேசப்படுகின்ற ஒன்று ஆகும்.

மைக்கேல் மதன காமராசன் படத்தில் பாலக்காட்டு பிராமணராக கமலின் வளர்ப்பு தந்தையாக இவரின் நடிப்பு நகைச்சுவை நடிப்பின் வைரக்கல்.
ஆஹா என்கிற திரைப்படத்தில் கதாநாயகியின் தந்தையாக பிரபலமான சமையல் கலைஞராக நடிப்பில் அற்புதமான பரிமானத்தை தந்திருப்பார்.
1979 ல் பசி திரைப்படத்தில் இவரின் நடிப்பிற்கு தமிழக அரசின் சிறப்பு விருது பெற்றார்.
1994 ல் அன்றைய தமிழக முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்கள் டெல்லி கணேஷிற்கு கலைமாமணி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். கமலின் ஆஸ்தான நடிகரான டெல்லி கணேஷிற்கு இந்தியன் 2 திரைப்படமே கடைசி படமாக அமைந்துவிட்டது.
81 வயதான டெல்லி கணேஷுக்கு, கடந்த மூன்று நாட்களாக உடல்நலக்குறைவு இருந்தது. இந்நிலையில், நேற்று இரவு சென்னை ராமாபுரத்தில் இருக்கும் தன் வீட்டில் தூக்கத்திலேயே அவரின் உயிர் பிரிந்துவிட்டது.
இன்று காலையில் எழுந்ததும் டெல்லி கணேஷின் மறைவு செய்தி அறிந்து வேதனையாக இருக்கிறது என்கிறார்கள் திரையுலகினர். டெல்லி கணேஷ் படங்கள் தவிர்த்து டிவி சீரியல்களிலும் நடித்தவர். காமெடி கதாபாத்திரம், வில்லன் என எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அற்புதமாக நடிக்கும் திறமை வாய்ந்தவர்.
திரையுலகம் ஒரு அற்புதமான கலைஞரை இழந்து நிற்கின்றது.
நியூ திருச்சி டைம்ஸ் மறைந்த டெல்லி கணேஷ் அவர்களின் நினைவுகளை கண்ணீரோடு பதிவு செய்து அவருக்கு அஞ்சலி் செலுத்துகின்றது.
