

திருச்சி மணப்பாறையில் பாரத சாரண சாரணியர் இயக்க வைரவிழா மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு நினைவு பெருந்திரளணி நடந்துவருகிறது. இந்நிகழ்வில் 24க்கும் மேற்பட்ட மாநிலங்களைச் சேர்ந்தவர்களும், 4 வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களும் மேற்பட்டோர்கள் பங்கேற்று உள்ளார்கள். இதற்காக 1000க்கும் மேற்பட்ட தூய்மைக் காவலர்கள் பணியாற்றி வருகிறார்கள். இவர்கள் அதிகாலை 3 மணி முதலே தங்களின் பணியைத் தொடங்குகிறார்கள். இவர்களின் பணிகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தூய்மைக் காவலர்களுடன் இணைந்து அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மதிய உணவு உட்கொண்டு நன்றிகளையும் தெரிவித்தார்.

தொடர்ந்து அங்கு அமைக்கப்பட்டுள்ள கூடாரங்களுக்கு சென்று பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்களின் அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார். அவர்களால் அமைக்கப்பட்டுள்ள நுழைவுவாயிலில் ஏறிய அமைச்சர் கூடாரங்களைப் பார்வையிட்டு அவர்களுக்கு வாழ்த்துகள் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் பங்கேற்றவர்களின் பாதுகாப்பிற்காக கிட்டத்தட்ட 600 சி.சி.டி.வி கேமிராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதனை கண்காணிக்கும் அறைக்கும் நேரடியாக சென்ற அமைச்சர் அவர்களின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.
