

தேசிய நூலக வார விழாவில்
வாசிப்பை நேசிப்போம் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி!
திருச்சி புத்தூர் கிளை நூலகம் வாசகர் வட்டம் 57வது தேசிய நூலக வார விழாவில் வாசிப்பை நேசிப்போம் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நூலக வளாகத்தில் நடைபெற்றது. புத்தூர் கிளை நூலக பணியாளர் மீனாட்சி சுந்தரம் வரவேற்றார். சங்க கால நாணயங்கள் சேகரிப்பாளர் பாண்டியன் முன்னிலை வகித்தார். புத்தூர் கிளை நூலகம் வாசகர் வட்ட தலைவர் யோகா ஆசிரியர் விஜயகுமார் பேசுகையில்
புத்தகங்களை வாசிப்பதன் மூலம் ஒருவர் பண்படுகிறார் பக்குவப்படுகிறார் சிறந்த சிந்தனையாளராக உருவாகிறார். நாம், ஒவ்வொரு புத்தகத்தை வாசிக்கும்போதும் ஓர் புதிய அனுபவத்தை உணரலாம். ஒரு சிறந்த நண்பன் புத்தகம் தான். நல்ல புத்தகங்களைப் படிப்பதால் அறிவு வளரும். உயர்ந்த சிந்தனைகள் பிறக்கும். எண்ணங்கள் நேர் பெறும். நமது ஆற்றல் பெருகும். திறமைகள் மிளிரும். உற்சாகம் ஊற்றெடுக்கும். சோர்வு அகலும். மனம் நிறைவு பெறும். முடிவுகள் எடுக்க புத்தகம் துணைபுரியும். புத்தகங்கள் படிக்க நேரம் இல்லை என்று பெரும்பான்மையோர் கூறுகிறார்கள். விமானம், பேருந்து, தொடர்வண்டி பயணத்தின் போது, மருத்துவரை, உயர் அலுவலர்களை, தலைவர்களைச் சந்திக்க காத்திருக்கும் போதும், புத்தகங்கள் படிக்கலாம். நேரம் வீனாய்க் கழியாமல், பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும், புத்தகப் படிப்பிற்காக தினமும் ஒரு மணி நேரத்தை ஒதுக்கலாம். நூலகங்களுக்குச் சென்று, புத்தகங்களை எடுத்து வந்து படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். குழந்தைகளையும் நூலகங்களுக்கு அழைத்துச் சென்று, புத்தகங்கள் படிக்கும் ஆர்வத்தை அவர்களுக்கும் ஊட்ட வேண்டும் என்றார்.
திருச்சி பிஷப் ஹீபர் தன்னாட்சிக் கல்லூரி வரலாற்று துறை முதுகலை மாணவர்கள் அரிஸ்டோ வசந்தகுமார், திவாகரன், கிஷோர், லோகேஷ்வரன், இசாக். கிஷோர் குமார் உட்பட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.