திருச்சி ரெயில்வே வளர்ச்சிக்காக 6 முக்கிய கோரிக்கைகள்

தென்னக ரெயில்வே பொது மேலாளரிடம் துரை வைகோ எம்.பி. நேரில் மனு

சென்னை, செப். 28–

திருச்சியின் ரெயில்வே கட்டமைப்பை மேம்படுத்துவது தொடர்பான 6 முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி, தென்னக ரெயில்வே பொது மேலாளரை திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ இன்று சென்னையில் நேரில் சந்தித்து மனு அளித்தார்.

மாரிஸ் தியேட்டர் மேம்பாலம்

திருச்சி மாரிஸ் தியேட்டர் அருகிலுள்ள ROB E-17 ரெயில்வே மேம்பாலப் பணி கடந்த 2 ஆண்டுகளாக முழுமையடையாமல் உள்ளது. இதனால் பொதுமக்கள் சிரமப்படுவதுடன், நகரில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வருகிறது.

இந்த மேம்பாலத்திற்கான ‘காம்போசிட் கிர்டர்கள்’ பொருத்தும் திட்டத்துக்கு தலைமைப் பாலப் பொறியாளர் அலுவலகம் ஒப்புதல் வழங்கியதுடன், தேவையான முதன்மைத் தலைமைப் பொறியாளர் அனுமதியும் கிடைத்துள்ளது. மேலும், 8 காம்போசிட் கிர்டர்களும் பணித்தளத்தை வந்தடைந்துள்ளன.

இதற்காக ரெயில்வே நிர்வாகத்துக்கு நன்றி தெரிவித்த துரை வைகோ எம்.பி., மீதமுள்ள பணிகளையும் விரைந்து முடித்து மேம்பாலத்தைப் பொதுமக்களின் பயன்பாட்டுக்குத் திறக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

துரை வைகோ முன்வைத்த 6 கோரிக்கைகள்

1. கீரனூரில் மேம்பாலம்; போட் மெயில் ரெயில் நிறுத்தம்

கீரனூர் பகுதியில் உள்ள LC No.355 ரெயில்வே கேட்டில் மேம்பாலம் அமைக்க வேண்டும். இந்தச் சாலையை கீரனூர், திருவெறும்பூர் மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள சுமார் 45 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பயன்படுத்துகின்றனர். ரெயில்வே கேட் மூடப்படும் நேரங்களில் கடும் நெரிசலும் நீண்டநேரக் காத்திருப்பும் ஏற்படுவதால், அங்கு மேம்பாலம் அமைப்பது அவசியம் என்று வலியுறுத்தப்பட்டது.

மேலும், ராமேசுவரம்–சென்னை எழும்பூர் இடையே புதுக்கோட்டை வழியாக இயக்கப்படும் போட் மெயில் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு (16751/16752) கீரனூர் ரெயில் நிலையத்தில் நிறுத்தம் வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டது.

2. பொன்மலை பணிமனையில் மின்சார என்ஜின் பராமரிப்பு வசதி

திருச்சி பொன்மலை ரெயில்வே பணிமனையில் மின்சார என்ஜின்களைப் பராமரிக்கும் வசதிகளை ஏற்படுத்த வேண்டும். முதற்கட்டமாக WAP-1, WAP-4 மற்றும் WAP-7 வகை மின்சார என்ஜின்களைப் பராமரிப்பதற்கான கட்டமைப்புகளை உருவாக்கி, அந்த வகை என்ஜின்களைப் படிப்படியாகப் பொன்மலைக்கு ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதன் மூலம் பொன்மலையின் பாரம்பரிய ரெயில்வே பராமரிப்புத் திறன் மேம்படுவதுடன், திருச்சி கோட்டத்தின் எதிர்கால ரெயில் இயக்கமும் வலுப்பெறும் என்று தெரிவிக்கப்பட்டது.

3. திருச்சி–சாமராஜநகர் இரவு நேர ரெயில்

திருச்சியையும் கர்நாடக மாநிலத்தின் சாமராஜநகரையும் இணைக்கும் வகையில் புதிய இரவு நேர விரைவு ரெயிலை இயக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

நேரடி ரெயில் வசதி இல்லாததால் பயணிகள் பல ரெயில்களை மாற்றிப் பயணிக்க வேண்டியுள்ளது. புதிய இரவு நேர ரெயில் சேவை தொடங்கப்பட்டால் மாணவர்கள், வணிகர்கள், அரசு ஊழியர்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் பயனடைவார்கள் என்றும் சுட்டிக்காட்டப்பட்டது.

