
தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் அறிக்கை
அரசு மருத்துவமனைகளின் அவலத்தை அம்பலபடுத்திய ‘கத்திக்குத்து’ – அமைச்சர் மா.சுப்பிரமணியம் பதவி விலக வேண்டும்
தமிழகத்தில் அரசு
மருத்துவமனைகளின் நிர்வாகம் சீரழிந்து வருவதும், ஒவ்வொரு மாவட்டங்களிலே பொதுமக்கள் சரியான சிகிச்சைகள் பெற முடியாமல் அவதிப்பட்டு, அலைகழிக்கப்பட்டு பெருமளவில் பாதிக்கப்பட்டு, உயிரிழந்து வருவதும் தொடர்கதையாக உள்ளது. திமுக அரசு தேர்தல் வாக்குறுதியிலே கூறியபடி அரசு மருத்துவர்களின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.

தமிழக அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் மருத்துவ துறை செயலற்று கிடைப்பதை மறந்து, மறைத்து, தன்னுடைய பத்திரிக்கையாளர் சந்திப்புகளில் வெற்று அறிவிப்புகளையும், பொய் பெருமைகளை பேசி, தமிழக மக்களை ஏமாற்றுவதை நிறுத்த வேண்டும். மாவட்ட அரசு மருத்துவமனைகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தாமல், நிர்வாகத்தை சீரமைக்காமல் டாக்டர்களையும், பொது மக்களையும் ஆபத்தில் சிக்க விடும் வகையில் செயல்படும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதவி விலக வேண்டும்.

தமிழக முதல்வர் ஸ்டாலின் உடனடியாக தலையிட்டு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்து, ஒன்பது கோடி மக்களின் நலத்தைப் பேணிக்காக்கும் வகையில் சென்னை அரசு பல்நோக்கு அரசு மருத்துவமனையில் உள்ளது போன்ற உயர் சிகிச்சை மருத்துவ வசதிகளை, அனைத்து மாவட்டங்களிலும் ஏற்படுத்த வேண்டும்.

சென்னை கிண்டியில் உள்ள, ‘கலைஞர் நூற்றாண்டு உயர் சிகிச்சை மருத்துவமனை’யில் பணியாற்றிய புற்றுநோய் சிறப்பு மருத்துவர் பாலாஜி, நவம்பர் 13-ம் தேதி விக்னேஷ் என்ற இளைஞரால் கத்தியால் குத்தப்பட்டார். இந்தச் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்தியாவிலேயே, தமிழகத்தில் தான் அரசு மருத்துவமனைகள் சிறப்பாக செயல்படுவதாகவும், அதிலும், சென்னை கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர் சிகிச்சை மருத்துவமனை நாட்டுக்கே முன் மாதிரி மருத்துவமனை என்றும் திமுகவினர் பிரசாரம் செய்து வருகின்றனர். ஆனால், இம்மருத்துவனையில் நுரையீரல் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்ற பெண்மணி ஒருவரின் மகன் விக்னேஷ் மருத்துவர் ஒருவரை கத்தியால் குத்தியிருக்கிறார். விக்னேஷுக்கும், மருத்துவர் பாலாஜிக்கும் தனிப்பட்ட பகை இருக்க வாய்ப்பில்லை. ஆனாலும், மருத்துவரை கத்தியால் குத்தும் அளவுக்கு சென்றிருக்கிறார். இந்தச் சம்பவம் தமிழகத்தில் அரசு மருத்துவனைகளின் உண்மை முகத்தை, அவலத்தை அம்பலப்படுத்தியிருக்கிறது.

