
எனது திருச்சி நாடாளுமன்ற தொகுதி மக்களின் முக்கிய கோரிக்கைகளை, ஒன்றிய அரசின் குறிப்பிட்ட துறை அமைச்சருக்கும், அந்தத் துறை அதிகாரிகளுக்கும் எடுத்துச் சென்று, அதனை நிறைவேற்றித் தருவதற்குரிய அனைத்து வழிகளிலும் தொடர்ந்து கடமையாற்றுவேன் என்பதை என் தொகுதி மக்கள் நன்கறிவர்.

அப்படியான எனது தொடர் முயற்சியின் பயனாக விழைந்த ஒரு வெற்றிச் செய்தியை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
அது, சோழன் விரைவு இரயில் திருவெறும்பூர் இரயில் நிலையத்தில் நின்று செல்லும் என்ற அறிவிப்பை, நேற்று (15.01.2026) ஒன்றிய இரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

இதற்கான நான் மேற்கொண்ட முயற்சிகளை நினைத்துப்பார்க்கிறேன்.
கடந்த 12.12.2024 அன்று திருச்சி இரயில்வே கோட்ட மேலாளரிடம் இது குறித்த எனது முதல் கோரிக்கையை கடிதமாக கொடுத்து நேரில் சந்தித்து எடுத்துரைத்தேன்.

தொடர்ச்சியாக, 18.12.2024 அன்று மாண்புமிகு ஒன்றிய இரயில்வே துறை அமைச்சர் திரு.அஸ்வினி வைஷ்ணவ் அவர்களை அவரது அலுவலகத்தில் சந்தித்து இதற்கான கோரிக்கை கடிதத்தை வழங்கி இருந்தேன்.

அடுத்ததாக, 04.01.2025 அன்று, இரயில்வே கோட்ட அன்றைய மேலாளர் திரு. எம்.எஸ்.அன்பழகன் ஐ.ஆர்.எஸ் அவர்களை அவரது அலுவலகத்தில் சந்தித்து, ஒன்றிய இரயில்வே அமைச்சரை சந்தித்து இது குறித்து வழங்கிய கோரிக்கையை எடுத்துரைத்து அதனை நிறைவேற்றித் தரும்படி கேட்டுக் கொண்டேன்.

அதுமட்டுமல்லாமல், 27.03.2025 அன்று தெற்கு இரயில்வேயின் பொது மேலாளர் அவர்களுக்கு இதே கோரிக்கையை வலியுறுத்தி கடிதம் கொடுத்து இதன் அவசியத்தை எடுத்துரைத்தேன்.
அத்துடன் நின்று விடாமல், கடந்த 10.12.2025 அன்று நாடாளுமன்றத்தின் கேள்வி நேரத்தில் திருச்சி திருவெறும்பூரில் சோழன் அதிவிரைவு இரயில் (cholan Super Fast express train) நின்று செல்வதற்கான ஏற்பாடுகள் குறித்து நான் கேள்வி எழுப்பியிருந்தேன். அதற்கு ஒன்றிய இரயில்வே அமைச்சகத்தின் எழுத்துப்பூர்வமாக பதிலும் கிடைக்கப்பெற்றேன்.

அதன் தொடர்ச்சியாக இன்று ஒன்றிய இரயில்வே அமைச்சக செய்தி குறிப்பில் வெளியிட்டிருக்கக்கூடிய, சென்னை எழும்பூரில் இருந்து திருச்சி வரை செல்லும் 22675/22676 சோழன் விரைவு இரயில் திருவெறும்பூர் இரயில் நிலையத்தில் நின்று செல்லும் என்ற அறிவிப்பை நான் உள்ளம் மகிழ்ந்து வரவேற்கிறேன்.

ஒன்றிய இரயில்வே துறை அமைச்சருக்கும், அது சார்ந்த அதிகாரிகளுக்கும் என்னுடைய தொகுதி மக்களின் சார்பாக என் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
மக்களின் கோரிக்கைகள் வென்றெடுக்கப்படும் போதெல்லம் எனது உழைப்புக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதாக நான் உணர்கிறேன்.

என் மக்கள் பணி தொடரும்.
அன்புடன்
துரை வைகோ
நாடாளுமன்ற உறுப்பினர் (திருச்சி)
முதன்மை செயலாளர்
மறுமலர்ச்சி திமுக
16.01.2025






