
அறநிலையத்துறை அமைச்சரின் சொந்த தொகுதியில் பகீர் புலனாய்வு:
₹518கோடி அறநிலையத்துறை நிலம் போலி ஆவணங்களால் அமுக்கல்?
1927 ஆவணங்கள் மர்ம மாற்றம்… ஏழைகளுக்கு ஒரு நீதி? தபோவனத்திற்கு ஒரு நீதியா?
ஸ்ரீராமகிருஷ்ண தபோவனம் மீது பாய்ந்தது அதிரடிப் புகார்!
திருச்சி எல்லையில் வெடித்த மாபெரும் நிலக் குளறுபடி!
திருச்சி: ஆன்மீகமும் அறமும் தழைக்க வேண்டிய திருச்சியில், பிரசித்தி பெற்ற சிவபெருமானின் கோயில் நிலங்கள், போலி ஆவணங்கள் மூலம் ‘நிழல் உலக’ பாணியில் தனியாருக்குத் தாராளமயம் ஆக்கப்பட்டுள்ளதா என்ற அதிர வைக்கும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

திருச்சி மாவட்டம், திருப்பராய்த்துறையில் அமைந்துள்ள புகழ்பெற்ற பிராய்த்துறைநாத சுவாமி கோயிலுக்குச் சொந்தமான 52 ஏக்கர் நிலம், அதன் தற்போதைய சந்தை மதிப்பில் ₹518 கோடி, போலி ஆவணங்கள் மூலம் பெயர் மாற்றம் செய்யப்பட்டு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகத் தமிழக அரசுக்கும், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறைக்கும் (DVAC) ஆதாரங்களுடன் பரபரப்பு புகார் அனுப்பப்பட்டுள்ளது.

திருப்பராய்த்துறையை பூர்வீகமாகக் கொண்ட இந்திய விமானப்படையின் ஓய்வுபெற்ற அதிகாரி மற்றும் நந்தவனத்தில் வாழும் பொதுமக்கள் இணைந்து இந்த விவகாரத்தை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளனர்.
ஆவணங்களை விழுங்கிய ‘மர்ம’ கரங்கள்: 1927 ரீசெட்டில்மெண்ட் ரிஜிஸ்டர் உடைக்கும் உண்மை!
தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI) மற்றும் பதிவுத்துறை இணையதளங்கள் மூலம் திரட்டப்பட்ட ஆவணங்கள், இந்த நில மோசடிப் புகாருக்குப் பின்னால் இருக்கும் அதிகார வர்க்கத்தின் சதியை அக்குவேறாகப் பிரித்துக் காட்டுகின்றன.
1927ஆம் ஆண்டின் பிரிட்டிஷ் காலத்து ரீசெட்டில்மெண்ட் ரிஜிஸ்டர் (Resettlement Register) படி, பிராய்த்துறைநாத சுவாமி கோயிலுக்குச் சொந்தமாக இருந்த நிலங்கள், தற்போதைய வருவாய்த்துறை கணக்குகளில் “ஸ்ரீராமகிருஷ்ண தபோவனம்” என்ற தனியார் அமைப்பின் பெயருக்கு மர்மமான முறையில் மாற்றப்பட்டுள்ளது புலனாய்வில் அம்பலமாகியுள்ளது.

வருவாய்த்துறையின் அதிகாரப்பூர்வ கணக்குகளில் உள்ள பகீர் முரண்பாடுகளின் விவரங்கள் இதோ:
திருப்பராய்த்துறை வருவாய் கிராமம் – சுமார் 6.03 ஏக்கர் – மதிப்பு ₹60 கோடி. 1927 ரீசெட்டில்மெண்ட் ரிஜிஸ்டர் படி சர்வே எண் 176/1-1.96ஏசெ,176/3A-2.44ஏசெ, 176/3B 0.86ஏசெ,172/1-1.43ஏசெ, 177/5-0.20 ஏசெ இவை அனைத்தும் பிராய்த்துறைநாத சுவாமி / அறநிலையைத் துறைக்கு சொந்தமானது. தற்போதைய வருவாய்த்துறை கணக்கின்படி ராமகிருஷ்ணன் தபோவனத்தின் பெயரில் உட்பிரிவு செய்யப்பட்டு பட்டா மாற்றப்பட்டுள்ளது.