4. திருச்சி–திருச்செந்தூர் பகல் நேர இன்டர்சிட்டி ரெயில்

புதுக்கோட்டை, காரைக்குடி மற்றும் அருப்புக்கோட்டை வழியாக திருச்சி–திருச்செந்தூர் இடையே புதிய பகல் நேர இன்டர்சிட்டி விரைவு ரெயிலை இயக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

திருச்சி முக்கிய கல்வி, தொழில் மற்றும் வணிக மையமாகவும், திருச்செந்தூர் முக்கிய ஆன்மிகத் தலமாகவும் விளங்குவதால், இந்த நேரடி ரெயில் சேவை மாணவர்கள், வணிகர்கள், பக்தர்கள், தினசரிப் பயணிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்குப் பெரிதும் உதவும் என்று தெரிவிக்கப்பட்டது.

5. திருச்சி சந்திப்பில் மேலும் 2 பிட் லைன்கள்

திருச்சி ரெயில் நிலையத்தில் தற்போது 2 முழுநீள பிட் லைன்களும், பகுதி நீளமுள்ள ஒரு டெமு பிட் லைனும் உள்ளன. எதிர்காலத்தில் கூடுதல் ரெயில்களை இயக்குவதற்கும் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்வதற்கும் வசதியாக, மேலும் குறைந்தது 2 முழுநீள பிட் லைன்களை அமைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது.

தற்போதைய வசதிகள் முழுமையாக நிரம்பும் வரை காத்திருக்காமல், முன்கூட்டியே கட்டமைப்பை விரிவுபடுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

6. திருவெறும்பூரில் மெமு ரெயில் நிறுத்தம்

திருச்சி–மயிலாடுதுறை இடையே இயக்கப்படும் 16833/16834 மெமு விரைவு ரெயிலுக்கு திருவெறும்பூர் ரெயில் நிலையத்தில் நிறுத்தம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.

திருவெறும்பூர் மற்றும் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த மாணவர்கள், தொழிலாளர்கள், தினசரிப் பயணிகள் மற்றும் தொழிற்சாலை ஊழியர்களுக்கு இந்த ரெயில் நிறுத்தம் மிகவும் பயனுள்ளதாக அமையும் என்று துரை வைகோ தெரிவித்தார்.

பரிசீலிப்பதாக உறுதி

இந்தக் கோரிக்கைகள் தொடர்பாக ரெயில்வே அமைச்சர், திருச்சி மற்றும் மதுரை கோட்ட ரெயில்வே மேலாளர்களிடம் ஏற்கனவே பலமுறை மனுக்கள் அளிக்கப்பட்டுள்ள விவரங்களையும் துரை வைகோ எடுத்துரைத்தார்.

ஆறு கோரிக்கைகளையும் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுப்பதாகவும், அவற்றின் முன்னேற்றம் குறித்த தகவல்களை அவ்வப்போது தெரிவிப்பதாகவும் தென்னக ரெயில்வே பொது மேலாளர் உறுதியளித்ததாக துரை வைகோ எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    திருச்சி டிசைன் ஓவியப்பள்ளி சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளின் கலைத்திறனை வெளிப்படுத்தும் 16-ஆம் ஆண்டு “மேஜிக்கல் எக்ஸ்பிரசன்ஸ் – 2026” ஓவியக் கண்காட்சி

    திருச்சி டிசைன் ஓவியப்பள்ளி சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளின் கலைத்திறனை வெளிப்படுத்தும் 16-ஆம் ஆண்டு “மேஜிக்கல் எக்ஸ்பிரசன்ஸ் – 2026” ஓவியக் கண்காட்சி, திருச்சி ஹோட்டல் ரம்யாஸ் சௌபாக்கியா குளிர்மை அரங்கில் செப்டம்பர் 26 முதல் 28 வரை மூன்று நாட்கள்…

    கல்வி என்பது விற்பனைப் பொருள் அல்ல… ஏழையின் கனவை விலைபேசி வாங்கும் சந்தைப் பொருளும் அல்ல!

    பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் திருப்பராய்த்துறை அரசு உதவி பெறும் பள்ளிகளில் இல்லையா? கல்வி வணிகமயமாக்கப்படுகிறதா?87 வயது முதியவரின் ரத்தக் கண்ணீர் மனு! “நான் இழந்த கல்வியை… என் ஊர் குழந்தைகள் இழக்கக் கூடாது!” ஜனாதிபதி, பிரதமர், முதலமைச்சர் நேரடியாக தலையிட வேண்டும்…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *