ஒப்புதல் இன்றி முடக்கப்பட்ட LPG இணைப்புகளை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்!

மத்திய அமைச்சர் சுரேஷ் கோபியிடம் துரை வைகோ எம்.பி. வலியுறுத்தல்

திருச்சி, நவ.17:

திருச்சி நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட திருவெறும்பூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில், நுகர்வோரின் ஒப்புதல் இன்றி வீட்டு உபயோக சமையல் எரிவாயு (LPG) இணைப்புகள் முடக்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. இதுகுறித்து ஏற்கனவே மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை இணை அமைச்சர் சுரேஷ் கோபியிடம் கடிதம் மற்றும் தொலைபேசி வாயிலாக புகார் தெரிவித்ததாக திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அமைச்சர் சுரேஷ் கோபி தன்னை தொலைபேசியில் தொடர்புகொண்டு கலந்துரையாடியதாகவும், அப்போது குழாய் வழி இயற்கை எரிவாயு (PNG) இணைப்புகளை விரிவுபடுத்துவதன் அவசியம் குறித்து எடுத்துரைத்ததாகவும் துரை வைகோ கூறியுள்ளார்.

PNG இணைப்புகளை விரிவுபடுத்துவது வரவேற்கத்தக்கது என்றாலும், அந்த வசதி இன்னும் கிடைக்காத பகுதிகளில் வசிப்பவர்கள், வாடகை வீடுகளில் குடியிருப்பவர்கள் மற்றும் பணியிட மாறுதலால் அடிக்கடி இடம் மாறுபவர்கள் ஆகியோருக்கு LPG இணைப்புகள் தொடர்ந்து அத்தியாவசியமாக உள்ளன என்பதை அமைச்சரிடம் எடுத்துரைத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், புதிய LPG இணைப்புகளைப் பெறுவதில் பொதுமக்கள் சந்திக்கும் சிரமங்களையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாடு முழுவதும் PNG கட்டமைப்பு விரிவுபடுத்தப்பட்டு, அனைத்துப் பகுதிகளிலும் தடையற்ற சேவை உறுதி செய்யப்படும் வரை, ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள LPG இணைப்புகளை நுகர்வோரின் ஒப்புதல் இன்றி முடக்கவோ, ரத்து செய்யவோ கூடாது என வலியுறுத்தியதாக தெரிவித்துள்ளார்.

இந்தப் பிரச்சினை தொடர்பாக தனது நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் பொதுமக்கள் பலர் புகார் மனுக்களை அளித்துள்ளதாகவும், செய்தித்தாள் செய்திகள் மற்றும் பத்திரிகையாளர்கள் மூலம் மேற்கொண்ட விசாரணைகளில் ஆயிரக்கணக்கான நுகர்வோர் பாதிக்கப்பட்டிருக்கலாம் எனத் தெரியவந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட நுகர்வோரின் விவரங்களைக் கேட்ட அமைச்சர், அந்த விவரங்களை வழங்குமாறு கோரியுள்ளார். ஆனால், நிர்வாக ரீதியான நடவடிக்கைகளுக்கு உள்ளாக நேரிடும் என்ற அச்சத்தில் எண்ணெய் நிறுவனங்களும் LPG விநியோக முகவர்களும் விவரங்களைப் பகிரத் தயக்கம் காட்டுவதாகத் தெரியவந்துள்ளது.

எனவே, தனிப்பட்ட புகார்களை மட்டும் அடிப்படையாகக் கொள்ளாமல், சம்பந்தப்பட்ட எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்கள் மற்றும் LPG விநியோக முகவர்கள் மூலம் விரிவான விசாரணை நடத்தி, பாதிக்கப்பட்ட நுகர்வோரின் எண்ணிக்கையைக் கண்டறிய வேண்டும். முடக்கப்பட்ட LPG இணைப்புகளை மீண்டும் வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மத்திய அமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளதாக துரை வைகோ தெரிவித்துள்ளார்.

மேலும், தனது அலுவலகத்தில் புகார் அளித்த LPG இணைப்புகள் முடக்கப்பட்ட நுகர்வோரின் விவரங்களையும் அமைச்சரிடம் இணைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    தவெக அரசின் முதல் ஆறு மாதங்கள் – நலத்திட்டங்களில் முன்னேற்றம், சட்டம்–ஒழுங்கிலும் வேலைவாய்ப்பிலும் தொடரும் சவால்கள்

    புதிய அகிலம் செய்திகள் | சிறப்புக் கட்டுரை | 13 நவம்பர் 2026 தமிழக வெற்றிக் கழகத் தலைவர் ஜோசப் சி. விஜய், 2026 மே 10 அன்று தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். சட்டமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 108…

    திருச்சி ரெயில்வே வளர்ச்சிக்காக 6 முக்கிய கோரிக்கைகள்

    தென்னக ரெயில்வே பொது மேலாளரிடம் துரை வைகோ எம்.பி. நேரில் மனு சென்னை, செப். 28– திருச்சியின் ரெயில்வே கட்டமைப்பை மேம்படுத்துவது தொடர்பான 6 முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி, தென்னக ரெயில்வே பொது மேலாளரை திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *