மத்திய பிரதேச படகு விபத்து – துரை வைகோ MP அறிக்கை

மத்தியப் பிரதேசம் மாநிலம், ஜபல்பூர் அருகே நர்மதா ஆற்றில் அமைந்துள்ள பர்கி அணை நீர்த்தேக்கத்தில், கடந்த ஏப்ரல் 30ஆம் தேதி மாலை சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் பலர் உயிரிழந்ததுடன், பலர் காயமடைந்தனர். சிலரைத் தேடும் பணியும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இருவரின் மரணம் குறித்த செய்தியறிந்து மிகுந்த வருத்தமும் ஆழ்ந்த வேதனையும் அடைந்தேன்.

முதற்கட்ட தகவலின்படி, திடீர் காற்று, பலத்த மழை மற்றும் பெரிய அலைகள் காரணமாகப் படகு கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததாகத் தெரிய வருகிறது.

தமிழ்நாட்டிலிருந்து சுற்றுலா சென்றிருந்த எனது திருச்சி தொகுதியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் இந்த விபத்தில் சிக்கியதாக வந்த தகவலை அறிந்ததும், ஜபல்பூர் மாவட்ட ஆட்சியர் திரு. ராகவேந்திரா சிங் IAS அவர்களைத் தொடர்பு கொண்டு விபத்து குறித்த விரிவான தகவல்களைப் பெற்றேன். நடைபெற்று வரும் மீட்புப் பணிகள் மற்றும் இறந்தவர்கள் குறித்த விவரங்களையும் அறிந்துகொண்டேன்.

அதில், தமிழ்நாட்டைச் சேர்ந்த திரு. R. காமராஜ் அவர்களின் மனைவி திருச்சி நாவல்பட்டு திருமதி K. கார்குழலி (வயது 36) மற்றும் அவரது சகோதரரின் மனைவி திருப்பூர் தாராபுரம் திருமதி P. செளபாக்கியா (வயது 42) ஆகிய இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும்,

திரு. R. காமராஜ் (வயது 38), அவரது மகன் K. தமிழ்வேந்தன் (வயது 6), செளபாக்கியா அவர்களின் மகன் P. மயூரன் (வயது 8) ஆகிய மூவரையும் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும்,

புவிதரன் (வயது 10) மற்றும் இனியா (வயது 12) ஆகிய இரு குழந்தைகள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

நவீன உபகரணங்கள் கொண்ட ஹெலிகாப்டர் உதவியுடன் இராணுவத்தினர், மாநில பேரிடர் மீட்புப் படை, காவல்துறை, உள்ளூர் மீனவர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து தேடுதல் மற்றும் மீட்புப் பணியில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளதாகவும், இரவு முழுவதும் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்ததாகவும், அம்மீட்புபணிகள் தொய்வன்றி தொடர்வதாகவும் அவர் தெரிவித்தார்.

இச்சம்பவம் குறித்து மத்தியப் பிரதேச அரசு உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. இந்த விபத்துக்கான காரணங்களை உடனடியாக விசாரித்து, மனிதத் தவறுகள் இருப்பின் அதற்குப் பொறுப்பானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து உரிய தண்டனை வழங்க வேண்டும்.

அதோடு நில்லாமல், இந்தியா முழுவதும் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்கள் அனைத்திலும் பாதுகாப்பு ஏற்பாடுகளை உடனடியாக ஆய்வு செய்து, பாதுகாப்பு நடவடிக்கைகள் போதாத இடங்களை உடனடியாக மூடுவதற்கும், அனைத்து மாநில அரசுகளும் துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

தற்போது கோடை விடுமுறைக் காலம் என்பதால் பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர், சிறார்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் பலர் சுற்றுலாத் தலங்களுக்குச் சென்று மகிழ்வது இயல்பான ஒன்று. அவர்களது உயிர் பாதுகாப்பை உறுதி செய்வது அனைத்து அரசுகளின் முதன்மைக் கடமையாகும். ஜபல்பூர் சம்பவத்திலிருந்து படிப்பினை பெற்று, இனி இப்படியொரு துயரம் நடைபெறாத வண்ணம் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு ஒன்றிய மற்றும் மாநில அரசுகளை வலியுறுத்துகிறேன்.

