
அறம் வளர்க்கும் மடமா? மக்களின் வாழ்வை முடக்கும் தடமா? — மோதலில் அமைச்சர் ரமேஷ்!
“குட்டிப்புலி கர்ஜிக்கிறது… காட்டின் ராஜாவை வெல்லுமா? காலம்தான் தீர்ப்பு சொல்லும்!”
திருப்பராய்த்துறையில் அறநிலையத்துறைக்கு சொந்தமான வரலாற்றுச் சிறப்புமிக்க நூற்றுக்கால் மண்டபம், மர்மமாக ராமகிருஷ்ணன் தபோவனத்தின் கட்டுப்பாட்டுக்குள் சென்றதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு, தற்போது தமிழக அரசியலையே உலுக்கும் விவகாரமாக மாறியுள்ளது. அதிலும் கடந்த இரண்டு மாதங்களில், அந்த இடத்தில் “நரேந்திர வித்யாலயா” என்ற புதிய பள்ளி முளைத்திருப்பது, “ஆக்கிரமிப்பா? அதிகார அரவணைப்பா?” என்ற கேள்வியை இன்னும் கூர்மையாக்கியுள்ளது.
பொதுமக்கள், பக்தர்கள், சிவனடியார்கள் அளித்த புகாரின் பேரில், 06.07.2026 அன்று நேரடியாக கள ஆய்வு மேற்கொண்ட அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், பல அதிர்ச்சி தகவல்களை நேரில் அறிந்ததாக கூறப்படுகிறது.
மிரட்டலா? மௌனமா? அதிகாரிகளின் ஆதரவா?
திருப்பராய்த்துறை கோயில் செயல் அலுவலர் பிரபாகரிடம், சென்னை உயரதிகாரிகள் கல்யாணி மற்றும் ஜெயராமன் அழுத்தம் கொடுத்து, எந்த சட்டப்பூர்வ காரணமும் இல்லாமல் நூற்றுக்கால் மண்டபத்தை தபோவனத்திற்கு ஒப்படைக்க வைத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கோயில் சொத்து காக்க வேண்டியவர்களே, கோயில் சொத்தை கையளித்தார்களா? என்ற கேள்வி பக்தர்களின் மனதில் தீப்பிழம்பாக வெடித்துள்ளது.
ஏழைக்கு ரூ.1.32… அதிகார பலத்திற்கு 10 பைசா?
ஏழை மக்களிடம் ஒரு சதுர அடிக்கு ₹1.32 வரை வாடகை வசூலிக்கும் அறநிலையத்துறை, ராமகிருஷ்ண தபோவனத்திடம் ஒரு சதுர அடிக்கு 10 முதல் 20 பைசா மட்டுமே வசூலிப்பதாக கூறப்படுகிறது.
84 ஆண்டுகளாக செலுத்தப்படாத வாடகை பாக்கி மட்டும் சுமார் ₹10 கோடி என கூறப்பட்டாலும், இதுவரை யாரும் கேட்கவில்லை… வசூலிக்கவும் இல்லை… “சட்டம் சாமானியருக்கா? சக்திவான்களுக்கா?” என்ற கேள்வி எழுகிறது.
10 ஏக்கர் கோயில் நிலம்… 60 ஏக்கர் காடு… 25 ஏக்கர் காவிரி…!
கோயிலுக்குச் சொந்தமான 10 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலங்கள் பட்டா மாற்றப்பட்டதாகவும், பாதுகாக்கப்பட வேண்டிய 60 ஏக்கர் காட்டு நிலம், 25 ஏக்கருக்கும் மேற்பட்ட காவிரி ஆக்கிரமிப்பு, சுடுகாட்டு நிலம், தடை செய்யப்பட்ட ஆற்றுப்படுகையில் கட்டிடங்கள் என குற்றச்சாட்டுகள் அடுக்கடுக்காக குவிகின்றன.
காவிரிக்கே தனிக்கரை அமைத்தவர்கள்… சட்டத்திற்கே தனிவழி அமைத்துவிட்டார்களா? என மக்கள் கேட்கின்றனர். ஒன்றரை கோடி வருமானம்… ஆனால் வசூல் வெறும் ₹40,000!
ராமகிருஷ்ண தபோவனத்திடம் உள்ள திருப்பராய்த்துறையின் பிரதான இடங்களிலும், திருச்சி கரூர் தேசிய நெடுஞ்சாலை ஓரங்களிலும் உள்ள கோயில் சொத்துகளுக்கு சந்தை மதிப்பில் வாடகை வசூலித்தால், ஆண்டுக்கு ஒன்றரை கோடி ரூபாய்க்கும் மேல் வருமானம் கிடைக்கும் என கூறப்படுகிறது. ஆனால் தற்போது வசூலாகிறது ஆண்டுக்கு வெறும் ₹40,000!கோயிலுக்கு இழப்பு… யாருக்கு லாபம்? என்ற கேள்விக்கு இதுவரை பதில் இல்லை.
அவர்களுக்கு எல்லா வசதியும்… நந்தவன மக்களுக்கு அடிப்படை வசதியும் இல்லை!
ஒரே வளாகத்தில் பல மின்சார இணைப்புகள், அனைத்து வசதிகளும் தபோவனத்திற்கு கிடைக்கின்றன.ஆனால் அதே கோயில் நிலத்தில் வசிக்கும் நந்தவன மக்கள், 16 ஆண்டுகளாக மின்சாரம், குடிநீர், அடிப்படை வசதிகள் இன்றி வாழ்ந்து வருவதாக வேதனை தெரிவிக்கின்றனர். பலசாலிக்கு பரிசு… பலவீனருக்கு பரிதாபமா?
தேசிய நெடுஞ்சாலையையே வளைத்த சக்தி?
திருச்சி–கரூர் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத்தில், பொதுமக்களின் வீடுகள் இடிக்கப்பட்டபோதும், தபோவனத்தின் ஒரு செங்கல்கூட அசையவில்லை என்ற குற்றச்சாட்டு மீண்டும் பேசுபொருளாகியுள்ளது. சாலை தபோவனத்தைத் தவிர்த்ததா? அல்லது சட்டமே தலைகுனிந்ததா? என்று மக்கள் கேட்கின்றனர்.
மோடியின் நம்பிக்கையா? ரமேஷின் சவாலா?
பிரதமர் நரேந்திர மோடி ராமேஸ்வரம் வருகையின்போது தங்கும் அளவுக்கு செல்வாக்கு கொண்டதாகக் கூறப்படும் இந்த அமைப்பை எதிர்கொள்வது, அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷுக்கு மிகப்பெரிய அரசியல் மற்றும் நிர்வாக சவாலாக பார்க்கப்படுகிறது. “தனி அரசாங்கமாக செயல்படுகிறது” என்ற விமர்சனத்திற்குள்ளான இந்த சக்திவாய்ந்த அமைப்பிடம், அமைச்சர் ரமேஷ் சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டுவாரா?
குட்டிப்புலி கர்ஜிக்கிறது… கோயில் சொத்துக்கள் மீட்கப்படுமா?
அதற்கான பதிலை எதிர்பார்த்து, திருப்பராய்த்துறை மக்கள், பக்தர்கள், சிவனடியார்கள் அனைவரும் சிவபெருமானை பிரார்த்திக்கின்றனர். காலம் பதில் சொல்லும்… நீதியே இறுதி தீர்ப்பு வழங்கும்!