அரசு மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளின் எண்ணிகைக்கு ஏற்ப மருத்துவர்கள் இல்லை. செவிலியர்கள் இல்லை. மருத்துவ பணியாளர்கள் இல்லை. ஆய்வக வசதிகள் இல்லை. இதனால், ஒரு மருத்துவர் நூற்றுக்கணக்கான நோயாளிகளுக்குன்சிகிச்சை அளிக்க வேண்டியிருக்கிறது. இதனால் மருத்துவர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள். கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர் சிகிச்சை மருத்துவமனை போன்ற அரசின் உயர் சிகிச்சை மருத்துவமனைகளுக்கு, பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று, கடைசி கட்டமாகத்தான் வருகிறார்கள். அங்கு அவர்களுக்கு ஆறுதல் கிடைக்காததோடு, பல நேரங்களில் அவமரியாதையையும் எதிர்கொள்கின்றனர். இதனால் அங்கு சிகிச்சை பெறும் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள். ஏழையாக இருந்தாலும், சுயமரியாதையுடன் வாழும் மக்களால், கருணையற்ற அவமதிப்பை தாங்கிக் கொள்ள முடிவதில்லை. அதனால் தான் கத்தி குத்து போன்ற சம்பவங்கள் நடக்கின்றன.
இதற்கு மருத்துவர்கள் உள்ளிட்ட மருத்துவமனை பணியாளர்களை குறை சொல்லவும் முடியாது. அளவுக்கு அதிகமாக நோயாளிகள் வருவதால் அவர்களால் சிகிச்சையில் கவனம் செலுத்த முடியவில்லை. தங்களது மன அழுத்தத்தை நோயாளிகளிடம் காட்டுகின்றனர். எனவே, அரசு மருத்துவமனைகளில், மருத்துவர்கள் – நோயாளிகள் இடையே இணக்கமான சூழல் ஏற்பட வேண்டும் என்றால், மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்களின் எண்ணிக்கையை தேவைக்கேற்ப அதிகரிக்க வேண்டும். ஆய்வக வசதியை அதிகபடுத்தி, மருந்துப் பொருட்களை தட்டுப்பாடு இன்றி கிடைக்கச் செய்தல் வேண்டும். படுக்கைகளின் எண்ணிக்கையையும் அதிகரிக்க வேண்டும்.

புற்றுநோய் போன்ற உயிர் சிகிச்சை தேவைப்படும் மக்கள், சென்னைக்கு மட்டுமே வர வேண்டிய சூழல் இருக்கிறது. எனவே, தலைநகர் சென்னையில் மட்டுமல்லாது, அனைத்து மாவட்டங்களில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளில் அனைத்து வசதிகளையும் ஏற்படுத்த வேண்டும். குறிப்பாக மதுரை, கோவை, திருச்சி, சேலம், திருநெல்வேலி போன்ற தமிழகத்தின் முக்கியமான மாநகரங்களில், சென்னை கிண்டி கலைஞர் அரசு உயர் சிகிசை மருத்துவமனையில் இருப்பது போன்ற மருத்துவமனைகளை உருவாக்க வேண்டும். அப்போதுதான் அரசு மருத்துவமனைகளில் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியும். நோயாளிகளுக்கு உரிய கவனம் கொடுத்து சிகிச்சை அளிக்க முடியும்.
அரசின் மருத்துவக் காப்பீட்டு திட்டங்கள் மூலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற முடியாத சூழல் இருக்கிறது. மருத்துவக் காப்பீட்டு திட்டங்களுக்கு ஆண்டுதோறும் பல நூறு கோடிகளை அரசு செலவு செய்கிறது. அதனால் மக்களுக்கு பலன் கிடைப்பது இல்லை. எனவே, மருத்துவக் காப்பீட்டு திட்டங்கள் மூலம் தனியார் மருத்துவமனைகளில் ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்கு சிகிச்சை கிடைப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். அதன் மூலமாகவும் அரசு மருத்துவமனைகளில் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியும். கல்வி மற்றும் மருத்துவத்துக்கு செலவு செய்வதை அரசு செலவீனமாக கருதக்கூடாது அது மக்களின் எதிர்காலத்திற்கும் ஆரோக்கியத்திற்கும் செய்யப்படும் முதலீடாக கருத வேண்டும் எனவே அதற்கு எவ்வளவு நிதி வேண்டுமானாலும் தமிழக அரசு ஒதுக்க வேண்டும். அப்படி செய்வது தான் ஓர் மக்கள் நல அரசின் கடமை.
ஏ.என்.எஸ்.பிரசாத்
தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர்
கைப்பேசி: 9840170721