நதியில் கரைந்த உயிர்கள் – கண்ணீர் கடலில் உறவுகள் – ஆறுதலாய் தோள் கொடுத்த துரை வைகோ

எனது திருச்சி நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட, திருச்சி, நாவல்பட்டு அண்ணா நகரில் வசித்துவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து நபர்கள், மத்தியப் பிரதேசம் ஜபல்பூர் பர்கி அணை நீர்த்தேக்கத்தில் படகு கவிழ்ந்த விபத்தில் சிக்கிக் கொண்ட செய்தி அறிந்து கவலையும் வருத்தமும் கொண்டேன். உடனடியாக மத்தியப் பிரதேசம் ஜபல்பூர் மாவட்ட நிர்வாகத்தைத் தொடர்பு கொண்டேன்.

அப்போதைய முழுநிலவரத்தை கேட்டு தெரிந்துகொண்டதுடன், காணாமல் போனவர்களைப் பத்திரமாக மீட்கவும், கண்டெடுக்கப்பட்ட இரண்டு உடல்களை கண்ணியமாகத் திருச்சி விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கவும் ஏற்பாடுகளைச் செய்தேன்.

மேலும், விமான நிலையத்திலிருந்து திருச்சி அண்ணா நகருக்கு ஒரு அவசரஊர்தியும், திருப்பூர் தாராபுரத்திற்கு மற்றொரு அவசரஊர்தியும் ஏற்பாடு செய்யுமாறு திருச்சி மாவட்ட ஆட்சியருக்கு வேண்டுகோள் விடுத்தேன்.

இதன் அடிப்படையில், நேற்று நள்ளிரவு திருச்சி வந்தடைந்த இரண்டு உடல்களையும், நமது மாவட்டச் செயலாளர்கள் அண்ணன் திரு. வெல்லமண்டி சோமு, சகோதரர் திரு. மணவை தமிழ்மாணிக்கம் தலைவரின் உதவியாளர் அண்ணன் திரு. அடைக்கலம் மற்றும் கழகத் தோழர்கள் நேரடியாகச் சென்று அவ்வுடலுக்கு மாலைவைத்து மரியாதை செலுத்தி, அவர்களது இல்லங்களுக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், அவர்களது இல்லம் சென்று இறுதி நிகழ்வில் கலந்துகொண்டு கழகத்தின் சார்பிலும், எனது சார்பிலும் அஞ்சலி செலுத்தினர். இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு துணை நின்றனர்.

கடந்த சில நாட்களாக வெளி மாநிலத்தில் இருந்த நிலையில், இந்தத் துயரச் சம்பவத்தில் பங்கேற்கும் வகையில், எனது பயணத்தை முன்கூட்டியே முடித்துக்கொண்டு, நேற்று (02.05.2026) இரவு சென்னை வந்தடைந்து, இன்று (03.05.2026) காலை திருச்சிக்கு வந்தேன்.

திருச்சி விமான நிலையத்திலிருந்து நேரடியாக நாவல்பட்டு, அண்ணா நகரில் உள்ள திரு. காமராஜ் அவர்களின் இல்லத்திற்குச் சென்று, காமராஜ் அவர்களின் வயதான தாய், தந்தை மற்றும் உறவினர்களிடம் அவர்களது துயரத்தைப் பகிர்ந்துகொண்டு ஆறுதல் கூறினேன்.

வீடுவீடாக காய்கறி வியாபாரம் செய்து சக்தி மற்றும் காமராஜ் ஆகிய தனது இரு மகன்களையும் படிக்கவைத்து ஆளாக்கியவர் தான் இந்த பெரியவர். தனது மகன்கள் இருவரும் நல்ல பணியில் இருந்துள்ளனர். இந்நிலையில், காமராஜ் உட்பட விபத்தில் சிக்கிய மற்ற மூவரையும் பாதுகாப்புடன் மீட்போம் என்ற நம்பிக்கையும் பொய்த்துப்போனதை அவரிடம் வருத்தத்துடன் தெரிவித்தேன்.

