நூற்றுக்கால் மண்டபத்தில் நர்சரி… குழந்தைகளின் உயிருடன் யார் விளையாடினார்கள்? “ஆயிரம் ஆண்டு கோவில்… அனுமதியில்லா பள்ளி… யார் கொடுத்த தைரியம்?”

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், திருப்பராய்த்துறை வருவாய் கிராமத்தில் அமைந்துள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமையான சிவன் கோவிலின் நூற்றுக்கால் மண்டபம், வழிபாட்டு மரபின் சின்னமாக இல்லாமல், பல ஆண்டுகளாக அனுமதியின்றி இயங்கிய மழலையர் பள்ளியின் வகுப்பறையாக மாற்றப்பட்டிருந்தது கல்வித்துறையின் ஆய்வில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

போன ஆண்டு வரை சாரதா நகர் அருகே இயங்கி வந்ததாகக் கூறப்படும் “நரேந்திரா வித்யாலயா” மழலையர் பள்ளி, பள்ளிக்கல்வித்துறையின் அனுமதியின்றியும், பாதுகாப்பு ஆய்வுகள் இன்றியும், ஆயிரம் ஆண்டு பழமையான கோவில் நூற்றுக்கால் மண்டபத்திற்குள் மாற்றப்பட்டு நடத்தப்பட்டதாக புகார்கள் எழுந்தன.

“சுகாதாரம் இல்லை… பாதுகாப்பு இல்லை… அனுமதியும் இல்லை!”
பள்ளியில் பயிலும் யுகேஜி உள்ளிட்ட பிஞ்சு குழந்தைகளுக்கு அடிப்படை கழிப்பறை வசதி, சுகாதார வசதி, பாதுகாப்பு ஏற்பாடுகள் எதுவும் இல்லாததுடன், கட்டட உறுதிச்சான்று , தீயணைப்புத் துறையின் தடையில்லாச் சான்று போன்ற முக்கிய ஆவணங்களும் இல்லை என்ற கேள்விகள் எழுந்தன.

ஆயிரம் ஆண்டு பழமையான மண்டபத்தில் பள்ளி நடத்துவது பாதுகாப்பானதா? ஏதேனும் விபத்து ஏற்பட்டால் அதன் பொறுப்பை யார் ஏற்கப் போகிறார்கள்? என்ற கேள்விகளும் பொதுமக்கள் மத்தியில் வலுத்தன.

கல்வித்துறையின் அதிரடி ஆய்வு… அம்பலமான உண்மைகள்!
பிஞ்சுகள் படிப்பு… பெரியவர்கள் பிடிப்பு! – கல்வித்துறையின் அதிரடி ஆய்வில் அதிர்ச்சிகள் அம்பலம்!

பொதுமக்களின் புகாரைத் தொடர்ந்து, திருச்சிராப்பள்ளி மாவட்டக் கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) , ந.க.எண்.1017/அ4/2026, நாள் 22.07.2026 என்ற செயல்முறையின்படி நேரடி ஆய்வு மேற்கொண்டார்.அந்த ஆய்வில், 2009 முதல் விவேகானந்தா மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளி நிர்வாகத்தின் கீழ் இந்தப் பள்ளி செயல்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது.ஆனால் நேரடி பார்வையில், அரசு உதவி பெறும் விவேகானந்தா தொடக்கப் பள்ளி மாணவர்கள் கோவில் மண்டபத்தில் அமர வைக்கப்பட்டதுடன், நரேந்திரா பள்ளி மாணவர்கள் தொடக்கப் பள்ளி வகுப்பறைகளில் அமர வைக்கப்பட்டிருந்ததும் கண்டறியப்பட்டது.

2021 ஆவணங்கள்… 2026 பள்ளி!
21.07.2026 அன்று பள்ளி நிர்வாகம் சமர்ப்பித்த ஆவணங்கள் அனைத்தும் 2021 ஆம் ஆண்டோடு காலாவதியானவை என்றும், தற்போதைய செயல்பாட்டிற்கு பொருந்தாத ஆவணங்களே தாக்கல் செய்யப்பட்டிருந்தன என்றும் ஆய்வில் தெரியவந்தது.அனுமதி பெறப்படாத மழலையர் பள்ளியை பல ஆண்டுகளாக நடத்தி வந்ததும், அரசு மானியம் பெறும் தொடக்கப் பள்ளியின் நிர்வாகத்துடன் அது தொடர்புபடுத்தப்பட்டிருந்ததும், தனியார் பள்ளிகள் தொடர்பான விதிமுறைகளுக்கு முரணானதாக கல்வித்துறை குறிப்பிட்டுள்ளது.

மண்டபமா? மழலையர் பள்ளியா? – ஆயிரம் ஆண்டு கோவிலில் அனுமதியில்லா ஆட்டம்!

“உடனே மாணவர்களை மாற்றுங்கள்!” – கல்வித்துறையின் உத்தரவு
அனுமதி பெறாமல் இயங்கி வந்த பள்ளியில் பயிலும் மாணவர்களை உடனடியாக அருகிலுள்ள அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்குமாறு பள்ளி நிர்வாகத்திற்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
“அனுமதி இல்லாமல் நடத்துங்கள்… பிரச்சினை இல்லை!” – ஆசிரியர்கள் கூறும் பரபரப்பு குற்றச்சாட்டு

பள்ளி வளாகத்தில் பணிபுரியும் சில ஆசிரியர்கள் கூறுவதாவது:
“முன்னாள் தலைமை ஆசிரியர் ஏ.ஓ. திருநாவுக்கரசு, ‘அனுமதி இல்லாமல் பள்ளி நடத்தினாலும் பிரச்சினை இல்லை; நான் பார்த்துக்கொள்கிறேன். எங்கு யாரை எப்படி சரிகட்ட வேண்டும் என்று எனக்கு தெரியும். திருச்சி, கரூர் உள்ளிட்ட பல இடங்களிலும் இதேபோல் பள்ளிகள் நடத்தப்பட்டுள்ளன’ என்று கூறியதால் தான் நிர்வாகம் இதை நம்பி செயல்பட்டது” என ஆசிரியர்கள் புலம்புவதாக கூறப்படுகிறது. இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து சம்பந்தப்பட்டவர்களின் பதில் இதுவரை வெளியாகவில்லை.