அந்தநல்லூர் வருவாய் கிராமம் சுமார் 43.5 ஏக்கர் – மதிப்பு ₹435 கோடி , பதிவுத்துறை இணையதள ஆவணம் படி சர்வே எண் 186/2A2-ஹெ5-06.5ஏ, 186/2B- ஹெ 12-13.5 ஏ இவை அனைத்தும் பிராய்த்துறைநாத சுவாமி / அறநிலையைத் துறைக்கு சொந்தமானது.தற்போதைய வருவாய்த்துறை கணக்கின்படி ராமகிருஷ்ணன் தபோவனத்தின் பெயரில் உட்பிரிவு செய்யப்பட்டு பட்டா மாற்றப்பட்டுள்ளது.
கல்வி நிறுவனங்கள் மற்றும் குடியிருப்புகளின் கீழ் உள்ள ஆக்கிரமிப்புகள் -சுமார் 2.30 ஏக்கர் – மதிப்பு ₹23 கோடி
கோயிலுக்குச் சொந்தமான இந்த நிலங்கள், தற்போதைய நிலையில் தபோவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பல்வேறு நிறுவனங்களால், விவேகானந்த வித்யாலயா சிபிஎஸ்இ பள்ளி உட்பட ஆக்கிரமிக்கப்பட்டுப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன:
•சர்வே எண் 177/1 (1.17 ஏசெ): சாரதா நகர் பணியாளர்கள் குடியிருப்புகள், அஞ்சலகம் மற்றும் நரேந்திர வித்யாலயா.
•சர்வே எண் 177/2 (0.11 ஏசெ) & 177/4 (0.67 ஏசெ): விவேகானந்தா மேல்நிலைப்பள்ளி.
•கோயில் வளாகம்: விவேகானந்தா ஆரம்பப்பள்ளி.
கிட்டத்தட்ட முழு ராமகிருஷ்ண தபோவனத்தின் அனைத்து கட்டிடங்களும், பள்ளிகளும் திருப்பராய்த்துறையில் அறநிலையத்துறை இடம் இல்லம் அல்லது அரசாங்க நிலத்தில் தான் உள்ளது.
திருப்பராய்த்துறை ஊராட்சியில் சுடுகாட்டு நிலமும் ராமகிருஷ்ண தபோவனத்தின் கட்டுப்பாட்டில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. பாதுகாக்கப்பட வேண்டிய காடுகள் கூட ராமகிருஷ்ண தபோவனத்தின் பெயரில் பட்டா மாற்றம் செய்யப்பட்டு காடுகள் அழிக்கப்பட்டு அங்கு விவசாயம் பள்ளி பல தொழில்கள் நடைபெற்று வருகின்றன. இது சம்பந்தமாக கூட பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் புகார் கொடுத்துள்ளனர்.
நந்தவன மக்களுக்கு நீதி வேண்டும்
பணக்காரர்களுக்கு ஒரு நீதி! ஏழைகளுக்கு ஒரு நீதி! – நந்தவனம் மக்களின் கண்ணீர் குரல்.இந்த விவகாரத்தில் உச்சிமுகர வைக்கும் கொடுமை என்னவென்றால், அதே பகுதியில் வாழும் ஏழை எளிய மக்களின் அவல நிலைதான்.
பாதிக்கப்பட்ட நந்தவனம் மக்களின் ஆக்ரோஷ வாக்குமூலம்:
“திருச்சி – கரூர் தேசிய நெடுஞ்சாலை (NH-81/67) விரிவாக்கத்தின் போது, சாலையோரம் வசித்த எங்களைப் போன்ற 155 ஏழைக் குடும்பங்களின் வீடுகள் இடிக்கப்பட்டன. அப்போது, அரசு அதிகாரிகளும் அமைச்சர்களும் எங்களுக்கு மாற்று இடம் தருவதாகக் கூறி, இந்த சிவன் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் குடியமர்த்தினர். ஆனால், இன்று வரை எங்கள் வீடுகளுக்கு ஒரு மின்சார வசதி கூட செய்து தரப்படவில்லை. அதிகாரிகள் கேட்டால், ‘நீங்கள் இருப்பது அறநிலையத்துறை நிலம், பட்டா தர முடியாது, கரண்ட் தர முடியாது’ என்று துரத்துகிறார்கள்.”
