
சுகாதார பட்டியலில், இந்திய அளவில் இரண்டாவது இடத்தில் இருந்த திருச்சி, 112 வது இடத்திற்கு சென்றதன் காரணம்?“
புரட்சித்தலைவி அம்மாவின் ஆட்சியில், 2015-ம் ஆண்டு தூய்மை பட்டியலில், அகில இந்திய அளவில், திருச்சி மாநகராட்சி இரண்டாவது இடத்தை பிடித்தது. (ஸ்வச் பாரத் – கர்நாடகாவின் மைசூர் முதலிடம்).
அன்று திருச்சி மாநகராட்சியின் சுகாதார பணிகளில், எந்த தனியார் நிறுவனமும் ஈடுபடவில்லை.
நமது மண்ணின் மைந்தர்கள் முழு அக்கறையுடன் பணியாற்றி, அகில இந்திய அளவில் திருச்சிக்கு இரண்டாவது இடம் கிடைக்க செய்து, நமக்கெல்லாம் பெருமை சேர்த்தனர்.
ஆனால் சுகாதார தரத்தில், திருச்சி மாநகராட்சியின் தற்போதைய நிலை என்ன?
கடந்த 2023-ம் ஆண்டு தூய்மை பட்டியலில், திருச்சிக்கு 112 வது இடம்.
(https://timesofindia.indiatimes.com/city/trichy/trichy-states-cleanest-city-swachh-survekshan-2023/articleshow/106745626.cms)
சில ஆண்டுகள் முன்பு வரை, திருச்சியை சார்ந்த குழுக்களே இப்பணிகளை, திறம்பட நிர்வாகித்து வந்த பொழுது,
ஆளும் திமுக அரசின் எண்ணத்திற்கு ஏற்ப, கூட்டணிக் கட்சிகளின் (சில பொது உடைமை இயக்கங்கள்) தயவுடன், இப்பணிகளை தனியார் நிறுவனத்திற்கு தாரை வார்த்த காரணம் என்ன?
அதுவும், கிட்டத்தட்ட நூறு சதவீதம் திருச்சியின் மண்ணின் மைந்தர்களே பணியாற்றுகின்ற பொழுது வெளியூர் நிறுவனத்திற்கு இவ் ஒப்பந்தத்தை அளித்ததன் நோக்கம் என்ன?
சுகாதாரப் பணிகளை தனியாருக்கு தாரை வார்க்க “எந்த காரணமாக” இருந்தாலும் சரி, அதன் தற்போதைய நிலை என்ன?
பல வார்டுகளிலும், மழை நீர் வடிகால்களில் தேங்கியுள்ள பாலித்தீன் பைகள் உட்பட்ட குப்பைகள் நாள்தோறும் அகற்றப்படாததால், மழைநீர் வடிகால்கள் எல்லாம் கொசுக்கள் உற்பத்தி செய்யும் சாக்கடைகளாகவே உருமாறி இருக்கிறது.
இதுபோல், திருச்சி மாநகராட்சியின் முக்கிய பகுதிகளில் உள்ள சாலைகள் எல்லாம், சானங்களாலும், குப்பைகளாலும் நிறைந்துள்ளது.
முன்பெல்லாம் திருச்சி மாநகராட்சியே நேரடியாக இப்பணிகளை நிர்வகித்தி வந்த பொழுது, ஒவ்வொரு வார்டிலும் மக்களுக்கு நன்கு அறிந்த, பழக்கப்பட்ட ஒரு மேஸ்திரி இருப்பார். எந்த பிரச்சினையாக இருந்தாலும் மக்கள் அவரையே நாடுவர்.
அவரும் அந்த வாட்டிலுள்ள குடும்பங்களில் ஒருவராக பழகி, எப்பாடுபட்டாவது பணிகளை முடித்து தருவார். அந்த அன்னியோன்னியம் இன்று தனியார் நிறுவனங்களால் உடைபட்டு, மேஸ்திரிகளுக்கு இருந்த அதிகாரங்கள் குறைக்கப்பட்டதால், எந்தப் பணிகளுக்கு யாரை தொடர்பு கொள்வது என்று மக்களுக்கு பெரும் குழப்பம் உண்டாகியுள்ளது.
தனியார் நிறுவன அதிகாரிகளை தொடர்பு கொண்டால், சரிவர பதில் கிடைப்பதில்லை. ஒவ்வொருவரும் தங்களுக்கும் இதற்கும் பொறுப்பில்லை என்று தங்களது உயர் அதிகாரிகளை கை காட்டுகிறார்கள்.
