
மருங்காபுரி ஜமீன்தாரிணி எழுதிய
திருக்குறள் தீபாலங்காரம் நூலின் நூற்றாண்டு விழாவினை தமிழ்ப்பல்கலைக் கழகம் கொண்டாடும்
முனைவர் இரா.குறிஞ்சிவேந்தன் உறுதி

மணப்பாறை பழந்தமிழ்க் காவிரி அறக்கட்டளை யானது மருங்காபுரி அருகில் உள்ள முடுக்குப்பட்டி குறளாலயம் வளாகத்தில், 1928- இல் “திருக்குறள் தீபாலங்காரம்” என்னும் நூல் எழுதி வள்ளுவத்திற்குப் பெருமை சேர்த்த மருங்காபுரி ஜமீன்தாரிணி கி.சு.வி.இலட்சுமி அம்மணி அவர்களின் திருப்புகழ் இல்லம் திறப்பு விழா, பொங்கல் விழா, திருவள்ளுவர் நாள் விழா மற்றும் தமிழ்ச் சான்றோர்க்கு விருது வழங்கும் விழா ஆகிய நாற்பெரும் விழாவினை ஞாயிற்றுக்கிழமை, குறளாலயம் தமிழ்த்திருப்பணிக் குழுவின் தலைவர் டாக்டர் பெ.கலையரசன் தலைமையில் நடந்தது.


திருப்புகழ் இல்லம் திறந்து வைத்து திருக்கயிலாயப் பரம்பரை வேளாக்குறிச்சி ஆதீனம் 18-ஆவது குருமகா சந்நிதானம் திருப்பெருந்திரு சத்தியஞான மகாதேவ தேசிக பரமாச்சாரியார் சாமிகள் பேசியது.

திருக்குறளுக்கு தெளிவுரை எழுதிய முதல் பெண்பாற் புலவர் மருங்காபுரி ஜமீன்தாரிணி கி.சு.வி.இலட்சுமி அம்மணி அவர்கள் பெரிதும் போற்றப்பட வேண்டியவர். அவரது நினைவைப் போற்றும் விதமாக பழந்தமிழ்க் காவிரி அறக்கட்டளை குறளாலயம் கட்டி வருவதும், அதன் துவக்கமாக அம்மையார் பெயரில் திருப்புகழ் இல்லம் கட்டி இன்று நாம் திறந்து வைத்திருப்பதும் காலக் கல்வெட்டாகும்.

