

திருச்சிராப்பள்ளி மாவட்டம் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருப்பராய்த்துறை கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ தாருகாவனேஸ்வரர் திருக்கோவிலுக்கு சொந்தமான நந்தவனம் கிராமத்தில் திருப்பராய்த்துறையில் உள்ள ஒரு தனியார் அமைப்பு சட்டவிரோதமாக மின் மோட்டார் பொருத்தி மின்சாரத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

ஆனால் அதே நந்தவனம் கிராமத்தில் வசித்து வரும் மக்களுக்கு எந்த விதமான மின்சார வசதியோ குடிநீர் வசதியோ செய்து தராமலும் அவர்களை அந்த இடத்திலிருந்து அப்புறப்படுத்துவதற்கும் திருக்கோவிலின் நிர்வாக அதிகாரி திருமதி ராகினி பல ஆண்டுகளாக கடும் முயற்சியில் ஈடுபட்டு அவர்களுக்கு பல வகைகளில் மன உளைச்சலை ஏற்படுத்தி வருவதை நாம் தொடர்ந்து நம்முடைய செய்தியில் பதிவு செய்து வருவதோடு அதை திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுக்கும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்களுக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு முக.ஸ்டாலின் அவர்களுக்கும் தொடர்ந்து அவர்களின் கவனத்திற்கு இந்த செய்திகளை கொண்டு சென்று கொண்டிருந்தோம்.

அதன் தொடர்ச்சியாக இன்று திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் திரு.பிரதீப் குமார் அவர்கள் சட்டவிரோதமாக மின் இணைப்பு பெறப்பட்டுள்ள அந்த தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான கட்டிடத்திலிருந்து மின் இணைப்புகளை உடனடியாக துண்டிக்குமாறு அரசாணை வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இது நியூ திருச்சி டைம்ஸ் பத்திரிகைக்கு மட்டும் கிடைத்த வெற்றி அல்ல ஒட்டுமொத்தமாக பல ஆண்டுகளாக தங்களுடைய உரிமைகளுக்காக போராடிவரும் நந்தவனம் கிராம மக்களுக்கு இந்த ஒட்டுமொத்த வெற்றியும் சமர்ப்பணம் செய்யப்பட வேண்டும். காரணம் நாமெல்லாம் ஒரு மணி நேரம் மின்சாரம் இல்லாமலோ நல்ல குடிநீர் கிடைக்காமலோ தவிக்கும் சூழ்நிலை வந்தால் உடனடியாக மிகப்பெரிய போராட்டத்திற்கு இறங்குவோம். ஆனால் கடந்த 14 ஆண்டுகளாக காவிரி படுகையில் வாழ்ந்து வந்தாலும் தாகத்திற்கு நல்ல குடிநீர் கிடைக்காமலும் கடும் கோடைகாலத்திலும் கூட மின்சார வசதி இல்லாமல் கடுமையான இன்னல்களுக்கு ஆளாகி வந்த அந்த கிராம மக்கள் மிக நெடிய போராட்டத்திற்கு பிறகு மெல்ல மெல்ல தங்களுக்கான விடியலை பெற தொடங்கியுள்ளதற்கான முன்னோட்டமே இந்த வெற்றி செய்தி.

இதற்கு காரணமான தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க ஸ்டாலின் அவர்களுக்கும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.சேகர் பாபு அவர்களுக்கும் திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் திரு.பிரதீப் குமார் அவர்களுக்கும் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர்கள் திருமதி.கல்யாணி அவர்களுக்கும் திரு.லட்சுமணன் அவர்களுக்கும் நிர்வாக அதிகாரி திருமதி.அகிலாண்டேஸ்வரி அவர்களுக்கும் இந்த முயற்சிகளுக்கு பக்க பலமாக துணை நின்ற சிவ சிவா அவர்களுக்கும் நியூ திருச்சி டைம்ஸ் நந்தவனம் கிராம மக்கள் சார்பாக நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றது.

திருச்சி மாவட்டம், திருவரங்கம் வட்டம், திருப்பராய்துறை கிராமம் அருள்மிகு தாருகாவனேஸ்வரர் திருக்கோயிலுக்கு சொந்தமான நந்தவனம் என்ற இடத்தில் அமைந்துள்ள ராமகிருஷ்ண தபோவனத்தால் நிறுவப்பட்ட மின் மோட்டார் மின் இணைப்புகள் இந்து சமய அறநிலையத்துறையால் அனுமதி ஏதும் வழங்கப்படவில்லை தற்போது மின்சார இணைப்பை திரும்ப பெற்றுக்கொள்ள துறை ரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு கோப்பு நடவடிக்கையில் உள்ளது.
மேலும் நந்தவனம் பகுதி மக்களுக்கு அடிப்படை வசதி ஏற்படுத்தி தருவது தொடர்பாக கோப்பு இணை ஆணையர் அலுவலகத்தில் நடவடிக்கையில் உள்ளது என திருச்சிராப்பள்ளி இந்து சமய அறநிலையத்துறை, உதவிஆணையர், தெரிவித்துள்ளார் என்ற விவரம் மனுதாரருக்கு தெரிவிக்கப்படுகிறது.
நியூ திருச்சி டைம்ஸ் இது என்றென்றும் சாமானிய மக்களின் மனசாட்சியாக உண்மைக்கு ஆதரவான நிலையிலேயே துணை நிற்கும் என்பதை இந்த நேரத்தில் மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கின்றோம்.