காமராஜ் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களின் இழப்பு பெரியவரை பெரிதும் பாதித்துள்ளதை உணர்ந்தேன். மீட்கப்பட்ட காமராஜ் அவர்களின் மகன் புவிதரனுக்கு இப்போது நீங்கள் இருவரும் தான் ஒரே ஆதரவு. எனவே உங்கள் உடல் நலனில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும், அதற்காக இருவரும் முழு உடல் பரிசோதனையை மேற்கொண்டு மருத்துவரின் அறிவுரைப்படி நெடு நாள் வாழ்ந்து காமராஜின் மகனை ஆளாக்க வேண்டும் என்றும் எனது விருப்பத்தை தெரிவித்தேன்.

தங்களுக்கு எந்த உதவி எப்போது தேவைப்பட்டாலும் எனது நாடாளுமன்ற அலுவலகத்தை தொடர்புகொள்ள வேண்டுமாறு கேட்டுக்கொண்டேன்.

இன்று, மேலும் மூன்று உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில், அவற்றை விரைந்து அனுப்பி வைக்க ஜபல்பூர் மாவட்ட ஆட்சியரை இன்று அதிகாலையிலேயே தொடர்பு கொண்டு வலியுறுத்தினேன். இன்றே காமராஜ் மற்றும் அவரது இளைய மகன் ஆகியோரின் உடலை திருச்சிக்கும் அவரது உறவினரின் உடலை தாராபுரத்திற்கு கோவை விமான நிலையம் வழியாகவும் அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொண்டதையடுத்து இன்று மாலை மேலே குறிப்பிட்டவாறு அனுப்பி வைக்கப்படவுள்ளது.

திருச்சி துப்பாக்கி தொழிற்சாலை மற்றும் HAPP பொதுத்துறை நிறுவனத்தில் காமராஜுடன் பணியாற்றிய தோழர்கள் பலர் வந்திருந்து உடல்களை பெற்று இறுதி அஞ்சலியில் கலந்துகொண்டு அக்குடும்பத்திற்கு உறுதுணையாக இருக்கின்றனர். அவர்கள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்தேன்.

இந்த தேடுதல் பணியிலும், உடல்களை உரிய முறையில் அனுப்பி வைத்ததிலும் பெரும் பங்காற்றிய ஜபல்பூர் மாவட்ட ஆட்சியர் திரு. ராகவேந்திரா சிங் IAS, மற்றும் திரு. இளையராஜா IAS ஆகியோருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

நேற்றும், இன்றும் உடலை பெற்றதிலிருந்து அவர்களின் இல்லம் வரை சென்று ஒப்படைத்து இறுதி மரியாதை செலுத்திய வரை கடமையாற்றிய மாவட்ட செயலாளர்கள் அண்ணன் வெல்லமண்டி இரா. சோமு, சகோதரர் மணவை தமிழ்மாணிக்கம் உள்ளிட்ட அனைத்து கழக தோழர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை சமர்ப்பிக்கிறேன்.

துரை வைகோ
நாடாளுமன்ற உறுப்பினர் (திருச்சி)
முதன்மைச் செயலாளர்
மறுமலர்ச்சி திமுக
03.05.2026

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    மத்திய பிரதேச படகு விபத்து – துரை வைகோ MP அறிக்கை

    மத்தியப் பிரதேசம் மாநிலம், ஜபல்பூர் அருகே நர்மதா ஆற்றில் அமைந்துள்ள பர்கி அணை நீர்த்தேக்கத்தில், கடந்த ஏப்ரல் 30ஆம் தேதி மாலை சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் பலர் உயிரிழந்ததுடன்,…

    திருச்சி – கரூர் புதிய தடத்தில் பசுமை சாலை & திருச்சி வடக்கு வட்ட சாலை திட்டங்களுக்கு புதிய திட்ட மதிப்பீடு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது! துரை வைகோ எம்.பி கோரிக்கை ஏற்பு!

    திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட தற்போதைய திருச்சி – கரூர் தேசிய நெடுஞ்சாலை மிகவும் குறுகலாகவும், அதிக வளைவுகள் கொண்டதாகவும் உள்ளது. மேலும், ஒருபுறம் காவிரி ஆறும் மறுபுறம் ரயில்வே இருப்புப் பாதையும் இருப்பதால், இந்த சாலையை அகலப்படுத்துவது சாத்தியமற்ற நிலை…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *