இன்று 17-07-2026 புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெறும் நான்காவது DISHA கூட்டத்தில் பங்கேற்றேன்.எனது திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட புதுக்கோட்டை மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் மாவட்ட வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக் கூட்டம் (DISHA), மாவட்ட ஆட்சியர் மாளிகையில் உள்ள கூட்ட அரங்கில், சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் சகோதரர் திரு. கார்த்தி சிதம்பரம் அவர்களின் தலைமையில், இன்று (17.07.2026) காலை 10:30 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற்றது.
திருச்சி நாடாளுமன்ற உறுப்பினரான நான், என் தொகுதிக்குட்பட்ட புதுக்கோட்டை மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுவின் இணைத் தலைவராக இக்கூட்டத்தில் கலந்துகொண்டு,
ஒன்றிய அரசின் பல்வேறு திட்டங்களை இம்மாவட்டத்தில் நடைமுறைபடுத்துவதில் உள்ள வாய்ப்புகள் அல்லது தடைகள் பற்றிய பல்வேறு விவரங்களை துறை சார்ந்த அதிகாரிகளிடம் கேட்டறிந்து, அதிலுள்ள பிரச்சனைகளை சுட்டிக்காட்டி, அந்த திட்டங்களை நல்ல முறையில் கடைகோடி மக்களும் பயன் பெறும் வண்ணம் நிறைவேற்ற தகுந்த ஆலோசனைகளை வழங்கினேன். அதே நேரம் சிறப்பாக செயல்பட்ட அதிகாரிகளை வாழ்த்தி பாராட்டினேன்.

அதன் விவரம் பின்வருமாறு:
1)விசலூர் – வேந்தன்பட்டி துணை மின் நிலையங்கள்
விசலூர் மற்றும் வேந்தன்பட்டி பகுதிகளில் புதிய துணை மின் நிலையங்கள் அமைக்கும் பணிகளுக்கான ஒப்பந்தப்புள்ளி நடவடிக்கைகள் எப்போது நிறைவடையும், பணிகள் எப்போது தொடங்கப்படும் என்பது குறித்து தெளிவான காலக்கெடுவுடன் விளக்கம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தினேன்.
தூத்துக்குடி மாவட்டம் கடலையூரில் 33/11 கி.வோ. துணை மின் நிலையத் திட்டம் நீண்டகாலமாக காலதாமதமடைந்த அனுபவத்தை எடுத்துக்காட்டாகக் குறிப்பிட்டு, அதுபோன்ற நிலை விசலூர் மற்றும் வேந்தன்பட்டி திட்டங்களுக்கு ஏற்படக்கூடாது என்பதையும் பதிவு செய்தேன்.

ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு இந்தத் திட்டங்கள் விரைந்து செயல்படுத்தப்படும் என்ற நம்பிக்கையைத் தெரிவித்ததுடன், காலக்கெடுவுடன் பணிகளைத் தொடங்கி நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினேன்.
2)கீரனூர் கள ஆய்வில் பெறப்பட்ட கோரிக்கைகள்
29.06.2026 அன்று கீரனூரில் மேற்கொண்ட கள ஆய்வின்போது பொதுமக்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளூர் பிரதிநிதிகளிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகள் குறித்து எடுத்துரைத்தேன்.
- கீரனூர் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கணித ஆசிரியர் பற்றாக்குறையை உடனடியாக சரிசெய்ய வேண்டும்.
- பள்ளிக்கு அருகிலுள்ள அரசுக்குச் சொந்தமான காலி இடத்தை சுத்தம் செய்து மாணவிகளுக்கான விளையாட்டு மைதானமாக மாற்ற வேண்டும்.
- கோயில் குளத்தை தூர்வாரி சீரமைத்து, ஆக்கிரமிப்புகளைத் தடுக்க நிரந்தர பாதுகாப்பு வழங்க வேண்டும்.
- அரசமரத்தை பாதுகாக்க நிரந்தர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
- 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த அரச மரத்தை பாதுகாக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு கடிதம் வழங்கினேன் உடனடி நடவடிக்கையாக அரசமரம் வெட்டப்படாமல் பாதுகாக்கப்பட்டது.
மேலும் அரச மரத்தை
ஒட்டியுள்ள நிலம் தொடர்பாக கடந்த 30 முதல் 50 ஆண்டுகள் வரையிலான வருவாய் பதிவுகளை ஆய்வு செய்து, முறைகேடாக வழங்கப்பட்ட பட்டா இருந்தால் உடனடியாக ரத்து செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். - பள்ளியிலிருந்து சுமார் 300 மீட்டர் சுற்றளவிற்குள் செயல்பட்டு வரும் இரண்டு மதுபானக் கடைகளை மாற்றவோ அல்லது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவோ மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். 3)கீரனூர் ரயில் நிலையம்
29.06.2026 அன்று மேற்கொண்ட கள ஆய்வில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் குறித்து மீண்டும் வலியுறுத்தினேன்.
ரயில் நிலைய நுழைவாயிலில் மழைநீர் தேங்கும் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்திய தென்னக ரயில்வே நிர்வாகத்திற்கும் அதிகாரிகளுக்கும் நன்றியைத் தெரிவித்தேன்.
மேலும்,
- கழிப்பறைகளை முழுமையாக பராமரிக்க வேண்டும்.
- பயணிகள் காத்திருப்பு அறையில் புதிய இருக்கைகள் அமைக்க வேண்டும்.
- நடைமேடை முழுவதும் மேற்கூரை அமைக்க வேண்டும்.
- மழைநீர் வடிகால் வசதிகளை மேம்படுத்த வேண்டும்.
- CCTV கேமராக்கள் மற்றும் High Mast Light அமைக்க வேண்டும்.
