

அம்பேத்கர் – பெயரல்ல தேசத்தின் பெருமை
தலித்துகளின் விடுதலைக்குப் பாடுபட்டவர், சுதந்திர இந்தியாவின் அரசமைப்புச் சட்ட வரைவுக் குழுவின் தலைவராக இருந்தவர். இவை இரண்டும்தான் அதிகம் அறியப்பட்ட அம்பேத்கரின் இரண்டு பக்கங்கள். இவை அம்பேத்கரின் முக்கியமான பங்களிப்புகள் என்பதில் ஐயமில்லை.
ஆனால், அவரது பணிகளும், வாழ்வும் மேலும் பல பரிமாணங்களை கொண்டவை. அமைச்சராக இருந்து பிரம்மாண்ட நீராதாரத் திட்டங்களை வகுத்தது, நதி நீர்ப்பங்கீடு தொடர்பாக இன்றும் பொருந்தும் கருத்துகளை வலியுறுத்தியது முதல் எட்டு மணி நேர வேலை உரிமை இந்தியாவில் அமலாகக் காரணமாக இருந்தது வரை பரந்த சமூகம் பலன்பெற அவர் செய்தவை பல.
சாதியோ பொருளாதார நிலையோ ஒருவரின் கற்கும் ஆர்வத்தையும் அறிவார்ந்த சாதனைகளையும் தடுத்துவிட முடியாது என்கிற மிகப்பெரும் நம்பிக்கையே அவரது வாழ்க்கை நமக்குத் தரும் முதற் பெரும் செய்தி. தனித்த திறமைகளையும் கல்வியறிவையும் சுயநலத்திற்காக அல்லாமல் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காகப் போராடவும் ஒட்டுமொத்த சமூக மேம்பாட்டுக்காக சிந்திக்கவும் அர்ப்பணிப்பது என்பது இதேயளவுக்கு போற்றத்தக்க மற்றுமொரு செய்தி.
கல்வியாளராக, பொருளாதார நிபுணராக, தத்துவவாதியாக, வரலாற்றாளராக, அரசியல் செயற்பாட்டாளராக, தொழிலாளர்- பாசனம்- மின்சாரத்துறை அமைச்சராக, சட்ட அமைச்சராக அவர் ஆற்றிய பணிகள் இந்திய மக்கள் ஒவ்வொருவரின் தனிப்பட்ட வாழ்விலும் தாக்கம் செலுத்தியவை.
வயது வந்தோர் அனைவருக்கும் இன்றுள்ள வாக்குரிமை அவர் எழுப்பிய கோரிக்கையே. நிர்வாகத்துறையை ஜனநாயகப்படுத்த அவர் பட்டியல் சாதியினருக்கு கோரிய பிரதிநிதித்துவம் தான் அரசியல் சாசனத்தின் மூலம் உறுதி செய்யப்பட்டது. பின்னாளில் பிற்படுத்தப்பட்டோரும் பெண்களும் அத்தகைய பிரதிநிதித்துவத்தைப் பெறவும் இதுவே வழிகோலியது.
இன்றைக்கு மாநில குரூப்1, குரூப்2 என்று அதிகாரிகள் தேர்வாவதற்கு அவரே அடிப்படை. தொழிலாளர் துறை அமைச்சர் என்கிற முறையில் 1942 நவம்பர் 27 ஆம் நாள் அவர் கூட்டிய ஏழாவது இந்திய தொழிலாளர் மாநாட்டில்தான் வேலைநாள் என்பது எட்டுமணி நேரம் என்கிற மகத்தான முடிவினை அறிவித்தார் அம்பேத்கர்.
தொழிலாளர் காப்பீட்டுத் திட்டம், அகவிலைப்படி அறிமுகம், ஆழ்துளைச் சுரங்கங்களில் பெண் தொழிலாளர்களை பணி செய்ய வைப்பதற்கு தடை, மகப்பேறு விடுப்பு என தொழிலாளர்கள் அனுபவித்து வரும் பல்வேறு உரிமைகள் அவர் வழியாக வந்தவையே.
