
அரசியலில் எனக்கு இருக்கும் ஆர்வம் ஏனோ அரசியல் தலைவர்கள் மீது அவ்வளவாக என்றைக்குமே இருந்ததில்லை. இதுநாள் வரை மிகப்பெரிய மதிப்பு அல்லது ஒரு பற்றுதல் வந்தது கிடையாது. ஒரு ஊடகவியலாளராக அரசியலை ஊடக பார்வையோடு தான் இது வரை பார்த்திருக்கின்றேன். எந்த அரசியல் தலைவரிடமும் நெருங்கியதில்லை. ஒரேயொருவரைத்தவிர. ஆம் அவர் தான் திருச்சி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் மாண்புமிகு.துரை வைகோ.

ஒரு ஊடகவியலாளராக ஊடக தர்மத்தை கடைபிடிப்பதில் நான் என்றைக்கும் பின் தங்கியதும் இல்லை தயங்கியதும் இல்லை.

சமீபத்தில் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் மாண்புமிகு ரமேஷ் அவர்களின் செயல்பாடுகள் என்னுள் அவர் மீது ஒரு அசைக்க முடியாத நம்பிக்கையை ஒரு விதமான பற்றுதலையும் உருவாக்கியுள்ளது என்றே கூற வேண்டும்.

அடுத்த நாளே அரசு மருத்துவமனைக்கு அருகில் உள்ள அம்மா உணவகம் சென்று ஆய்வு மேற்கொண்டவர் அங்கு பணிபுரியும் பெண்களுக்கு கழிப்பிட வசதி இல்லாததை கண்டதும் அதிகாரிகளை கண்டித்து உடனடியாக அம்மா உணவகத்தை சீரமைக்கும் பணிகளுக்கும் ஆணையிட்டு இப்பொழுது அம்மா உணவகத்தில் பராமரிப்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றது. அங்கு பணிபுரியும் பெண்கள் அம்மா உணவகம் வாசலில் உள்ள விளம்பர பதாகை பகுதி காரணமாக அந்த இடத்தில் பொதுமக்கள் சிறுநீர் கழிப்பதாகவும் அந்த துர்நாற்றத்தின் காரணமாக தங்களால் சரிவர சமையல் செய்ய இயலவில்லை என்றும் உணவு உண்ண வருபவர்கள் ஒருவித அசூசையோடு உணவு உண்ண வருவதாகவும் கூறி உடனடியாக அதற்கு தீர்வு தருமாறு கேட்டனர். அமைச்சரும் உடனடியாக அந்த இடத்தை சுத்தம் செய்ய ஆணையிட்டு மேற்கொண்டு அந்த இடத்தில் எந்த விதமான விளம்பர பதாகைகளும் வைக்கக் கூடாது என்று உத்தரவிட்டார். . இதனைத் தொடர்ந்து திருச்செந்தூருக்கு சென்ற அவர் அங்கு ஊழலில் ஈடுபட்ட நபர்களை கையும் களவுமாக பிடித்து திருச்செந்தூர் கோவில் நிர்வாகத்தில் இருந்த அதிகாரிகள் அனைவரையும் அதிரடியாக மாற்றினார். தொடர்ந்து பழனி மதுரை என அவருடைய அதிரடிகள் அடுத்தடுத்து அரங்கேற தொடங்கியவுடன் அதிகாரிகள் தரப்பில் பயமும் பதட்டமும் உருவாகி தங்கள் பணிகளை செய்ய தொடங்கியுள்ளார்கள். அதிகாரிகள் மட்டுமல்ல கோவிலில் பணிபுரியும் அர்ச்சகர் முதற்கொண்டு அனைத்து ஊழியர்களும் கூட. எதிர்க்கட்சிகள் இவையெல்லாம் அரசியல் ஸ்டன்ட் எனவும் ரீல்ஸ் மினிஸ்டர் எனவும் அவரை இகழ்ந்து பேசிய பொழுதும் அதைப்பற்றி சிறிதும் அக்கறை கொள்ளாமல் என் கடன் பணி செய்து கிடப்பதே என்பது போல தொடர்ந்து தனது பணிகளை விறுவிறுப்பாக மேற்கொண்டு வருகின்றார் மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அவர்கள்.

