
திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் ஆலயத்திற்கு செல்லும் பிரதான கோபுர வாசலானது மிக குறுகியதாக உள்ள காரணத்தினால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்களும் பக்தர்களும் அவதியரும் நிலை தொடர்ந்து உள்ளது இந்த நிலையில் ஒரு சமூக ஆர்வலர் இந்த போக்குவரத்து நெரிசலில் இருந்து நகரை காப்பதற்கான ஒரு உபாயத்தை வழங்கியுள்ளார்.
அரசு அதிகாரிகளும் தமிழக அரசும் இந்த சமூக ஆர்வலரின் ஆலோசனையை ஏற்று விரைவில் திருவானைக்காவல் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கு ஆவண செய்ய வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கை ஆகும்.
திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோயில் மேலவிபூதிபிரகாரத்தில், தென்சரகில், வீரபத்திரசுவாமி கோயில் எதிரில் மதில் சுவரில் இது போன்ற ஒரு வழி ஏற்படுத்தினால், இந்த புதியவழி, கோயிலின் மேம்பாட்டுக்கு பெரிதும் உதவும் என்பதோடு, மேற்கு ராஜகோபுரத்தில் அவ்வப்போது ஏற்படும் கடும் போக்குவரத்து நெரிசலுக்கும் பெரும் தீர்வாக இருக்கும் என்பது சமூக ஆர்வலர்களின் கருத்து. ‘‘ஒரு சிலரின்’’ பிடிவாதத்தில் இந்த திட்டம் நிறைவேறாமல் உள்ளது. இந்த திட்டத்தை நிறைவேற்ற திருவானைக்காவல் பொதுமக்கள் சேர்ந்து குரல் கொடுத்து உரிய வழி ஏற்படுத்தலாம் என்பது பொதுவான கருத்து.
கோயில் மதில் சுவரை சேதப்படுத்தக்கூடாது என்ற வாதம் பழமையானது, நமது ஊருக்கு அடுத்துள்ள ஸ்ரீரங்கத்தில் 1950ம் ஆண்டுகளில் அப்போதைய ஸ்ரீரங்கம் நகராட்சி சேர்மனாக இருந்த வாசுதேவ அய்யங்காரின் முயற்சியால்தான், நான்கு சித்திரைவீதிகளிலும் வடம்போக்கித் தெருக்களில் வழிகள் ஏற்படுத்தப்பட்டன. தேவி தியேட்டரிலிருந்து பூச்சந்தை செல்லும் பாதை, திருவள்ளுவர்வீதியிலிருந்து மூலத்தோப்பு செல்லும் பாதை போன்றவை மதில் சுவரை ஊடுறுவித்தான் செல்கின்றன என்பதை மறுப்பதிற்கில்லை. அன்று அவர் இதை அவர் செய்யாது விட்டிருந்தால், இன்று ஸ்ரீரங்கம் இந்த அளவிற்கு வளர்ச்சி அடைந்திருக்கமுடியாது என்பது நிதர்சனமான உண்மை. ஸ்ரீரங்கத்தின் வளர்ச்சியோடு ஒப்பிடுகையில் திருவானைக்காவல் வளர்ச்சி சற்றே பின்தங்கியிருக்கிறது என்பதை ஊரறியும். எனவே இந்த கருத்தை நம்மவர்கள் ஏற்று ஒற்றுமையாகக் குரல் கொடுத்து புதிய வழி ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்பதே வெகுஜன விருப்பம்.