வாய்க்காலில் ஊழல்… வாய்க்கரிசி போடும் அவலம்! தூர்வாரும் பெயரில் ஊர்ப்பணக் கொள்ளை: கண்ணீரில் மிதக்கும் திருச்சி விவசாயிகள்!

வாய்க்காலில் ஊழல்… வாய்க்கரிசி போடும் அவலம்!
தூர்வாரும் பெயரில் ஊர்ப்பணக் கொள்ளை: கண்ணீரில் மிதக்கும் திருச்சி விவசாயிகள்!

வாய்க்கால் முழுமையாக தூர்வார அரசாங்கத்தில் பணம் இல்லை என்று கூறும் அதிகாரிகள்.
மண்ணை நம்பி வாழும் விவசாயிகளின் மனக்குமுறல்! வயிறு எரியும் வேதனையில் வழிகின்ற கண்ணீர்!

திருச்சி மாவட்டத்தில், வாய்க்கால் தூர்வாரும் பணிகளில் நடைபெறும் மிகப்பெரிய ஊழல்கள், விவசாயிகளின் வயிற்றிலடித்து அவர்களைக் கண்ணீரில் தள்ளியுள்ளன. பாசன வாய்க்காலைக் கழிவுநீர் வாய்க்காலாக மாற்றிப் பாழாக்கும் அவலமும், விவசாயிகளை பந்தாடும் அதிகார வர்க்கத்தின் மெத்தனமும் வெட்டவெளிச்சமாகியுள்ளது. அதன் முழுமையான கள அறிக்கை இங்கே:

திருப்பராய்த்துறையில் திருட்டுத்தனம்: கழிவுநீர் கணக்கில் கரன்சி வேட்டை!
திருப்பராய்த்துறை ஊராட்சியில், பல வருடங்களாகத் தூர்வாரப்படாத பாசன மற்றும் வடிகால் வாய்க்காலை, “கழிவுநீர் வாய்க்கால்” எனப் பொய்க்கணக்கு எழுதி சுமார் 10 லட்சம் ரூபாய் சுருட்டப்பட்டுள்ளது.

அறிவிப்பில் ஆயிரம்… அளக்கப் போனால் நூறு: ஊராட்சியின் அறிவிப்புப் பலகையில் 1 கிலோமீட்டர் நீளத்திற்கு சிமெண்ட் கரைகள் கட்டப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. ஆனால், களத்தில் இருப்பதோ வெறும் 100 மீட்டர் மட்டுமே! இதில் மட்டும் சுமார் 6லட்சம் ரூபாய் மக்கள் வரிப்பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. முதல்வரிடம் முறையிட்டும் முடங்கிக் கிடக்கும் துறை: இதுகுறித்து முதல்வரின் முகவரித் துறைக்கு பலமுறை மனு அளித்தும், அந்தநல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலர் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் மௌனம் காக்கிறார்.

ஆற்றைப் பாதுகாக்காத துறை… ஆக்கிரமிப்பை ஆதரிக்கும் நிலை!
ஆற்றுப் பாதுகாப்பு கோட்டம், ஆற்றைப் பாதுகாப்பதை விட்டுவிட்டு, கரைகள் காணாமல் போவதைக் கண்டும் காணாமல் இருக்கிறது.வரைபடம் இல்லை… வரம்புகளும் தெரியவில்லை: அதிகாரிகளிடம் வாய்க்கால்கள் மற்றும் கரைகளின் நீள, அகலங்களைக் காட்டும் வரைபடங்களே இல்லை. இதனால்தான் திருப்பராய்த்துறை சுங்கச்சாவடியில் 32 அடி அகலமுள்ள லயன்கரை காணாமல் போயுள்ளது.

குடமுருட்டி முதல்… கொள்ளை போகும் கரைகள்: குடமுருட்டி முதல் பெட்டவாய்த்தலை வரை காவிரி ஆற்றுக்கரைகள் பல இடங்களில் திருடப்பட்டுள்ளன. பணக்காரர்களுக்குப் பச்சைக்கொடி: அதிகார வர்க்கத்தினருக்கும் பணக்காரர்களுக்கும் வளைந்து கொடுக்கும் அதிகாரிகள், எல்லாக் கற்கள் நடுவதையோ, வாய்க்கால்களைப் பராமரிப்பதையோ முறையாகச் செய்வதில்லை.

