
திருச்சி மாநகராட்சியை கண்டித்து, அம்மா மக்கள் முன்னேற்றக் கழக மாவட்ட செயலாளர் அறிக்கை.
ஆளும் கட்சி மாமன்ற உறுப்பினரே திருச்சி மாநகராட்சியின் செயல்படாத நிர்வாகத்தை கண்டித்து இன்று சாலை மறியல் செய்துள்ளார்.
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களின் ஆட்சிக் காலத்தில் இந்திய அளவில் மூன்றாவது இடத்தில் இருந்த, ஆற்றல் மிக்க அனுபவமிக்க திருச்சி மாநகராட்சியின் அதிகாரிகளை சமீப வருடங்களாக செயல்பட விடாமல் முடக்கும் காரணம் என்ன?
சில வார்டுகள் மட்டும் அதிகப்படியான அனுகூலங்களை, சலுகைகளை பெறும் சூழலில், திருச்சி மாநகராட்சியின் பல வார்டுகள், அடிப்படை வசதிகள் பெறாமல் இருப்பதன் காரணம் என்ன?

புதிதாக போடப்பட்ட தார் சாலைகள் மழையால் பாதிப்படைந்துள்ளது வேதனை என்றால், மழை பெய்யும் முன்னரே “வெறும் காற்றாலே” சேதமடையம் அளவிற்கு தரம் வாய்ந்த சாலைகள் திருச்சி மாநகரின் பல பகுதிகளிலும் உள்ளன.
பாதாளை சாக்கடை என்றாலே சாலைகளுக்கு அடியில் சாக்கடை ஓட வேண்டும் என்ற அடிப்படை அறிவியல் போதிக்கும் பொழுது, திருச்சி மாநகரின் பாதாள சாக்கடை மட்டும் பல பகுதிகளிலும் சாலைகளுக்கு மேலே ஓடுவது ஏன்?

திருச்சி மாநகரில் பாதிப்படைந்துள்ள சாலைகளை உடனடியாக சீர்படுத்தவும், பாதாள சாக்கடை அடைப்புகளை, மழைநீர் வடிகால்களை முழு வீச்சில் சுத்தம் செய்யவும் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.
மழை நீர் வடிகால் இல்லாத பகுதிகளில், தேங்கும் நீர் சாலைகளை சேதம் செய்யும் என்பதால் உடனடியாக மழை நீர் வடிகால்கள் அமைக்க வேண்டும்.
தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள், உட்கட்சி அரசியல் போன்ற காரணங்களால் காட்டப்படும் பாரபட்சங்கள், வெட்ட வெளிச்சமாக இருப்பதால், திருச்சி மாநகராட்சியின் செயல்பாட்டால் மக்கள் கடும் வெறுப்பு மற்றும் விரக்தி அடைந்துள்ளனர்.
எனவே கடினமான சூழ்நிலையிலும், விரட்டி விரட்டி வரி வசூல் செய்யப்படும் திருச்சி மக்களுக்கு, போர்க்கால அடிப்படையில், அவர்கள் வரியில் இருந்து, எந்த பாரபட்சமின்றி உடனடியாக வேண்டிய அடிப்படை வசதிகளை உடனடியாக செய்து கொடுக்க வேண்டும்.
தவறும் பட்சத்தில், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், பாதிக்கப்பட்ட மக்களை ஒருங்கிணைத்து அறப்போராட்டம் மூலம் தங்களின் கவனத்தை ஈர்க்க வேண்டி வரும் என்று மாநகராட்சியிடம் இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன் என தனது அறிக்கையில் கூறியுள்ளார் .