அனைத்து சமயங்களும் அன்பை போதிக்கின்றன. எந்த சமயமும் வேற்றுமையை விதைப்பதில்லை. நாம் அனைவரும் மனிதநேயத்தை விதைக்க வேண்டும். சைவமும்-தமிழும் தழைத்தோங்க வேண்டும் என்பதே பதினெட்டு சைவ ஆதீனங்களின் பெரும் பணியாகும்.
நமது வேளாக்குறிச்சி ஆதீனமும் திருக்குறள் உள்ளிட்ட பல தமிழ் நூல்களை ஆய்ந்து அறிந்த ஆதீனப் புலவர்களால் வெளியிட்டிருக்கிறோம். அப்பர் பெருமான் உழவாரப் பணி செய்த திருப்புகலூர் அக்னீஸவரர் திருக்கோயிலில், அப்பர் இறைவனோடு ஐக்கியமான நாளில் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்துடன் இணைந்து தமிழறிஞர்களுக்கு விருது வழங்கி பாராட்டி இருக்கின்றோம். வரும் ஆண்டுகளில் நமது ஆதீனம் அதை மீண்டும் நடைமுறைப்படுத்திட முயன்று வருகின்றோம்.
இயற்கை எழில் சூழ்ந்த இப்பகுதியில், மலை அடிவாரத்தில் குறளாலயம் எழுப்புகின்ற பழந்தமிழ்க் காவிரி அறக்கட்டளை முன்னெடுப்பிற்கு எம்மையும் உயர்நிலை வழிகாட்டுதல் குழுவிற்கு மதிப்பியல் தலைவராக தேர்வு செய்தனர். ஆகவே, குறளாலயம் தமிழ்த்திருப்பணி விரைந்து நிறைவுற்று திறப்பு விழா காண வேளாக்குறிச்சி ஆதீனம் இணைந்து பயணிக்கும் என்றார்.
விழாவில் வேளாக்குறிச்சி ஆதீனம் அவர்களால் அறப்பணித் திலகம் விருதினைப் பெற்ற தஞ்சைத் தமிழ்ப்பல்கலைக் கழகத்தின் வளர்தமிழ்ப்புலம் தலைவர் முனைவர் இரா.குறிஞ்சிவேந்தன் பேசியது.
1928- இல் திருக்குறள் தீபாலங்காரம் என்னும் நூல் எழுதி வள்ளுவத்திற்குப் பெருமை சேர்த்துள்ளார் மருங்காபுரி ஜமீன்தாரிணி அம்மையார் கி.சு.வி.இலட்சுமி அம்மணி.
திரு.வி.க. அவர்களின் சாது அச்சுக்கூடத்தில் இந்நூல் 2028- ஆம் ஆண்டு அச்சிட்டு, 2029- ஆம் ஆண்டு வெளியிட்டுள்ளனர்.
பழம் பெருமை வாய்ந்த திருக்குறள் தீபாலங்காரம் என்னும் நூலுக்கு, அக்காலத்தில் புகழ் பெற்ற தமிழறிஞர்கள் அணிந்துரை தந்துள்ளனர்.
ஆகவே, அம்மையார் எழுதிய இந்த நூலுக்கு 2028- ஆம் ஆண்டு நூற்றாண்டு வருகிறது. இந்த நூற்றாண்டு துவக்க விழாவினை தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைக் கழகத்தின் அயலகக் கல்வித்துறையும், பழந்தமிழ்க் காவிரி அறக்கட்டளையும் இணைந்து உலகம் தழுவிய தமிழறிஞர்களை வரவழைத்து கருத்தரங்கம், ஆய்வரங்கம் நடத்துவோம். இந்த அரிய நூலை மருங்காபுரி ஜமீன் ஒப்புதலுடன் மறுபதிப்பு செய்து மாணவர்களிடம் ஒப்படைப்போம்.
மேலும், பழந்தமிழ்க் காவிரி அறக்கட்டளை முன்னெடுப்பில் கட்டப்பட்டு வரும் குறளாலயத்தில் திருவள்ளுவர் சிலையுடன் 28 தமிழ் ஆளுமைகளுக்கும் இங்கு சிலை நிறுவப்பட உள்ளது. டாக்டர் பெ.கலையரசன் அவர்களது முயற்சியில் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டு, குறளாலயம் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது. இன்று புரவலர் பெருமக்கள் மணிவண்ணன், இராமநாதன் முயற்சியில் கண்ணகி அம்மன், வள்ளலார் சிலைகள் வந்துவிட்டது. என் பொறுப்பில் பாரதியார் சிலை அமைக்கப்படும்.
இதுதவிர குறளாலயத்தில் நூலகம் கட்டவேண்டும். அதை அறக்கட்டளை செய்தால் திருக்குறள் தொடர்பான அனைத்து நூல்களையும் நான் கொண்டு வந்து சேர்ப்பேன் என்றார் குறிஞ்சிவேந்தன்.
விழாவில் பழந்தமிழ்க் காவிரி அறக்கட்டளையின் செயல் திட்டங்களை அறக்கட்டளையின் நிறுவன அறங்காவலர் மணவை தமிழ்மாணிக்கம் விளக்கிப் பேசினார்.
இதனைத் தொடர்ந்து குறளாலயம் திருப்பணிக் குழுவின் தலைவர் டாக்டர் பெ.கலையரசன் அவர்களுக்கு “தமிழ்த் திருப்பணி வள்ளல்” விருது, மணவைத் தமிழ் மன்றத்தின் தலைவர் சௌமா.இராசரத்தினம் அவர்களுக்கு “அறப்பணிச் செம்மல்” விருது, திருச்சிராப்பள்ளித் தமிழ்ச்சங்கத்தின் அமைச்சர் உதயகுமார் பெரியசாமி அவர்களுக்கு “அறப்பணிச் சுடர்” விருது, மருங்காபுரி முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினர் திருமதி இராசா கவேரி மணியன் அவர்களுக்கு “அறப்பணிக் காவலர்” விருது, ஜெயநாதன் சிட்ஸ் நிறுவன இயக்குநர் ம.ஆறுமுகம் அவர்களுக்கு “அறப்பணிச் செல்வர்” விருதுகளும் வேளாக்குறிச்சி ஆதீனம் அவர்களால் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் திருக்குறள் பயிற்றக நிறுவனர் புலவர் நாவை.சிவம், மூளை நரம்பியல் மருத்துவர் அலீம், திருச்சி புனித ஜான்பால் பல்சமய உரையாடல் மன்ற இயக்குநர் அருள்பணி முனைவர் க.சார்லஸ், மணப்பாறை ஜமாத் தலைவர் முகமது அனிபா, மணவைத் தமிழ் மன்றச் செயலாளர் கவிஞர் கோ.நவமணி சுந்தரராசன், சுழற்கழகம் மருதை, வழக்கறிஞர் தமிழ் இராசேந்திரன், டாக்டர் பி.எம்.இராமச்சந்திரன், பழந்தமிழ்க் காவிரி அறக்கட்டளையின் பொருளாளர் பாவலர் ந.பாலசுப்பிரமணியன், அறங்காவலர்கள் ஆ.துரைராஜ், சி.இராஜகோபால்ஆகியோர் பங்கேற்றனர்.
விழா துவக்கத்தில் பழந்தமிழ்க் காவிரி அறக்கட்டளையின் செயலாளர் வழக்கறிஞர் ஆ.தமிழ்மணி வரவேற்றார். நிறைவாக அறங்காவலர் எம்.கே.முத்துப்பாண்டி நன்றி கூறினார்.
பழந்தமிழ்க் காவிரி அறக்கட்டளை