பொதுநிதி, வங்கித்துறை சீர்திருத்தங்கள் பற்றிய சமீபத்திய விவாதங்களில் அம்பேத்கரின் வழிகாட்டுதல் போற்றப்படுகிறது. ரிசர்வ் வங்கி உருவாக்கம் அவரது சிந்தனைக்குழந்தை தான் எனப்படுகிறது. இன்சூரன்ஸ் அரசுடைமையாக்கம், மத்திய மின்தொகுப்பு, சுரங்கங்கள் மீதான அரசுரிமை, தொழில் மயமாக்கம் என்று தேசிய கட்டுமானத்தில் அவரது பங்களிப்பு எல்லையற்று விரிகிறது.
அம்பேத்கர் தன் சிறுவயதில் தந்தையைக் காணச்சென்ற வழியில், தீண்டாமைக்கு இலக்கான காரணத்தினால், தாகத்தில் தவித்த அவரது வாய்க்கு யாரும் தண்ணீர் தர மறுத்த ஒரு நிகழ்வு நடந்தது. இதையடுத்து, மாடுகளும் எருமைகளும் புரண்டு கலக்கிய குட்டையில் தண்ணீர் குடிக்க நேர்ந்த கொடிய அனுபவம் அவருக்கு நேர்ந்தது.
அவர் படித்து பாரிஸ்டராகி திரும்பிய பின்னும்கூட அலுவலகத்தில் பொதுப் பயன்பாட்டுக்கென வைக்கப்பட்டிருந்த பானையில் இருந்து நீரெடுத்துக் குடிக்க முடியாமல் தடுக்கப்பட்டவர் அவர்.
அலுவலகத்தின் கடைநிலைப் பணியாளர் முகந்து தரும்வரை தாகத்தோடு காத்திருந்தவர்.
சவுதார் குளத்தில் நீரருந்தும் உரிமைக்காக தனது மக்களோடு உண்ணாவிரதமிருந்து ஊர்வலம் நடத்தி கடும் தாக்குதலுக்கும் ஆளானவர். அருகாமையிலிருந்த நீர்நிலைகளைப் பயன்படுத்துவதற்கு சாதியவாதிகள் விதித்த தடை காரணமாக, அவர் தான் நடத்திய பல மாநாடுகளில் பங்கெடுத்தவர்களுக்கு விலைக்கு தண்ணீர் வாங்கி ஊற்றும் அவலத்திற்கு ஆளானவர்.
ஆனாலும் அவருக்கென அதிகாரம் கிட்டியபோது, அதை அவர் தனக்கும் தன் மக்களுக்கும் தண்ணீர் தர மறுத்தவர்களுக்கு எதிராக பயன்படுத்தவில்லை. மாறாக, ஓர் அடிப்படை ஆதாரவளமான நீர் குடிமக்களின் அன்றாடப் பயன்பாட்டிற்கும் பாசனத்திற்கும் நாட்டை வளப்படுத்துவதற்கும் தடையின்றி கிடைப்பதற்கான வழிவகைகளை ஆராய்ந்தார்
இந்த நோக்கத்தில்தான் அவர் அமெரிக்காவின் டென்னஸி ஆற்றுப்பள்ளத்தாக்குத் திட்டத்தை முன்மாதிரியாகக் கொண்டு தாமோதர் ஆற்றுப் பள்ளத்தாக்குத் திட்டத்தைக் கொண்டுவந்தார். வெள்ளப் பெருக்கினால் வங்காளம், பீகார் மாநிலங்களில் தொடர்ந்து கடும் சேதாரங்களை உருவாக்கிவந்த தாமோதர் ஆற்றின் குறுக்கே பேரணையும் நீர்மின் உற்பத்திக்கூடமும் கட்டப்பட்டன.
