
திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் உடனுறை அகிலாண்டேசுவரி திருக்கோயிலில் பங்குனி மண்டல பிரமோற்சவ விழாவின் முக்கிய வைபவமான பங்குனி திருத்தேரோட்டம் இன்று(மார்ச் 30-ஆம் தேதி) காலை 7.30 மணியளவில் தொடங்கியது.பஞ்சபூத தலங்களில் நீர் தலமாக விளங்குவது திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவில். திருவானைக்காவல் கோயிலில் பங்குனி மண்டல பிரமோற்ஸவ விழா வெகு விமா்சையாக 48 நாள்கள் நடைபெறுவது வழக்கம். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனி தேரோட்டத்திற்கான எட்டுத்திக்கு கொடியேற்றம் கடந்த 18 ஆம் தேதி நடைபெற்றது. அன்று முதல் தினமும் சுவாமி, அம்மன் காலையில் புறப்பாடு கண்டருளியும், மாலையில் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்தும் பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.இந்தநிலையில், முன்னதாக அதிகாலை சுவாமி, அம்மனுக்கு உற்சவர் மண்டபத்தில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மகர லக்னத்தில் உற்சவர்கள் ஜம்புகேஸ்வரர் பெரிய தேரிலும், அகிலாண்டேஸ்வரி அம்மன் மற்றொரு தேரிலும் எழுந்தருளினர்.

தொடர்ந்து காலை 7.10 மணிக்கு ஜம்புகேஸ்வரர் சுவாமி தேரை பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர். மேல உள்வீதி, வடக்கு உள்வீதி, கீழ உள்வீதி, தெற்கு உள்வீதி ஆகிய பகுதிகளில் தேர் சுற்றி வந்து காலை 10.30 மணிக்கு நிலை நிறுத்தப்பட உள்ளது. அதனை தொடர்ந்து காலை 10.30 மணிக்கு மேல் அகிலாண்டேஸ்வரி அம்மன் தேர் வடம் பிடித்து இழுக்கப்பட உள்ளது.தேரோட்டத் திருவிழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று தேர்களை வடம்பிடித்து இழுத்து திருவிழாவை சிறப்பித்து வருகின்றனர். இதனால் அப்பகுதி விழாக்கோலம் பூண்டுள்ளது.தேர்த்திருவிழாவை முன்னிட்டு கோவில் நிர்வாகம் மற்றும் மாநகராட்சி சார்பில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மாநகர போலீஸ் சார்பில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.