நாள்தோறும் வேலைக்கு செல்லும் பொதுமக்கள், அத்தனை அதிகாரிகளையும் தொடர்பு கொள்வதென்பதும், இவர்களை தொடர்ந்து பின்பற்றி, தங்கள் பகுதிகளில் உள்ள அவலங்களை எடுத்துரைப்பது என்பதும் சாத்தியம் இல்லை.
இதனால் தனியார் நிறுவனங்கள் சுகாதாரப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்ட பிறகு, பல பணிகளும் தேங்கி நிற்கின்றன. கிட்டத்தட்ட அனைத்து வார்டுகளிலும் இதே நிலைதான்.
நிலப்பரப்பில் அனைத்து வார்டுகளும் ஒன்று போல் இருப்பதில்லை. சில வார்டுகள் சிறியதாகவும் மக்கள் தொகை அடர்த்தியாகவும் இருக்கும். சில வார்டுகள் நிலப்பரப்பில் விரிந்தும், அரசு அலுவலகங்கள் அமைந்ததாகவும் இருக்கும். இவையெல்லாம் ஏற்கனவே அங்கு பல வருடங்களாக வாழ்ந்து, பணிபுரிந்து அனுபவமானவர்களுக்கே புலப்படும்.
ஆனால் வார்டு/பணியாளர்கள் எண்ணிக்கையை வைத்து பணியாளர்களை சரி சமமாக பிரித்ததால், நடைமுறை சிக்கல்கள் ஏற்படுகிறது.
திருச்சி வாழ் மக்கள் தற்பொழுதைய, திறனற்ற நிர்வாகத்தை உணர்ந்து, பல இடங்களிலும், அந்தந்த பகுதிக்குற்பட்ட பிரச்சினைகளை மையமாக வைத்து போராடத் துவங்கியுள்ளனர்.
துப்புரவு பணியாளர்களுமே, தங்களுக்கு நியாயமாக கிடைக்கக்கூடிய போனஸ் உட்பட்ட சலுகைகளை கூட போராடித்தான் பெறுகிறார்கள்.
இதே போல, “நமது காவிரி அன்னை”, தமது திருச்சி மக்களுக்கு, இயற்கையாக தரும் குடிநீரை, நிர்வகிக்கும் பொறுப்பை வெளி மாவட்டத்தைச் சேர்ந்த தனியார் நிறுவனத்திற்கு கொடுத்தது எந்த விதத்தில் பொதுமக்களுக்கோ ஊழியர்களுக்கோ பயன் என்று தெரியவில்லை.
இப்படியாக வரி செலுத்தும் திருச்சி மக்களுக்கும், உடல் உழைப்பை கொடுக்கும் இம்மண்ணின் மைந்தர்களான பணியாளர்களுக்கும் நியாயம் சேர்க்காத,
மக்களின் வரிப்பணத்திலும், பணியாளர்களுக்கு செல்ல வேண்டிய சம்பளத்திலும், “லாபம் ஒன்றே இலக்கு” என்று குறிக்கோள்களுடன் இயங்கி வரும் தனியார் நிறுவனங்கள், இனி மேலும் நமக்கு தேவைதானா என்று திருச்சி மாநகராட்சி சீர்தூக்கி பார்க்கவேண்டிய கட்டாய, அவசர நிலை உள்ளது.
ஏற்கனவே உயர்த்தப்பட்ட சொத்து வரி, வீட்டு வரி, தரமற்ற சாலைகள் என்று சக்கையாக பிழியப்பட்டு இருக்கும் திருச்சி மாநகராட்சி மக்களை மேலும் வதைக்கும் விதமாக சுகாதார சீர்கேடுகள் அரங்கேற துவங்கியுள்ளது.
எனவே திருச்சி மாநகராட்சி, போர்க்கால அடிப்படையில் இப்ப பிரச்சனைகளை கலைந்து, மழைநீர் வடிகால்கள் செல்லும் வழியில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றக்கோரி அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.
இதே துர்பாக்கிய நிலை தொடருமானால், கழகப் பொதுச் செயலாளர், வருங்கால முதல்வர், மக்கள் செல்வர் அவர்களின் ஆணையுடன், திருச்சி மக்களின் ஆதரவுடன், கவன ஈர்ப்பு போராட்டங்கள் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
இப்படிக்கு,
ப. செந்தில்நாதன் BE, MBA(UK), Ex MC,
திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர்.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்.