

மாரியப்பன்………
ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோவிலின் இணை ஆணையராக பதவியில் இருந்தவர். முன்பே ஸ்ரீரங்கம் அரங்கநாதர் திருக்கோவிலின் இணை ஆணையராக இருந்து பல்வேறு வகைகளில் மிகவும் பொறுப்போடு தன் பணிகளை திறம்பட செய்தவர் பின்பு திருஆனைக்காவல் அருள்மிகு ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோவிலுக்கு இணை ஆணையராக பதவி ஏற்ற பிறகு அந்த திருக்கோவிலின் வருமானத்தை பெருக்கியதோடு பல்வேறு வகைகளில் திருக்கோவிலில் சுற்றிக் கொண்டிருந்த மனிதர்களை அப்புறப்படுத்தி நிர்வாகத்தை சீராக கட்டமைத்து கோவிலை மிகவும் சிறப்பான முறையில் பராமரித்து வந்தவர். அதன் காரணமாக அங்கிருந்த ஒரு சிலரின் எதிர்ப்பிற்கு ஆளாகி பின்பு மீண்டும் ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் திருக்கோவிலுக்கு இணை ஆணையராக பதவியில் அமர்ந்தார்.
அவர் வருவதற்கு முன்பு திருக்கோவிலில் இருந்த இடர்பாடுகளையும் சில ஏஜென்ட்களின் நடவடிக்கைகளையும் இவர் வந்த பிறகு முற்றிலுமாக தடுத்து நிறுத்தி கோவிலின் புனிதத்தை காப்பதற்கான அனைத்து முயற்சிகளிலும் ஈடுபட்டார். கோவிலின் திருவிழாக்கள் செம்மையாக நடப்பதற்கும் பக்தர்களுக்கு எந்த விதமான குறைபாடுகளும் ஏற்படாத வண்ணம் தரிசனம் செய்வதற்கு உரிய வசதிகளையும் மிகவும் சிறப்பாக செய்து கொடுத்தார். அரசியல்வாதிகளின் அழுத்தம் உள்ளூர் பிரமுகர்களின் அழுத்தம் உள்ளுக்குள்ளேயே இருக்கும் ஒரு சிலரின் அழுத்தம் என அனைத்தையும் தாங்கிக் கொண்டு அத்தனைக்கும் இடையிலும் தன்னுடைய நிர்வாகப் பணியை மிகவும் சிறப்பாக செய்து வந்தவர் இந்த மாரியப்பன்.
இவரிடம் இருக்கும் ஒரே ஒரு குறை அவ்வளவு எளிதாக இவரை நாம் சந்தித்து விட முடியாது, என்ன காரணமோ தெரியவில்லை பத்திரிகையாளர்களுக்கும் இவருக்கும் இடையில் ஒரு ஏழாம் பொருத்தமே இருந்து வந்தது. அவ்வளவு எளிதாக இவரை நாம் அணுக முடியாது , அலைபேசியில் அழைப்பு செய்தாலும் எடுத்துப் பேச மாட்டார். கிட்டத்தட்ட பத்திரிகையாளர்களை புறக்கணிப்பார் என்று தான் கூற வேண்டும். என்னதான் அவர் பத்திரிக்கையாளர்களை புறக்கணிப்பு செய்தாலும் கோவில் நிர்வாக விஷயத்தில் அவரின் பணி என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
இன்று அவர் மாற்றலாகி மதுரைக்கு செல்கின்றார், இந்த நேரத்தில் எந்த அரசு அதிகாரிகளிடமும் எந்த அரசியல்வாதிகளிடமும் எந்த விதமான பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் சாமானிய மக்களின் மனசாட்சியாக செயல்படும் நியூ திருச்சி டைம்ஸ் இந்த சாமானிய இணை ஆணையர் அவர்களை அன்போடு மரியாதையோடும் வாழ்த்தி வழி அனுப்புகின்றது.
மாரியப்பன் போன்ற நேர்மையான அதிகாரிகள் எந்த இடத்தில் இருந்தாலும் எதற்கும் கலங்காமல் தன்னுடைய பணிகளை திறம்பட செய்வார்கள் என்பதற்கு இந்த மாரியப்பன் ஒரு நல்ல உதாரணம்.
சென்று வாருங்கள் மாரியப்பன் சார். விரைவில் மீண்டும் ஸ்ரீரங்கத்தில் உங்களை அரங்கநாதர் தன்னருகில் அழைத்து அமர வைத்து தன் கோவில் நிர்வாகப் பணிகளை கவனிக்க வைப்பார் என்று திடமாக நம்புகின்றோம்.
வாழ்த்துகள் மாரியப்பன்.