சமீபத்தில் ஸ்ரீரங்கம் எம்எல்ஏ வை காணவில்லை என்று பொய்யான ஒரு வீடியோ பதிவை உருவாக்கி அதை சமூக வலைதளங்களில் மிக வேகமாக பரவச் செய்தனர் எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள். ஆனால் எங்கள் எம்எல்ஏ அமைச்சராகவும் இருக்கும் காரணத்தினால் ஸ்ரீரங்கத்தை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த தமிழக மக்களின் தேவைகளை நிறைவேற்ற வேண்டிய கடமை அவருக்கு இருக்கின்றது அதன் காரணமாக அவர் ஸ்ரீரங்கம் வரவில்லை என்றாலும் எங்கள் கோரிக்கைகளை தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்றுவதற்கு வசதியாக அலுவலகத்தில் தனி அலுவலர்களை நியமித்துள்ளார் அவர்கள் எங்கள் கோரிக்கைகளை அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று உடனடியாக அதை நிறைவேற்றி தருகிறார்கள் என்று அமைச்சருக்கு புகழாரம் சூட்டுகிறார்கள் ஸ்ரீரங்கம் தொகுதி மக்கள். அது நூற்றுக்கு நூறு உண்மை என்பது போலவே அமைச்சரின் செயல்பாடுகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் இன்று திருவானைக்காவலில் உள்ள ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு பேசிய அவர் ஒரு விஷயத்தை குறிப்பிட்டார், மிகவும் எளிய குடும்பத்தில் பிறந்த நான் 12 ஆம் வகுப்பில் பயின்றது ஒரு கல்வி பன்னிரெண்டாம் வகுப்பிற்கு பிறகு நான் படித்தது இன்ஜினியரிங் ஆனால் வேலை பார்த்ததோ ஹாஸ்பிடல் அட்மினிஸ்ட்ரேஷன் இன்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக நாட்டிற்கு பணி செய்து வருகின்றேன். இன்றைக்கும் என்னுடைய தந்தை 3000 ரூபாய் சம்பளத்திற்கு வேலைக்கு சென்று கொண்டிருக்கிறார் என் தாயாரும் அவர் பார்த்து வந்த வேலையை தொடர்ந்து செய்து வருகிறார், நான் அமைச்சரானது கூட அவருக்கு தெரியவில்லை என்னோடு வந்து விடுங்கள் என்று அவர்களை நான் கேட்டபோது என் உடலில் வலு உள்ளவரை நான் என் சொந்தக்காலில் நிற்கின்றேன் தேவைப்படும் பொழுது வருகின்றோம் என்று கூறி என்னுடைய கோரிக்கையை நிராகரித்து விட்டனர். என் பெற்றோர் மட்டுமல்ல எனது சகோதரர்களும் வேலைக்கு சென்று கொண்டிருக்கிறார்களே தவிர என்னோடு அவர்கள் வரவில்லை அரசியல் என்பது என்னுடைய என் குடும்பத்துடைய பொருளாதார நிலையை உயர்த்திக் கொள்வதற்காக அல்ல இது ஒரு மக்கள் பணி என்று அவர் கூறிய பொழுது அரங்கமே சற்று நேரம் நிசப்தம் ஆகியது. பிறகு அங்கு இருந்த மாணவ மாணவிகளின் கைத்தட்டல் அடங்க வெகு நேரம் ஆயிற்று. இப்படியும் ஒரு அமைச்சரா என்று நாம் சற்று அதிசயித்து தான் போனோம். காமராஜரையும் கக்கனையும் பக்தவச்சலத்தையும் ராஜாஜியையும் பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம் படித்திருக்கிறோமே தவிர அவர்களை நேரில் கண்டதில்லை. ஆனால் இன்று அவர்களைப் போன்ற ஒரு தன்னலமற்ற அரசியல்வாதி, ஒரு அமைச்சரை இன்று கண் முன்னால் காண்கின்றோம்.