“அரசனுக்கு ஒரு சட்டம், ஏழைக்கு ஒரு சட்டமா?” என்று நந்தவனம் மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். தபோவனம் ஆக்கிரமித்துள்ள நிலத்தில் மின்சாரம், பிரம்மாண்ட கட்டிடங்கள் என அனைத்து வசதிகளும் இருக்கும் போது, தங்களை மட்டும் இருளில் தவிக்க விட்டு வேடிக்கை பார்ப்பது ஏன் என அவர்கள் கண்ணீருடன் கேட்கிறார்கள்.
இந்திய விமானப்படையின் ஓய்வுபெற்ற அதிகாரியின் அதிரடிப் புகாரும் நியாயமான கேள்விகளும்:
இந்த மாபெரும் நில முறைகேட்டை ஆதாரங்களுடன் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்த ஓய்வுபெற்ற இந்திய விமானப்படை அதிகாரி, தமிழக முதல்வர் மற்றும் அறநிலையத்துறைக்கு அனுப்பியுள்ள மனுவில் அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்துள்ளார்:
•கேள்வி 1: ஸ்ரீராமகிருஷ்ண தபோவனம் திருப்பராய்த்துறைக்கு வந்தது 1942ஆம் ஆண்டு. ஆனால், அதற்கு முந்தைய அரசு ஆவணங்களில் அறநிலையத்துறைக்குச் சொந்தமாக இருந்த நிலங்கள், எந்த உத்தரவின் அடிப்படையில் தபோவனத்தின் பெயருக்கு மாற்றப்பட்டது?
•கேள்வி 2: இந்த நிலப் பெயர் மாற்றத்திற்குப் பின்னால் இருந்து கை நனைத்த வருவாய்த்துறை மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் யார் யார்?
•கேள்வி 3: தபோவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த 52 ஏக்கர் நிலத்திற்கு ஏன் இன்னும் நியாய அடிமனை வாடகை (Ground Rent) வசூலிக்கப்படாமல் அரசுக்கு இழப்பு ஏற்படுத்தப்பட்டு வருகிறது?
முன்வைக்கப்படும் அதிரடி கோரிக்கைகள்:
1.உடனடி மீட்பு: பழைய மற்றும் புதிய கிராமக் கணக்குகளை ஒப்பிட்டு, போலி ஆவணங்கள் மூலம் நிலம் கைமாறியதை உறுதி செய்து, ₹518 கோடி மதிப்புள்ள கோயில் நிலத்தை உடனடியாக அரசு மீட்க வேண்டும்.
2.அரசுக்கு வருவாய்: ராமகிருஷ்ண தபோவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள நிலங்களுக்கு நியாயமான அடிமனை வாடகை நிர்ணயம் செய்யப்பட வேண்டும். அவ்வாறு செய்தால், தமிழக அரசுக்கு மாதம் குறைந்தபட்சம் ₹5 லட்சம் வருமானம் கிடைக்கும்.
3.ஏழைகளுக்கான சமநீதி: ஒருவேளை ராமகிருஷ்ண தபோவனத்தின் ஆக்கிரமிப்புகள் வரன்முறைப்படுத்தப்படும் பட்சத்தில், அதே அடிப்படையில் நந்தவனத்தில் வாழும் 35ஏழைக் குடும்பங்களுக்கும் நியாயமான அடிமனை வாடகை நிர்ணயம் செய்து, அவர்களை அங்கேயே வாழ அனுமதிக்க வேண்டும்.
ஏழைகளின் வீடுகளை இடித்துவிட்டு, அவர்களைக் காலி நிலத்தில் தவிக்கவிட்டு, பல நூறு கோடி மதிப்பிலான அரசு சொத்துக்களைத் தனியாருக்குத் தாரை வார்த்துக் கொடுக்கும் இந்தச் செயல், நிர்வாகக் குளறுபடியின் உச்சகட்டம். தமிழக முதல்வர் அவர்களும், ஊழல் தடுப்புப் பிரிவும் இந்த விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு, உண்மைப் பின்னணியைக் கண்டறிந்து நடவடிக்கை எடுப்பார்களா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.




