
திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் வருகின்ற டிசம்பர் 30ம் தேதி திருநெடுதாண்டகத்துடன் வைகுண்ட ஏகாதசி திருவிழா தொடங்கி ஜனவரி 20 ம் தேதி வரை நடைபெற உள்ளது.
பகல் பத்து உற்சவம் 31ஆம் தேதி முதல் தொடங்கி ஜனவரி 9ஆம் தேதி வரையிலும் ஜனவரி 10ஆம் தேதி ராப்பத்து முதல் திருநாள் வைகுண்ட ஏகாதசி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பரமபத வாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறப்பு
நிகழ்வு அதிகாலை 5.00 மணிக்கு நடைபெற உள்ளது.

அன்றைய தினம் முதல் ஜனவரி 20ம் தேதி வரை இராப்பத்து உற்சவம் நடைபெற உள்ளது.
வைகுண்ட ஏகாதசி திருவிழாவில் கலந்து கொள்வதற்காக தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பொதுமக்கள் வருகை தருவார்கள்.
இந்நிலையில் வைகுண்ட ஏகாதசி திருவிழாவிற்கு செய்யப்பட்டு இருக்கும் ஏற்பாடுகள் குறித்து திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், மாநகர காவல் ஆணையர் காமினி, மாநகராட்சி ஆணையர் சரவணன் ஆகியோர் கோவில் இணை ஆணையர் மாரியப்பனிடம் கேட்டறிந்தனர்.
மேலும் கோவில் வளாகம் முழுவதும் செய்யப்பட்டிருக்கும் ஏற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது:-

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோவிலில் நடைபெறவிருக்கும் வைகுண்ட ஏகாதசி திருவிழாவை முன்னிட்டு பக்தர்களின் பாதுகாப்புக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் கோவில் நிர்வாகம், மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை சார்பில் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது,
வைகுண்ட ஏகாதசியில் பக்தர்கள் பங்கு பெற ஆன்லைன் மூலமாக அல்லது நேரடியாக அனுமதி சீட்டு வழங்குவது குறித்து விரைவில் அறிவிக்கப்படும்.
வைகுண்ட ஏகாதசி உற்சவ நாட்களில் ஒரு லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
சொர்க்கவாசல் திறப்பு நிகழ்வுக்கு கலர் மற்றும் க்யூ ஆர் கோட் முறையில் அனுமதி சீட்டு வழங்குவதற்கு தொடர்பாக ஆலோசனை செய்து விரைவில் அறிவிக்கப்படும் என்றார்.
பக்தர்களின் பாதுகாப்பு நலன் கருதி காவல்துறையினர் எண்ணிக்கை அதற்கு ஏற்றார் போல் வழங்கப்படும் எனவும் கூறியுள்ளார்.
