ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் கருத்தரிப்பு சிகிச்சை – மருத்துவமனை முதல்வர் டாக்டர் கோவிந்தராஜ் தகவல்

திருச்சி, நவ. 25:
திருச்சி மாம்பழச்சாலையில் உள்ள டாக்டர் ஜி. விஸ்வநாதன் சிறப்பு மருத்துவமனையில், ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் குழந்தையின்மை மற்றும் கருத்தரிப்பு சிகிச்சை வழங்கும் வகையில் புதிதாக ‘ஐரா’ (AIRA IVF and Women Centre) மகளிர் நலம், மகப்பேறு மற்றும் கருத்தரிப்பு சிறப்பு சிகிச்சை மையம் தொடங்கப்பட்டுள்ளது.
1939-ம் ஆண்டு திருச்சியில் தொடங்கப்பட்ட டாக்டர் ஜி. விஸ்வநாதன் மருத்துவமனை, பொதுமக்களுக்கு குறைந்த செலவில் தரமான மருத்துவ சேவைகளை வழங்கி வருகிறது. புற்றுநோய் சிகிச்சை, எலும்பு மூட்டு அறுவை சிகிச்சை, மகப்பேறு உள்ளிட்ட பல்வேறு மருத்துவப் பிரிவுகளில் சிகிச்சை அளித்து வரும் இந்த மருத்துவமனையின் புதிய முயற்சியாக குழந்தையின்மை சிறப்பு சிகிச்சை மையம் தொடங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மருத்துவமனையின் முதல்வர் டாக்டர் கோவிந்தராஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
தற்போதைய காலகட்டத்தில் குழந்தையின்மை சிகிச்சைக்காக தம்பதியினர் லட்சக்கணக்கில் செலவு செய்ய வேண்டிய சூழல் உள்ளது. இதனால் ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் பொருளாதார ரீதியாக பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

குழந்தையின்மை சிகிச்சை அனைவருக்கும் எளிதில் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில், முறையான பதிவு மற்றும் தேவையான மருத்துவச் சான்றுகளுடன் ‘ஐரா’ சிறப்பு சிகிச்சை மையம் தொடங்கப்பட்டுள்ளது. குறைந்த கட்டணத்தில் நிறைவான மருத்துவ சேவை வழங்குவதே இதன் முக்கிய நோக்கமாகும் என்றார்.
இயற்கையான கருத்தரிப்புக்கு முன்னுரிமை
தொடர்ந்து குழந்தையின்மை மற்றும் கருத்தரிப்பு சிறப்பு சிகிச்சை நிபுணர் டாக்டர் சித்தாரா கூறியதாவது:-
குழந்தையின்மை சிகிச்சைக்காக வரும் தம்பதியினருக்கு முதலில் முழுமையான மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். அதன் அடிப்படையில் இயற்கையான முறையில் கருத்தரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதா என்பது ஆய்வு செய்யப்படும்.

தேவையான மருத்துவ ஆலோசனைகள் மற்றும் சிகிச்சைகள் வழங்கப்பட்ட பின்னரும் கருத்தரிப்பதில் பிரச்சினைகள் இருந்தால், செயற்கை கருத்தரிப்பு முதல் டெஸ்ட் டியூப் பேபி வரையிலான நவீன சிகிச்சை முறைகள் மேற்கொள்ளப்படும்.
இந்த மையத்தில் மகளிர் நல மருத்துவ சேவைகள், மகப்பேறு சிகிச்சைகள், நவீன கருத்தரிப்பு சிகிச்சைகள், கருமுட்டை வளர்ச்சியைத் தூண்டும் சிகிச்சைகள், செயற்கை கருத்தரிப்பு மற்றும் விந்தணுவை நேரடியாக கருமுட்டைக்குள் செலுத்தும் சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு சேவைகள் வழங்கப்பட உள்ளன.

குழந்தையின்மை பிரச்சினையால் பாதிக்கப்படும் தம்பதியினர் அதிக செலவின்றி உரிய மருத்துவ ஆலோசனையும், தேவையான சிகிச்சையும் பெற வேண்டும் என்பதே எங்களது நோக்கம் என்றார்.
இந்த மையத்தில் மகப்பேறு மற்றும் குழந்தையின்மை சிறப்பு சிகிச்சை நிபுணர் டாக்டர் சித்தாரா மற்றும் சிறப்பு சிகிச்சை நிபுணர் டாக்டர் புவனேஸ்வரி உள்ளிட்ட மருத்துவர்கள் சிகிச்சை அளிக்க உள்ளனர்.
திருச்சியில் குறைந்த கட்டணத்தில் குழந்தையின்மை சிறப்பு சிகிச்சை மையம் தொடங்கப்பட்டிருப்பது, குழந்தை பாக்கியத்திற்காக சிகிச்சை பெற விரும்பும் ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களுக்கு பயனுள்ளதாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.