இப்பெருந்திட்டத்தில் தீண்டப்படாத சாதியைச் சார்ந்த மற்றொருவரும் சர்வதேச அளவில் மதிப்பார்ந்த இடத்தைப் பெற்றிருந்த இயற்பியலாளருமான மேக்நாட் சாகாவும் அம்பேத்கருடன் இணைந்திருந்தார். தாமோதர் போலவே மகாநதி, சோன் நதி பள்ளத்தாக்கு திட்டங்களும் அம்பேத்கரின் கொடைகளே.
ரயில் தடங்களைப் போலவே நதிகளும் மத்திய அரசின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு செல்லப்பட வேண்டும்- அதாவது நதிகள் தேசியமயமாக்கப்பட வேண்டும் என்கிற அம்பேத்கரது யோசனை, நதிநீர் பகிர்வுக்காக மாநிலங்கள் சண்டையிட்டுக் கொள்ளும் இந்நாளில் அருந்தீர்வாக நினைவுகூரப்படுகிறது. நாட்டின் நீர் மேலாண்மைக்கு அவர் ஆற்றிய பங்களிப்புகளுக்கு நன்றி செலுத்தும் விதிமாக தேசிய நீர் ஆணையம் Ambedkar’s Contribution to Water Resources Development என்கிற ஆவணத்தை 1993ல் வெளியிட்டது.
இந்தியாவின் முதலாவது முன்னோடி ஆற்றுப் பள்ளத்தாக்குத் திட்டம் என்கிற பெருமைக்குரிய தாமோதர் பள்ளத்தாக்குத் திட்டம். அது அம்பேத்கரால் உருவாக்கப்பட்டது என்கிற அடிப்படைத்தகவலைக்கூட அத்திட்டக் கழகத்தின் தற்போதைய தலைவரோ அங்குள்ள தொழிலாளர்களோ அறிந்திருக்கவில்லை. அங்குள்ள நூலகத்தில்கூட இதுதொடர்பான பதிவுகள் ஏதும் இடம் பெற்றிருக்கவில்லை என்பதை ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியும் முசாபர்பூர் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தருமான ஏ.கே.பிஸ்வாஸ் நேரடி அனுபவத்திலிருந்து எழுதியிருக்கிறார்.
இதுதான் களநிலவரம் பற்றிய துல்லியமானதோர் உதாரணம். அம்பேத்கரை, தலித்துகளின் இடஒதுக்கீட்டுக்காகப் போராடியவர் அல்லது அரசியல் சாசனத்தை எழுதியவர் என்கிற சுருக்கப்பட்ட பிம்பமே வெகுமக்களுக்குள் பதியவைக்கப்பட்டுள்ளது. தேச உருவாக்கத்திற்கும் குடிமக்களின் நல்வாழ்விற்கும் அம்பேத்கர் ஆற்றிய பணிகள் இருட்டடிப்புச் செய்யப்பட்டுள்ளன. ஆனால் காலம் அவரது பன்முக ஆளுமையை தேடித்தேடி முன்னிறுத்துகிறது.
பம்பாய் நூற்பாலைகளில் நிலவிய தீண்டாமைகளைக் காணும் அவர், சாதியானது தொழிலை மட்டுமல்லாது தொழிலாளர்களையும் பிரித்துவைக்கிறது என்றும் தொழிலாளர்களை ஒரு வர்க்கமாக அணிதிரட்டுவதில் சாதி பெரும் தடையாக இருக்கிறது என்றும் தெளிவுபடுத்தினார்.
சாதிகளைக் கடந்து உழைக்கும் மக்களை திரட்ட வேண்டும் என்கிற திட்டத்தோடுதான் 1936 ஆகஸ்டில் சுதந்திரத் தொழிலாளர் கட்சியைத் தொடங்கியிருக்கிறார்.