காமராஜ் அவர்களின் மூத்த சகோதரர் திரு. சக்தி அவர்களைத் தொடர்பு கொண்டு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொண்டேன். மத்தியப் பிரதேச மாநில மற்றும் ஜபல்பூர் மாவட்ட நிர்வாகத்துடன் தொடர்ந்து நான் தொடர்பில் இருப்பதாகவும், எந்த உதவி தேவைப்பட்டாலும் தயங்காமல் என்னை அணுகுமாறும் கேட்டுக் கொண்டேன்.

இறந்த இருவரின் உடல்களையும் தனித்தனி சிறப்பு விமானத்தில் திருச்சிக்கு கொண்டு வர ஜபல்பூர் மாவட்ட ஆட்சியர் திரு. ராகவேந்திரா சிங் IAS அவர்களை கேட்டுக்கொண்டதையும், திருச்சி வந்தவுடன் அவ்வுடல்களை நாவல்பட்டு மற்றும் தாராபுரத்திற்கு கொண்டு செல்ல இரு அவசர ஊர்திகளை ஏற்பாடு செய்யுமாறு திருச்சி மாவட்ட ஆட்சியர் திரு. வே. சரவணன் IAS அவர்களைக் கேட்டுக் கொண்டதையும் அவரிடம் தெரிவித்தேன்.

மத்தியப் பிரதேசத்தில் பணியாற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த திரு. இளையராஜா IAS அவர்களும் எனக்கு இப்பணியில் உதவி செய்து வருகிறார். அவருக்கும், ஜபல்பூர் மாவட்ட ஆட்சியர் திரு. ராகவேந்திரா சிங் IAS அவர்களுக்கும், திருச்சி மாவட்ட ஆட்சியர் திரு. வே. சரவணன் IAS அவர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஜபல்பூர் அருகே ஏற்பட்ட இந்தப் படகு விபத்தில் உயிரிழந்த அனைவரின் ஆன்மாக்களும் அமைதி பெற வேண்டுகிறேன். அவர்களது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். தேடப்பட்டு வருபவர்கள் பத்திரமாக மீட்கப்பட வேண்டுகிறேன்.

இந்த இக்கட்டான தருணத்தில் அவர்களின் துயரத்தில் நானும் பங்கெடுக்கிறேன்.

துரை வைகோ
நாடாளுமன்ற உறுப்பினர் (திருச்சி)
முதன்மைச் செயலாளர்
மறுமலர்ச்சி திமுக
02.05.2026

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    திருச்சி – கரூர் புதிய தடத்தில் பசுமை சாலை & திருச்சி வடக்கு வட்ட சாலை திட்டங்களுக்கு புதிய திட்ட மதிப்பீடு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது! துரை வைகோ எம்.பி கோரிக்கை ஏற்பு!

    திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட தற்போதைய திருச்சி – கரூர் தேசிய நெடுஞ்சாலை மிகவும் குறுகலாகவும், அதிக வளைவுகள் கொண்டதாகவும் உள்ளது. மேலும், ஒருபுறம் காவிரி ஆறும் மறுபுறம் ரயில்வே இருப்புப் பாதையும் இருப்பதால், இந்த சாலையை அகலப்படுத்துவது சாத்தியமற்ற நிலை…

    சஞ்சீவி நகர், Y Junction, மாருதி நகர் — 16 ஆண்டுகளாக நீடித்த போக்குவரத்து ஒழுங்கின்மைகளுக்கு தீர்வு! ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது!

    திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலை 38ல், G Corner மட்டுமல்லாமல் இதே சாலையில், பல உயிர் பலிகள் ஏற்பட்டு வந்த மற்ற முக்கிய கருப்பு மையங்களான (Black Spots) சஞ்சீவி நகர், Y Junction…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *