


வசிப்பதற்கு வழியின்றி அல்லல்படும் நரிக்குறவ மக்கள்.
கண்டுகொள்ளாத மாவட்ட நிர்வாகம்!

சென்னையை அடுத்த அம்பத்தூர் அயப்பாக்கத்தில் காயத்ரி நகர் பஸ் ஸ்டாப் பின்புறத்தில் சதுப்பு நிலப்பகுதியில் சுமார் 15 நரிக்குறவர் குடும்பங்கள் பல வருட காலமாக வாழ்ந்து வருகின்றனர். வாழத் தகுதியற்ற சூழலில் வாழ்ந்து வரும் இவர்கள் இரண்டு வருடங்களுக்கு முன்பாக தங்களுக்கு குடியிருப்பு வழங்க வேண்டும் என்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளனர்,

மேலும் நரிக்குறவர் இன மக்கள் ST பட்டியலில் சேர்க்கப்பட்டாலும், இன்று வரை அவர்களுக்கான ஜாதி சான்றிதழ்களும், சலுகைகளும் கிடைக்கப் பெறவில்லை என்றும், அவர்களின் வாழ்விடத்தை உறுதி செய்ய எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் வேதனை தெரிவித்தனர். இந்நிலையில் இன்று சென்னையை மையமாகக் கொண்டு இயங்கி வரும் தமிழன் பவுண்டேஷன் சார்பாக அவர்களுக்கு தேவையான பாய் , போர்வை மற்றும் அவர்களின் குழந்தைகளுக்கு தேவையான கல்வி உபகரணங்களும் வழங்கப்பட்டன.

நரிக்குறவர் இன மக்களின் வாழ்வாதாரத்தையும், வாழ்விடத்தையும் உறுதி செய்ய சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