மார்க்சீயம் முன்வைத்த விஞ்ஞான சோசலிசத்துடன் தொடர்பில்லாத பல வகைமைகள் சோசலிசத்தில் உண்டு. அம்பேத்கரின் சோசலிசம் அரசு சோசலிசம் எனப்படுகிறது. அவர் பங்கு வகித்த பல்வேறு அமைப்புகளின் கொள்கைகளில் சோசலிசத்தின் மீதான தனது பிடிப்பை கூறிவந்த அவர் 1946 ஜூன் 17 அன்று அரசமைப்பு அவையில் ஆற்றிய உரையில் அதை மறுவுறுதி செய்கிறார்.
‘இந்த நாட்டில் சமூக, பொருளாதார நீதி இருக்கும்படி செய்வதற்குத் தொழில்கள் தேசியமயமாக்கப்பட வேண்டும், நிலம் தேசியமயமாக்கப்பட வேண்டும் என்பதை இந்தத் தீர்மானம் வெளிப்படையாகச் சொல்ல வேண்டும் என்று நான் எதிர்பார்த்திருக்க வேண்டும். சமூக, பொருளாதார, அரசியல் நீதியில் நம்பிக்கை கொள்ளும் எந்தவொரு எதிர்கால அரசாங்கமும், அதன் பொருளாதாரம் ஒரு சோசலிசப் பொருளாதாரமாக இருந்தாலன்றி, அந்த நீதியை எவ்வாறு செயல்படுத்தும் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை….’.
சோசலிசத்தின் மீது அம்பேத்கருக்கு இருந்த சீரான நம்பிக்கை கம்யூனிஸ்ட்டுகளின் மீது அதேரீதியில் இல்லாமல் போனதற்கு பல நியாயமான காரணங்கள் இருந்திருக்கின்றன. ஆனால் அதை அவர் பகையுணர்ச்சியாக வைத்துக்கொள்ளவில்லை. பல்வேறு மக்கள் பிரச்னைகளில் கம்யூனிஸ்ட் கட்சியினருடன் சேர்ந்து போராடியிருக்கிறார். அதேவேளையில் சாதியத்தைப் புரிந்துகொள்வதில் கம்யூனிஸ்ட்டுகளுக்கு இருந்த பார்வைக்குறைபாட்டை கடுமையாக விமர்சித்தார்.
காங்கிரஸ், பிரிட்டிஷ் ஆட்சி அமைத்த பல்வேறு குழுக்களை பலரும் புறக்கணித்த நிலையில் அம்பேத்கர் அவற்றிடம் கோரிக்கை சாசனங்களை அளித்தது தொடர்பாக கம்யூனிஸ்ட்டுகளுக்கும் அவர் மீது விமர்சனங்கள் இருந்தபோதிலும் அம்பேத்கர் முன்வைத்த தனித்தொகுதி, இரட்டை வாக்குரிமை, தனி செட்டில்மென்ட் போன்ற கோரிக்கைகளை ஆதரித்திருக்கிறார்கள். இதுபற்றி ‘ஆறு கோடி தீண்டாதார்’ என்கிற தலைப்பில் பி.டி.ரணதிவே எழுதி 1945ல் வெளியான பிரசுரம் அப்போதே தமிழிலும் வெளிவந்துள்ளது.
பொருளாதாரம் என்கிற அடிக்கட்டுமானத்தை மாற்றினால் சாதி என்கிற மேற்கட்டுமானம் தானாக மாறிவிடும் என்கிற கம்யூனிஸ்டுகளின் வாதத்தை அவர் மறுத்தார். அடிக்கட்டுமானமா மேற்கட்டுமானமா என்று துல்லியமாக பிரித்தறிய முடியாதபடிக்கு சாதி இருப்பதை சுட்டிக்காட்டினார். ஒரு வாதத்திற்காக, சாதி மேற்கட்டுமானம் தான் என்றே ஒப்புக்கொண்டாலும் மேலேயுள்ள அதை தகர்க்காமல் அடிக்கட்டுமானத்தை தகர்க்கமுடியாது என்று விளங்கப்படுத்தினார். இவரது இந்த விளக்கத்தை சரியென ஏற்றுக்கொள்வதற்கு கம்யூனிஸ்டுகளுக்கு குறிப்பிட்ட காலம் தேவைப்பட்டிருக்கிறது.