பூட்டை உடைத்து… பள்ளியை நடத்தினார்களா?
மேலும், கோவிலின் நூற்றுக்கால் மண்டபத்தின் பூட்டை உடைத்து பள்ளி நடத்தப்பட்டதாகவும், கடந்த ஆறு ஆண்டுகளாக “நரேந்திரா வித்யாலயா” அங்கு இயங்கி வருவதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.

விவேகானந்தா தொடக்கப் பள்ளியின் அங்கீகாரமும் 2026 மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நிலையில், அந்த வளாகத்திலும், கோவில் மண்டபத்திலும் கல்வி நடவடிக்கைகள் தொடர்ந்தது எப்படி என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

நூற்றுக்கால் மண்டபத்தில் நடத்துவதற்கு அனுமதி இல்லை, அப்படி இருக்கையில் எங்கனம் நூற்றுக்கால் மண்டபத்தில் நடக்கிறது. ஏதாவது விபத்து நடந்தால் யார் பொறுப்பு ஏற்பார்கள். பள்ளி நிர்வாகம் முன்னாள் தலைமை ஆசிரியர் ஏஓ திருநாவுக்கரசு நம்பி மோசம் போவதாக ஆசிரியர்கள் புலம்புகின்றனர்

ஆசிரியர்களின் வேதனை
பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களும் தலைமை ஆசிரியரும், அனுமதியின்றி மழலையர் பள்ளி நடத்துவதில் தங்களுக்கு விருப்பமில்லை என்றும், பள்ளிக்காக பயன்படுத்தப்பட்ட பேருந்து முதல் சில கட்டிடங்கள் வரை ஆசிரியர்களின் சொந்த செலவில் உருவாக்கப்பட்டவை என்றும் கூறப்படுகின்றது.

பதில் சொல்ல வேண்டிய கேள்விகள்…
ஆயிரம் ஆண்டு பழமையான கோவில் மண்டபத்தில் பள்ளி நடத்த அனுமதி வழங்கியது யார்?
கட்டட உறுதிச்சான்று மற்றும் தீயணைப்புச் சான்று இல்லாமல் குழந்தைகள் எப்படி அனுமதிக்கப்பட்டனர்?
காலாவதியான ஆவணங்களை ஏற்று பள்ளி இயங்க அனுமதித்தது யார்?
குழந்தைகளின் பாதுகாப்புக்கு பொறுப்பு யார்?
தொல்லியல், இந்து சமய அறநிலையத்துறை, பள்ளிக்கல்வித்துறை ஆகியவை இதுகுறித்து என்ன நடவடிக்கை எடுக்க உள்ளன?

குழந்தைகளின் பாதுகாப்பும், கல்வித் தரமும், வரலாற்றுச் சின்னங்களின் பாதுகாப்பும் ஒருசேர உறுதி செய்யப்பட வேண்டிய சூழலில், இந்த விவகாரம் முழுமையான விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    வெற்றி! வெற்றி! திருப்பராய்த்துறை மக்கள் தொடர்பு முகாம் வெற்றி!அதிரடி அமைச்சர் ரமேஷ் – அள்ளிக் கொடுத்த நலத்திட்டம்!வாரிக் கொடுத்த வள்ளல்கள் – வழிகாட்டும் அதிகாரிகள் – திருப்பராய்த்துறையில் நலத்திட்ட அள்ளல்!பட்டா முதல் ஆண்ட்ராய்டு மொபைல் வரை 164 பேருக்கு ரூ.73.56 லட்சம் உதவிகள்

    திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறையில் தமிழக அரசு சார்பில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாம் திருவிழா போல் களைகட்டியது. ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் நடைபெற்ற இந்த முகாமில் 164 பயனாளிகளுக்கு ரூ.73 லட்சத்து 56 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட…

    84 ஆண்டுகால மர்மக் கோட்டை நொறுங்கியது! தபோவனத்தில் புகுந்த BDO அண்ணாதுரை… அநீதிக்கு முடிவு கட்டிய கிருஷ்ண அவதாரம்! வரி ஏய்ப்பு சாம்ராஜ்யத்திற்குப் பூட்டு… தமிழகத்தை அலறவிட்ட BDO-வின் தர்ம யுத்தம்!

    மகாபாரதத்தில் அஸ்தினாபுரத்து சிம்மாசனத்தில் அமர்ந்து கொண்டு, “ஊசி முனை நிலத்தைக் கூட பாண்டவர்களுக்குத் தர மாட்டேன்!” என்று துரியோதனன் பிடிவாதம் பிடித்தானே… அதே போன்ற ஒரு சாம்ராஜ்ய ஆணவமும், 84 ஆண்டு கால அநீதியும் திருச்சிராப்பள்ளி மண்ணில் சுக்குநூறாக உடைந்து நொறுங்கியிருக்கிறது!…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *