
தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் அறிக்கை
பாஜகவை விமர்சிப்பதாக நினைத்துக் கொண்டு நீதிமன்றத்தை அவமதிக்கிறார் செல்வப்பெருந்தகை.

எச்சரிக்கையாக பேசவில்லை எனில் நீதிமன்றத்தின் எச்சரிக்கையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்
அதிமுக உள்கட்சி விவகாரங்கள் தொடர்பாக விசாரிக்க தேர்தல் ஆணையத்திற்கு அனுமதி வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுகவில் நடப்பவை அக்கட்சியின் உள் விவகாரம். அதிமுகவைச் சேர்ந்தவர்களும், அதிமுகவில் இருந்தவர்களும்தான் வழக்கு தொடுத்துள்ளனர். அதில்தான் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதில் பாஜகவுக்கு எவ்வித தொடர்பும் இல்லை. இருக்கவும் முடியாது.
ஆனால், “தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அவர்கள், அதிமுக உள்கட்சி விவகாரத்தில், சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பின் பின்னணியில் பாஜக இருக்கிறது” என போகிற போக்கில் புழுதிவாரி தூற்றியிருக்கிறார். பாஜகவை விமர்சிப்பதாக நினைத்துக் கொண்டு, சென்னை உயர் நீதிமன்றத்தை அவமதித்திருக்கிறார். இது கடும் கண்டனத்திற்குரியது.

கடந்த பத்தரை ஆண்டுகளாக இந்தியாவை ஆள்கிறது பாஜக. எத்தனையோ வழக்குகளில் மத்திய அரசுக்கு எதிராக நீதிமன்றங்கள் தீர்ப்பளித்துள்ளன. மத்திய அரசை கண்டிக்கவும் செய்திருக்கின்றன. நீதிபதிகளை நியமனம் செய்வது மத்திய அரசு அல்ல. உச்ச நீதிமன்றம் அமைக்கும் சில நீதிபதிகள் கொண்ட கொலீஜியம் என்ற குழுதான் நீதிபதிகளை தேர்வு செய்கிறது. இதில் மத்திய அரசின் பங்கு என்பது சிறு துளிதான்.
நீதிபதிகள் நியமனத்தில் சீர்திருத்தங்கள் செய்ய மத்திய அரசு சட்டத்திருத்தம் கொண்டு வந்தபோது உச்ச நீதிமன்றம் அதற்கு தடை விதித்தது. உண்மை நிலை இவ்வாறு இருக்க, அதிமுக உள்கட்சி விவகாரங்களில் உயர் நீதிமன்ற தீர்ப்பின் பின்னணியில் பாஜக இருப்பாக காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியிருப்பது நீதிமன்ற அவமதிப்பாகும். தீர்ப்புக்கு உள்நோக்கம் கற்பிப்பவர்கள் மீது நீதிமன்றம் தாமாக முன்வந்து நடவடிக்கை எடுத்த வரலாறுகள் ஏராளம் உண்டு. எனவே, செல்வப்பெருந்தகை எச்சரிக்கையாக பேச வேண்டும். இல்லையெனில் நீதிமன்றத்தின் எச்சரிக்கையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
ஏ.என்.எஸ்.பிரசாத்
தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர்
மொபைல்: 9840170721