சமூக ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தையும் பொருளாதார ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தையும் இணைத்தே நடத்தவேண்டுமென்கிற நிலைப்பாட்டுக்கு வந்து சேர்ந்திருக்கிறார்கள். சாதியம் ஒழிக்கப்படக் கூடாதென்பதல்ல, பொருளாதாரக் கட்டமைப்பு மாறினால் சாதியும் ஒழிந்துவிடும் என்கிற யாந்திரீகமான – பிழையான பார்வைதான் எங்களை தடுத்துவிட்டது என்று பகிரங்கமாக சுயவிமர்சனம் செய்துகொண்டு கம்யூனிஸ்டுகள் களத்திற்கு வந்திருக்கிறார்கள்.
தொழிலாளிகளில் ஒருபகுதியினரை சாதியடிப்படையில் அம்பேத்கர் பிரிக்கிறார் என்று கம்யூனிஸ்ட்டுகளும், தலித் தொழிலாளர்களை – அவர்கள் மீதான தீண்டாமைகளைக் களையாமலே – தொழிலாளி வர்க்க ஒற்றுமை என்கிற வலைக்குள் இழுத்துப் போட்டுக்கொள்ள கம்யூனிஸ்ட்டுகள் முயற்சிப்பதாக அம்பேத்கரும் பரஸ்பர குமைச்சல் இருந்திருக்கிறது. இருதரப்பினரும் தத்தமது ஆதரவு தளத்தை தக்கவைக்கும் முயற்சியின் வெளிப்பாடாகவே இதை பார்க்கவேண்டியுள்ளது.
அதைப்போலவே பெரியாருக்கும் அம்பேத்கருக்கும் இடையே கருத்தியல் ரீதியான வேற்றுமைகள் இருந்ததையும் மறுப்பதற்கில்லை.
பார்ப்பனர்கள் எழுதிய சட்டத்தில் கையெழுத்து போட்டுவிட்டார் அம்பேத்கர். மற்றவர்களைப் பற்றிச் சிந்திக்கவில்லை – அண்ணல் அம்பேத்கரைக் குற்றஞ்சாட்டினார் பெரியார் ஈவெரா.
“சட்டம் எழுதியவர்கள் 6 பேர். அதில் 4 பேர் பார்ப்பனர்கள். அல்லாடி கிருஷ்ணமூர்த்தி அய்யங்கார், முன்ஷி, டி.டி. கிருஷ்ணமாச்சாரி, கோபால்சாமி அய்யங்கார் ஆகிய பார்ப்பனர்கள் எழுதினார்கள். இரண்டு பேரில் ஒருவர் அம்பேத்கர், மற்றவர் ஒரு சாய்பு.
அம்பேத்கர் கொஞ்சம் நம் உணர்ச்சி உள்ளவர். அவர் என்னைக் கேட்டார். உன்னுடைய மக்களுக்கு என்ன செய்ய வேண்டுமென்று. நிறைய விவரங்களை எல்லாம் அவரிடம் கொடுத்தேன். அதையெல்லாம் அவர் பேச ஆரம்பித்தார். உடனே, பார்ப்பனர்கள் இவருக்கு விலை கொடுத்துவிட்டார்கள். அது என்ன விலையென்றால், இவர் தன்னுடைய மக்களுக்கு 100 க்கு பத்து இடம் கல்வி, உத்தியோக வசதி கேட்டார். அவன் 15 ஆக எடுத்துக்கொள் என்று சொல்லிவிட்டான். அவனுக்குத் தெரியும் மூன்று அல்லது நான்கு பேர்கூட வர மாட்டார்கள் என்பது.
அவன் எழுதிக் கொடுத்த சட்டத்தில் இவர் கையெழுத்துப் போட்டுக் கொடுத்துவிட்டார். மற்றவர்களுடைய சங்கதியைப் பற்றி அவர் சிந்திக்கவில்லை.”
