
மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து களமிறங்கிய தன்னார்வலர்கள் – பக்தர்கள் வரவேற்பு
திருச்சி, நவ. 25:
ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோவிலின் பாரம்பரியத்துடனும், ஆன்மிகச் சிறப்புடனும் தொடர்புடைய திருமஞ்சன காவேரி நீர்வழித்தடத்தை மீட்டெடுக்கும் வகையில், தூர்வாரி தூய்மைப்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

திருச்சி மாவட்ட நிர்வாகம், திருச்சி மாநகராட்சி நிர்வாகம், பக்தர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து இந்தப் பணியை முன்னெடுத்துள்ளனர்.
திருச்சி முக்கொம்பு மேலணைக்கு அடுத்த கரைப்பகுதியில் இருந்து பிரிந்து, ஸ்ரீரங்கம் மற்றும் திருவானைக்காவல் வழியாகச் செல்லும் இந்த நீர்வழித்தடம், ஒரு காலத்தில் ஸ்ரீரங்கம் கோவிலின் ஆன்மிகப் பணிகளுக்கும், சுற்றுவட்டாரப் பகுதிகளின் விவசாயத்திற்கும் முக்கிய ஆதாரமாக விளங்கி வந்தது.

காவிரி ஆற்றிலிருந்து யானை மீது தங்கக் குடத்தில் புனித நீர் எடுத்து வரப்பட்டு, அரங்கநாதப் பெருமாளுக்கு விசேஷ திருமஞ்சனம் மற்றும் அபிஷேகம் நடைபெறுவது ஸ்ரீரங்கம் கோவிலின் தனிச்சிறப்பாகும்.
மேலும், பெருமாளின் தினசரி அபிஷேகப் பணிகளுக்கும், ராமர் தீர்த்தத் தெப்பக்குளத்திற்கு நீர் நிரப்புவதற்கும், சுற்றுவட்டார விளைநிலங்களின் பாசனத்திற்கும், நிலத்தடி நீர்மட்டத்தைப் பாதுகாப்பதற்கும் திருமஞ்சன காவேரி நீரோடை முக்கியப் பங்காற்றி வந்தது.
கழிவுநீர் கலப்பால் பாதிப்பு
காலப்போக்கில் ஏற்பட்ட நகரமயமாக்கல் மற்றும் கழிவுநீர் மேலாண்மை தொடர்பான பிரச்சினைகளால் காவிரி, கொள்ளிடம் மற்றும் திருமஞ்சன காவேரி நீர்வழித்தடங்களில் கழிவுநீர் கலக்கும் நிலை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், ஒரு காலத்தில் கோவிலின் புனிதத் திருமஞ்சனத்திற்குப் பயன்படுத்தப்பட்ட நீரின் தூய்மை பாதிக்கப்பட்டு, அதன் பயன்பாடு குறைந்தது.
மீண்டும் பழைய பொலிவைப் பெற நடவடிக்கை
இந்நிலையில், திருமஞ்சன காவேரியின் பாரம்பரியச் சிறப்பையும், நீர்வழித்தடத்தின் இயற்கையான தன்மையையும் மீட்டெடுக்கும் நோக்கில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகத்தின் ஒத்துழைப்புடன் சீரமைப்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதன் முதற்கட்டமாக ஸ்ரீரங்கம் படித்துறைப் பகுதியில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. தொடர்ந்து பாரம்பரிய முறைப்படி விளக்கேற்றி வழிபாடு நடத்தப்பட்ட பின்னர், நீர்வழித்தடத்தைத் தூர்வாருதல் மற்றும் பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகளை அகற்றும் பணிகள் தொடங்கப்பட்டன.
இந்த முயற்சியில் சென்னை ஐ.ஐ.டி.எம். பிரவர்த்தக் உள்ளிட்ட அமைப்புகளும், பக்தர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களும் இணைந்துள்ளனர்.
அரசு நிர்வாகமும் தன்னார்வலர்களும் ஒன்றிணைந்து மேற்கொண்டுள்ள இந்த முயற்சிக்கு ஸ்ரீரங்கம் பகுதி பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது.
ஸ்ரீரங்கத்தின் ஆன்மிக அடையாளங்களில் ஒன்றாகத் திகழும் திருமஞ்சன காவேரியை மீட்டெடுப்பதுடன், எதிர்காலத்தில் கழிவுநீர் கலப்பதைத் தடுத்து, நீர்வழித்தடத்தை நிரந்தரமாகப் பாதுகாக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதே பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.