இந்த நேரத்தில் எனக்கு சமீபத்தில் ஏற்பட்ட ஒரு அனுபவத்தை பகிர விரும்புகின்றேன். இதுவரை அதைப்பற்றி எவரிடமும் கூறியதில்லை ஆனால் இன்று அதை கூற வேண்டிய ஒரு நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன். மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் அவர்கள் அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட சில தினங்களுக்கு ப் பிறகு ஒரு அதிகாலை வேளையில் ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோவிலில் தரிசனத்தை முடித்துவிட்டு வெளியே வரும் பொழுது அங்கு ஒரு பெரியவரை கண்டேன் மெலிந்த தேகம் அப்பாவியான இந்த மனிதரை நாம் எங்கோ பார்த்திருக்கிறோமே என்று சற்று நேரம் யோசித்து விட்டு பிறகு நான் அவர் யார் என்பதை உணர்ந்தேன் அவரிடம் மெதுவாக சென்று ஐயா உங்களை எங்கோ பார்த்தது போல உள்ளது ஆனால் எங்கே என்று தெரியவில்லை தங்களைப் பற்றி தெரிந்து கொள்ளலாமா என்று கேட்ட பொழுது அவர் மிகவும் மெதுவான குரலில் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். ” நான் ரமேஷ் அவர்களின் தந்தை ஸ்ரீரங்கத்தில் நடைபெற்ற ஒரு சுப நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஸ்ரீரங்கம் வந்திருந்தேன் அதிகாலையில் பெருமாளை தரிசிக்க வேண்டும் என்பதற்காக கோவிலுக்கு வந்தேன்” என்று கூறினார். அதைக் கேட்டவுடன் சற்றே அதிர்ச்சி அடைந்த நான் இதை நீங்கள் கோவில் நிர்வாகத்தில் கூறியிருந்தால் உங்களை அழைத்துச் சென்று ராஜமரியாதையோடு தரிசனம் செய்ய வைத்திருப்பார்களே என்று கேட்டேன். அதற்கு அவர் அவ்வாறு செய்வது மிகவும் தவறு அதை என் மகனும் விரும்ப மாட்டான் எனக்கும் அதில் உடன்பாடு கிடையாது. சாமானிய மக்களோடு நானும் சாமானியனாக இருப்பதையே அவன் விரும்புவான் ஒருபொழுதும் அவனுடைய அதிகாரத்தை நான் துஷ் பிரயோகம் செய்யக்கூடாது அது தவறு என்று கூறினார். அந்த நிமிடம் அந்த பெரியவர் மட்டுமல்ல மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும் என் முன்பு இமயம் போல உயர்ந்து நிற்கிறார்கள். இதை எதற்காக இங்கே குறிப்பிட விரும்புகின்றேன் என்றால் வள்ளுவரின் மகன் தந்தைக்காற்றும் உதவி இவன் தந்தை என்நோற்றான் கொல் எனும் சொல் என்ற ஐயனின் வாக்குகள் என் காதில் ஒலித்தன. இன்றைக்கு விழா மேடையில் அவர் தன்னை பற்றி கூறிய பொழுது உண்மையாகவே எப்படிப்பட்ட மகனை இந்த பெற்றோர்கள் பெற்றிருக்கிறார்கள் எப்படிப்பட்ட சிறந்த சட்டமன்ற உறுப்பினரை ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி பெற்றிருக்கின்றது எவ்வளவு சிறந்த அமைச்சரை இந்து சமய அறநிலையத்துறை பெற்றிருக்கிறது என்று வியந்து நின்றேன். உண்மையாகவே மக்கள் மிகச் சிறந்த மாற்றத்தை தான் உருவாக்கியுள்ளார்கள் இந்த இளைஞர்களின் கையில் நாளைய தமிழகம் மிகச் சிறப்பாக மிளிரும் என்பதற்கு சான்றாக ரமேஷ் என்கின்ற இந்த ஒற்றை மனிதர் அதற்கு ஆதார சக்தியாக விளங்குகின்றார் என்றே கூற வேண்டும்.

நம்பிக்கை கீற்றை ஒளிரச்செய்த மாமனிதனே உன் பணி சிறக்க வாழ்த்துகள்