- பெரியார் ஈவெரா (04.11.1957 – சுவாமிமலை)
ஆரம்பம் முதலே திராவிடம் அம்பேத்கரின் சித்தாந்தங்களை ஏற்கவில்லை என்பதற்கு இதுவொரு சாட்சி.
கடந்த ஐம்பது ஆண்டுகளில் தமிழகம் தேசிய நீரோட்டத்தில் இருந்து விலகி திராவிட நீரோட்டத்தில் கலக்க காரணமானவர்கள் ஈவெரா வும் அறிஞர் அண்ணாவுமே.
அறிஞர் அண்ணாவிற்கு பின் பதவியேற்ற கலைஞர் மு.கருணாநிதி தொடங்கி இன்றைய முதல்வர் முக.ஸ்டாலின் வரை திராவிட சிந்தனைகளை மக்கள் மனங்களில் இருந்து விலக விடாமல் செயல்படுவதில் கவனமாக உள்ளனர்.
பெரியாரையும் அவரின் சித்தாந்தங்களையும் உயர்த்திப்பிடித்த திராவிடம் ஏனோ அம பேத்கரை உயர்த்திப்பிடிக்க முன் வரவில்லை.
அம்பேத்கர் – தலித் மக்களின் தலைவர்
வ.உ.சிதம்பரனார்- பிள்ளை சமூக தலைவர்
காமராசர் – நாடார் சமூக தலைவர்
பசும்பொன் முத்துராமலிங்க தேவர்- தேவர் சமூக தலைவர்
இமானுவேல் சேகரன்- பிற்படுத்தப்பட்ட சமூகத்தின் தலைவர்
என சாதித்தலைவர்களாக மாற்றப்பட அதே நேரத்தில்………
ஈவெரா – தந்தை பெரியார் – சமூக சீர்திருத்த போராளி
அண்ணாதுரை- பேரறிஞர்
மு.கருணாநிதி- முத்தமிழ் அறிஞர்
எம்ஜிஆர்- புரட்சித்தலைவர் பொன்மனச்செம்மல்
ஜெயலலிதா- புரட்சித்தலைவி
அன்பழகன் – பேராசிரியர்
என அவர்களை நம் மனதில் பதிய வைத்து சாதனை புரிந்தது திராவிடம்.
மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து தலைவர்களுமே மக்களுக்கான தலைவர்களே. அவர்களை சாதித்தலைவர்களாக சிறிய வட்டத்திற்குள் அடைக்காதீர்கள் அவர்களின் புகழை திக்கெட்டும் பரவச்செய்யுங்கள். அவர்களின் சித்தாந்தங்களை இளைய சமூகத்தின் மனதில் பதியச்செய்யுங்கள்.
சாதிகள் இல்லையடி பாப்பா
குலத்தாழ்ச்சி உயர்த்தி சொல்லல் பாவம்
என்ற முண்டாசுக்கவிஞனின் வழியில் சாதிகளற்ற சமத்துவ சமுதாயத்தை படைக்க முன் வாருங்கள்.
அம்பேத்கர் ஒரு தலைசிறந்த சட்ட மாமேதை.
அம்பேத்கர் ஒரு தலைசிறந்த சமூக நீதிப்போராளி
அம பேத்கர் இந்த தேசத்தின் அடையாளம்.
தயவுசெய்து அவருக்கு சாதிச்சாயம் பூசி அவமதிக்காதீர்கள்.
ஆயிரம் முறை அம்பேத்கர் அம்பேத்கர் என உச்சரிப்பதால் அவர் புகழ் பரவி விடாது. அவரின் சித்தாந்தங்களை வளர் இளம் தலைமுறையிடம் கொண்டு செல்லுங்கள்.
சாதி பாகுபாடற்ற சமத்துவ தமிழகத்தை உருவாக்க பாடுபடுங்கள்
அம்பேத்கர் – இவர் வெறும் தலைவரில்லை – இந்திய தேசத்தின் அடையாளம்