
தமிழகத்தில் சர்வசாதாரணமாக நடக்கும் கொலைகள், பாலியல் துன்புறுத்தல், போதை கலாச்சாரம் என சட்ட விரோத செயல்கள் தலைவிரித்தாடுகிறது. இவற்றை எல்லாம் தடுக்க வேண்டிய காவல்துறை ஆளும்கட்சியின் ஏவல் ஆளாக செயல்பட்டுக் கொண்டு இருப்பது வெட்கக்கேடானது.
நேற்று ஈரோட்டில் பட்டபகலில் நடுரோட்டில் காரில் குடும்பத்தினருடன் வந்தவரை வெட்டி கொலை செய்யும் காட்சி, தமிழகத்தில் நிம்மதியாக வாழ முடியாது என மக்கள் பயப்படும் நிலையை ஏற்படுத்தியுள்ளது.

அதே சமயம் நேற்று காவல்துறை ஒவ்வொரு டாஸ்மாக் கடையின் முன்பும் குவிக்கப்பட்டு அதற்கு பாதுகாப்புக்கு நின்று கொண்டு இருந்தனர். சட்டசபை, முதல்வர் வீடு உள்ள பகுதிகள் வழியாக செல்லும் வாகனங்களை கடுமையான சோதனை நடத்தி உள்ளனர். காவல்துறை ஆளும் கட்சிக்கு பணி செய்வதே தலையாய பணி எனக் கருதி செயல்படுகிறது.
தமிழக அரசுக்கு எதிராக ஜனநாய வழியில் போராடுவதை தடுப்பதில் தங்களது முழு சக்தியை செயல்படுத்துகிறது. திருப்பரங்குன்றம் மலையை காத்திட இந்து முன்னணி ஆர்ப்பாட்டம் அறிவித்தபோது பல நூறு பேரை வீட்டு காவலில் வைக்கும் புதுமை திட்டத்தை அமல்படுத்தியது. அதேபோல் திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரில் சிறிய கிராம கோவிலில் பூஜை செய்ய சென்ற பக்தர்களையும் இந்து முன்னணியினரையும் சட்டவிரோதமாக அங்கங்கே கைது செய்து இன்றும் சிறையில் அடைத்து வருகிறது காவல்துறை. தமிழக காவல்துறையின் நடவடிக்கை ஜனநாயகத்தை குழி தோண்டி புதைத்த மிசா காலத்தில் நடந்தது போல இருக்கிறது.

கடந்த ஐந்தாண்டுகளில் நெல்லை மாவட்டத்தில் மட்டும் படுகொலைகள் நடந்துள்ளது என்று பத்திரிகை செய்திகள் தெரிவிக்கின்றன.
அதிலும் சென்னை சிந்தாதிரிப்பேட்டை பகுதி பாஜகவை சேர்ந்த பாலசந்தர் முதல் நெல்லை காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங், நெல்லை ஜாகிர் உசைன் கொலை வரை உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கிறது என காவல்துறையில் புகார் தெரிவித்த பின்னர் நடந்துள்ளது. கொலை மிரட்டல் விடுத்து கொலை நடக்கிறது என்பது எத்தகைய பயங்கரம்.
போதை பொருட்கள் நடமாட்டம் குறித்து தகவல் தெரிவிப்பவர்கள் குறித்த தகவல் குற்றவாளிகளுக்கு தெரிவிக்கப்படுகிறது. தகவல் தந்தவர் கொலைவெறி தாக்குதல் நடத்த காவல்துறையில் உள்ள கருப்பு ஆடுகளே துணை போகின்றனர் என்ற அச்சம் மக்களிடம் எழுந்துள்ளது.

சட்டம் ஒழுங்கையும் ஜனநாயகத்தையும் கட்டிக்காக்க வேண்டிய காவல்துறை ஆளும்கட்சிக்கு விசுவாசமாக நடப்பதையே தலையாய கடமையாக கருதி செயல்படுகிறது.
அரசின் குறைகளை, குற்றங்களை சுட்டிக் காட்டுபவர்கள் மீது சட்டத்தை ஏவி கைது செய்து சிறையில் அடைக்கிறது.
இந்துக்களின் நியாயமான கோரிக்கைகளை முடக்க மத அடிப்படைவாதிகளை ஏவிவிட்டு சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க துணைபோகிறது.
சட்டம் ஒழுங்கை பாதுகாக்க காவல்துறையை தன் கட்டுப்பாட்டில் வைத்து இருக்கும் தமிழக முதல்வர் ஒட்டுமொத்த காவல்துறையை ஆளும்கட்சியின் அடிமைகளாக செயல்பட வைக்கிறார்.
கொலைக்கு ஆயிரம் காரணங்களை காவல்துறை கூறலாம். ஆனால் கொலை நடத்தப்படும் விதமான கொடூரம் காவல்துறை, நுண்ணறிவு பிரிவின் செயல் இழந்த நிலையை வெட்டவெளிச்சமாக்குகிறது. இது மிகுந்த கவலை அளிக்கும் விஷயம்.

காவல்துறையை எதிர்கட்சியினரை முடக்கவும் ஆளும்கட்சியினருக்கு பாதுகாப்பு அலங்காரத்திற்கு நிற்க வைப்பதை கைவிட வேண்டும்.
சில பல நல்ல அதிகாரிகளையும் கூட கைப்பாவைகளாக்கி ஆட வைக்கிறது திமுக அரசு. குற்ற நடவடிக்கைகளை, சட்டம் ஒழுங்கை காக்க வேண்டிய காவல்துறை திமுக அரசுக்கு எதிராக ஜனநாயக ரீதியில் போராடுபவர்களை ஒடுக்கும் துறையாக இயக்குவது தமிழக அரசுக்கு அவமானம் என்பதை உணர வேண்டும்.
எனவே தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க தமிழக அரசும் காவல்துறையும் முன்னுரிமை தர வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.