வேலைகள் அரைகுறை… வேடிக்கை பார்க்கும் வேளாண் துறை!
வேளாண் பொறியியல் துறையின் தூர்வாரும் பணிகளில் தலைவிரித்தாடுகிறது ஊழல். கடந்த 2-3 வருடங்களாக ஒரே நபரிடமே இப்பணிகள் ஒப்படைக்கப்படுகின்றன.

ஜேசிபி ஓட்டுநர்களின் சேட்டை: எங்கு ரோட்டிலிருந்து எளிதாக இறங்கி வேலை செய்ய முடியுமோ, அங்கு மட்டும் லேசாகச் சுரண்டிவிட்டுச் செல்கிறார்கள். முழுமையாக எந்தப் பணியும் நிறைவடைவதில்லை.
களத்தில் இல்லாத கண்காணிப்பாளர்கள்: பணி நடக்கும்போது உதவிப் பொறியாளர்கள் களத்தில் இருப்பதில்லை.கிளைகள் முதல்… கடைமடை வரை: கிராம வரைபடத்தை வைத்துக்கொண்டு, கிளை வாய்க்கால்கள் அனைத்தையும் கடைமடை வரை வெட்ட வேண்டும் என்பதே விவசாயிகளின் பிரதான கோரிக்கை. ஆனால், அதிகாரிகள் அதைச் சட்டை செய்வதில்லை.

அலையும் விவசாயிகள்… அசையாத அதிகாரிகள்! பழூர்,திருப்பராய்த்துறை & அணலை கிராமங்களின் கண்ணீர்!?!
பழூர் விவசாயியின் குமுறல்: கீழ அல்லூர் முதல் பழூர் குடிதெரு வரையிலான பாசன வாய்க்கால் முற்றிலும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. வேளாண் பொறியியல் துறைக்கு மனு அளித்தால், அவர்கள் “வருவாய்த் துறையைப் பாருங்கள்” என்கிறார்கள். வருவாய்த் துறையோ, “பொதுப்பணித்துறையிடம் செல்லுங்கள்” எனப் பந்தாடுகிறது. பூனைக்கு யார் மணி கட்டுவது?

அணலை விவசாயிகளின் வேதனை: சர்வே எண் 92 முதல் 103 வரை உள்ள 62 ஏக்கர் பாசன வாய்க்காலைத் தூர்வாரக் கோரி மனு அளித்தோம். அதிகாரி திரு. வெங்கடேசன் கள ஆய்வு செய்து, கட்டாயம் தூர்வாரித் தருவதாக உறுதியளித்தார். ஆனால், இரண்டு மாதங்கள் கழித்து தற்போதைய அதிகாரி திருமதி. புவனேஸ்வரியைத் தொடர்புகொண்டால், “FMB நிலவரைபடம் இல்லை, அங்கு வாய்க்காலே இல்லை” என மறுக்கிறார். விவசாயம் செய்யலாமா வேண்டாமா என்ற மன உளைச்சலில் தவிக்கிறார்கள் விவசாயிகள்.

திட்டமிடல் இல்லாததால்… திண்டாடும் திருப்பராய்த்துறை! கடந்த இரண்டு வருடங்களாக விவசாயிகள் கெஞ்சிக் கூத்தாடியும் சி அண்ட் டி (C&D) பிரிவு வாய்க்கால்கள் முழுமையாகத் தூர்வாரப்படவில்லை.

தலைப்பில் வெட்டுவதில்லை… கடையில் முடிப்பதில்லை: நடுவில் மட்டும் கொஞ்சம் வெட்டிவிட்டு கணக்குக் காட்டுகிறார்கள். ரயில்வேயிடம் அனுமதி… விவசாயிகளுக்கு அலைக்கழிப்பு: ரயில்வே லைன் அருகே வெட்ட வேண்டிய இடங்களுக்கு, அதிகாரிகள்தான் அனுமதி வாங்க வேண்டும். ஆனால், அதை விவசாயிகளையே செய்யச் சொல்லி அலைக்கழிக்கிறார்கள். மழையில் மிதக்கும் மக்கள்: பெருகமணி 3 கட்டையிலிருந்து வரும் வடிகால் வாய்க்கால் முறையாக வெட்டப்படாததால், மழைக்காலத்தில் 15 குடும்பம் வெள்ளத்தில் மிதக்கிறது. ஊருக்குள்ளும் மழைநீர் புகுந்து விடுகிறது.