- ரயில் நிலைய மறுசீரமைப்புத் திட்டத்தின் கீழ் அனைத்து பணிகளையும் காலதாமதமின்றி நிறைவேற்ற வேண்டும்.
4)புதுக்கோட்டை ரயில் நிலையம்
30.05.2026 அன்று மேற்கொண்ட திடீர் ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்ட குறைபாடுகளைத் தொடர்ந்து, ரயில்வே நிர்வாகம் கழிப்பறைகள், குடிநீர் வசதி, தேசியக் கொடி ஏற்றுதல் மேலும் Pay & Use கழிப்பறை வெளியே அமர்ந்து டோக்கன் கொடுக்கும் வயதான பெண்மணி மழை மற்றும் வெயிலில் இருப்பதை ஆய்வின் போது பார்த்தேன். இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டேன். தற்பொழுது மழை மற்றும் வெயிலில் இருந்து பாதுகாக்கும் வகையில் அந்தப் பெண்மணிக்கு மேற்கூரை அமைத்துக் கொடுத்ததற்கு நன்றி தெரிவித்தேன்.
அதே நேரத்தில், அம்ரித் பாரத் நிலையத் திட்டத்தின் கீழ் நடைபெறும் அனைத்து பணிகளும் 2026 டிசம்பர் மாதத்திற்குள் தரமாக நிறைவேற்றப்பட வேண்டும் என்றும், ரயில் நிலைய வளாகத்தில் நாட்டுமரக் கன்றுகள் நடும் திட்டத்தையும் செயல்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினேன்.
5)கந்தர்வகோட்டை அரசு மருத்துவமனை
கந்தர்வகோட்டை அரசு மருத்துவமனைக்கு புதிய கட்டடங்கள் மற்றும் நவீன உள்கட்டமைப்பு வசதிகளை விரைந்து உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினேன்.
மருத்துவ சேவைகள் பாதிக்கப்படாத வகையில் தற்போதைய மருத்துவமனைக்கு அருகிலுள்ள அரசு நிலத்தில் புதிய மருத்துவமனை கட்டடங்களை அமைக்க வேண்டும் என்றும், பொதுப்பணித்துறை, சுகாதாரத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் ஒருங்கிணைந்து பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டேன்.
6)MPLADS – RO குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள்
எனது நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் அமைக்கப்படும் RO குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் தரமான நிரந்தர கான்கிரீட் கட்டுமானத்துடன் அமைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினேன்.
பாதுகாப்பான குடிநீர் இல்லாததால் உயிரிழந்த சோலகம்பட்டியைச் சேர்ந்த தினமணி செய்தியாளர் திரு. முத்தரசு அவர்களின் நிகழ்வை எடுத்துக்காட்டாகக் குறிப்பிட்டு, பாதுகாப்பான குடிநீர் என்பது உயிர்களைக் காக்கும் அடிப்படைத் தேவையாகும் என்பதை வலியுறுத்தினேன்.
அரசின் வழிகாட்டுதல்களை முழுமையாகப் பின்பற்றி, மீதமுள்ள அனைத்து RO குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களும் தரமான நிரந்தர கட்டுமானத்துடன் அமைக்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டேன்.
7)திருச்சி – காரைக்குடி நான்கு வழிச்சாலை & கருவேப்பிலான் மேம்பாலம்
கருவேப்பிலான் பகுதியில் மேம்பாலம் அமைக்கும் திட்டம் மற்றும் நிலம் கையகப்படுத்தும் பணிகளின் தற்போதைய நிலையை ஆய்வு செய்து, அடுத்தகட்ட நடவடிக்கைகளை விரைவுபடுத்த ஆகஸ்ட் மாதத்தில் மாவட்ட நிர்வாகம், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் ஒருங்கிணைப்புக் கூட்டம் நடத்த வேண்டும் என வலியுறுத்தினேன்.
8)திருவப்பூர் ரயில்வே மேம்பாலம்
திருவப்பூர் ரயில்வே மேம்பாலத் திட்டத்தில் நிலம் கையகப்படுத்தும் பணிகளின் முன்னேற்றத்தை ஆய்வு செய்து, அடுத்தகட்ட பணிகளை விரைவுபடுத்த மாவட்ட நிர்வாகம், ரயில்வே, மாநில நெடுஞ்சாலைத்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளுடன் ஒருங்கிணைப்புக் கூட்டத்தை அடுத்த மாதம் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினேன்.
மக்களின் அன்றாட வாழ்வில் நேரடி மாற்றத்தை ஏற்படுத்தும் அடிப்படை வசதிகள், மக்கள் நலத் திட்டங்கள் மற்றும் நீண்டகால வளர்ச்சித் திட்டங்கள் அனைத்தும் காலதாமதமின்றி, உயர்தரத்துடன் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதே எனது தொடர்ச்சியான வலியுறுத்தலாகும்.
இக்கூட்டத்தில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி அருணா இ.ஆ.ப அவர்களின் முன்னிலையில் நடைபெற்று. இக்கூட்டத்தில் ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. நவாஸ் கனி அவர்கள் கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் திரு. சுப்பிரமணியன் அவர்கள் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட ஊரக வளர்ச்சிக் கழகத்தின் (DRDA) திட்ட இயக்குனர் , மாவட்ட வருவாய் அதிகாரி மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் புதுக்கோட்டை மாவட்டக் கழக செயலாளர் அண்ணன் எஸ். கே கலியமூர்த்தி அவர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
அன்புடன்
துரை வைகோ
நாடாளுமன்ற உறுப்பினர் (திருச்சி)
மறுமலர்ச்சி திமுக
17.07.2026