அழைத்தால் எடுக்காத அதிகாரிகள்! விவசாயிகள் எப்போது போன் செய்தாலும் அதிகாரிகள் எடுப்பதில்லை. வேலைப்பளு காரணமாக உடனே எடுக்க முடியாவிட்டாலும், ஓரிரு நாட்களில் திரும்ப அழைத்து (Call back) விவசாயிகளின் குறைகளைக் கேட்கக்கூட அவர்களுக்கு மனமில்லை. ஆன்லைனில் மனுப்போட ஒவ்வொரு முறையும் 60 முதல் 100 ரூபாய் வரை செலவாகிறது. பணமும் விரயம், நேரமும் விரயம்! ஏனோதானோ என்று பதில் கொடுத்து மனுக்களை முடிக்கிறார்கள்.

விவசாயிகளின் விடுத்த தலையாய கோரிக்கைகள்:

  1. திட்டமிடல் அவசியம்: காவிரி ஆற்றில் தண்ணீர் வராத 3-4 மாதங்களில் (கோடையில்), வருவாய்த்துறை மற்றும் ஆற்றுப் பாதுகாப்புத் துறையுடன் இணைந்து வரைபடங்களைச் சேகரித்து முறையான திட்டமிடலை மேற்கொள்ள வேண்டும். கடனுக்கு வேலை செய்யக் கூடாது.
  2. முழுமையான தூர்வாரல்: பெருகமணி 3 கட்டையிலிருந்து துவங்கும் வாய்க்காலை, தலைப்பு மதகு முதல் கடைமடை வரை (திருப்பராய்த்துறை) முழுமையாகத் தூர்வார வேண்டும்.
  3. அனைத்துப் பகுதிகளிலும் பாரபட்சமற்ற பணி: பழூர், அணலை, திருப்பராய்த்துறை, எலமனூர் ஆகிய பகுதிகளில் உள்ள அனைத்து வாய்க்கால்களையும் விடுபடாமல் முழுமையாக வெட்டித் தர வேண்டும்.
  4. ஒப்பந்ததாரர் மாற்றம்: வேலையைச் சரிவரச் செய்யாத தற்போதைய ஒப்பந்ததாரரை உடனடியாக மாற்றிவிட்டு, நேர்மையான முறையில் பணிகளைத் தொடர வேண்டும்.*
  5. அரசாங்கத்தில் பணம் இல்லை என்று கூறி தூர் வாரும் பணியை ஏனோதானோ என்ன செய்யக்கூடாது என்கிறார்கள் விவசாயிகள்

அரசாங்கம் மக்களின் வரிப்பணத்தை விவசாயிகளைக் காக்கவே ஒதுக்குகிறது; அதிகாரிகளின் அலட்சியத்தால் அந்தப் பணம் சேற்றில் வீசப்படுவதை இனியாவது அரசு தடுத்து நிறுத்த வேண்டும்!

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    மரணச்சாலையில் மனிதர்களுக்கு ரயில்வே வைக்கும் பொறி.எமனின் ஏஜெண்டாக செயல்படும் ரயில்வே அதிகாரிகள் – கண்டுகொள்ளாத மாநில நெடுஞ்சாலை துறை-மரணச்சாலை

    திருச்சி கரூர் சாலை, குடமுருட்டி முதல் பெட்டவாய்த்தலை தினமும் காவு வாங்கும் சாலையாகும்.இதை மக்கள் மரணச்சாலை என்று தான் அழைக்கின்றனர். மாநில நெடுஞ்சாலையும், தேசிய நெடுஞ்சாலையும் போதுமான பாதுகாப்பு கட்டமைப்பு வசதிகளை இங்கு ஏற்படுத்தி தருவதில்லை. மாநில, தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள்…

    அறநிலையத்துறை அமைச்சரின் சொந்தத் தொகுதியின் அவலம்ஆட்சி மாறியும் காட்சிகள் மாறவில்லை.

    திருப்பராய்த்துறை பஞ்சாயத்து பணியாளர்கள் மூவரை மாற்ற மக்கள் கோரிக்கை, திருப்பராய்த்துறை தண்ணீர் பிரச்சனை என்பது திட்டமிட்ட சதி வேண்டுமென்றே செய்கிறார்கள் என்று ஒரு சாரார் குற்றம் வைக்கின்றனர். திருப்பராய்த்துறை ஊராட்சியில் இருந்து கிட்டத்தட்ட தமிழக முழுவதற்கும் தண்ணீர் செல்கிறது. ஆனால் அங்கு…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *