
இன்று (21.08.2026) மாலை 5.30 மணி அளவில் திருச்சியில் உள்ள ரயில்வே கோட்ட மேலாளர் (DRM – Trichy) அவர்களை அவரது அலுவலகத்தில் சந்தித்து, திருச்சி மக்களின் சார்பில் பல்வேறு முக்கிய ரயில்வே கோரிக்கைகள் தொடர்பாக விரிவாக எடுத்துரைத்தார் துரை வைகோ எம்.பி.

முதலாவதாக, தற்போது வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே இயக்கப்படும் 17077/17078 திருச்சி – சார்லப்பள்ளி விரைவு ரயிலை தினசரி சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயிலாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தினார். இவ்விரைவு ரயில் திருச்சியையும் ஹைதராபாத் மற்றும் தெலங்கானா பகுதிகளையும் நேரடியாக இணைக்கும் முக்கியமான ரயில் சேவையாக இருப்பதுடன், திருப்பதி, ரேணிகுண்டா, குண்டூர், நெல்லூர், விஜயவாடா உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கும் பயணிகளுக்கு இணைப்பை வழங்குகிறது. இதுதொடர்பாக ஒன்றிய ரயில்வே அமைச்சர் அவர்களிடமும் ஏற்கனவே கோரிக்கை அளித்திருப்பதையும் தெரிவித்தார் துரை வைகோ.

அடுத்ததாக, திருச்சி – சாமராஜநகர் இடையே இரவு நேர நேரடி விரைவு ரயில் சேவையை அறிமுகப்படுத்த வேண்டும் என்ற நீண்டநாள் கோரிக்கையை முன்வைத்தார். இதுதொடர்பாக ஒன்றிய ரயில்வே அமைச்சர் அவர்களிடம் ஏற்கனவே பலமுறை பிரதிநிதித்துவம் அளித்துள்ளதையும் தெரிவித்தார் துரை வைகோ எம்.பி.
திருச்சி மற்றும் தெற்கு கர்நாடகா பகுதிகளுக்கு இடையே நேரடி ரயில் இணைப்பு இல்லாததால், பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருவதையும் எடுத்துரைத்தார்.

மேலும், திருச்சி – மயிலாடுதுறை 16833/16834 MEMU ரயிலுக்கு திருவெறும்பூர் ரயில்வே நிலையத்தில் நிறுத்தம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தினார். கடந்த சந்திப்பின்போது, இந்த நிறுத்தத்தை வழங்குவது சாத்தியமானது என்றும் சாதகமாகப் பரிசீலிக்கலாம் என்றும் DRM அவர்கள் தெரிவித்திருந்ததை நினைவூட்டினார் துரை வைகோ எம்.பி. இதுதொடர்பாக தெற்கு ரயில்வே பொது மேலாளர் மற்றும் ஒன்றிய ரயில்வே அமைச்சர் அவர்களிடமும் ஏற்கனவே கோரிக்கை அளித்திருப்பதையும் தெரிவித்தார்.

மேலும், ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தில் பயணிகளுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்தார். குறிப்பாக, சுகாதாரமற்ற நிலையில் உள்ள கழிப்பறைகளை முறையாகப் பராமரித்தல், பயணிகள் காத்திருப்பு அறைக்குள் தெருநாய்கள் வருவதைத் தடுக்க நடவடிக்கை எடுத்தல், கூடுதல் மொபைல் சார்ஜிங் வசதிகளை ஏற்படுத்துதல் மற்றும் நிலுவையில் உள்ள லிப்ட் பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவருதல் ஆகியவற்றை எடுத்துரைத்தார் துரை வைகோ எம்.பி.

இதற்கு பதிலளித்த DRM , ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள குறைபாடுகளை செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் சரிசெய்வதாக உறுதியளித்தார்.
மேலும், ஸ்ரீரங்கம் உள்ளிட்ட சில ரயில் நிலையங்களில் நாய்கள் தொல்லை இருப்பது தொடர்பாக, ரயில்வே நிர்வாகம் பாதிக்கப்பட்ட ரயில் நிலையங்களின் பட்டியலை வழங்கினால், அதனை மாநகராட்சி ஆணையர் அவர்களிடம் தெரிவித்து, உரிய நடவடிக்கை எடுக்க பரிந்துரைப்பதாகவும் தெரிவித்தார் துரை வைகோ எம்.பி.
மேலும், கடந்த 20.05.2026 அன்று அளித்திருந்த கோரிக்கையை குறிப்பிட்டு, 22672 தேஜஸ் சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் மற்றும் 16615 செம்மொழி எக்ஸ்பிரஸ் ரயில்களில் திருச்சி பயணிகளுக்கான பயணிகள் ஒதுக்கீட்டை (Quota) அதிகரிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். தற்போதைய குறைந்த ஒதுக்கீடு காரணமாக திருச்சியில் இருந்து பயணம் செய்யும் பொதுமக்கள் உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட் பெறுவதில் சிரமங்களை எதிர்கொண்டு வருவதை சுட்டிக்காட்டினார்.
அதேபோல், கடந்த 20.05.2026 அன்று அளித்திருந்த கோரிக்கையை குறிப்பிட்டு, திருச்சி ரயில் நிலையத்தில் அனைத்து நடைமேடைகளிலும் பெட்டி நிலை குறியீட்டு பலகைகள் (Coach Indication Boards) முறையாக அமைக்க வேண்டும், 8-வது நடைமேடையில் செயல்படாமல் உள்ள குடிநீர் வசதியை மீண்டும் செயல்படுத்த வேண்டும், மேலும் கல்லுக்குழி நுழைவாயிலில் நடைபெற்று வந்த எஸ்கலேட்டர் பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்றும் வலியுறுத்தினார் துரை வைகோ எம்.பி.
இந்தப் பணிகள் மற்றும் குறைபாடுகள் ஜூலை மாத இறுதிக்குள் சரிசெய்யப்படும் என முந்தைய சந்திப்பின்போது ரயில்வே அதிகாரிகள் உறுதியளித்திருந்ததைச் சுட்டிக்காட்டி, அவற்றின் தற்போதைய நிலை குறித்தும் கேட்டறிந்தார்.
இதற்கு பதிலளித்த அதிகாரிகள், கல்லுக்குழி நுழைவாயிலில் எஸ்கலேட்டர் பணிகள் அனைத்தும் தற்போது முடிக்கப்பட்டுவிட்டதாகவும், பெட்டி நிலை குறியீட்டு பலகைகள் அமைக்கும் பணிகள் இன்னும் ஒரு மாதத்திற்குள் முடிக்கப்படும் என்றும் தெரிவித்தனர். 8-வது நடைமேடையில் செயல்படாமல் உள்ள குடிநீர் வசதியையும் விரைந்து சரிசெய்து மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டுவர உறுதியளித்தனர்.
மேலும், திருச்சி மாவட்டத்தில் நீண்டகாலமாக நிலுவையில் உள்ள மேலக்கல்கண்டார்கோட்டை LC No.323, ஸ்ரீரங்கம் வெள்ளைக் கோபுரம் அருகிலுள்ள LC No.244 மற்றும் குமரேசபுரம் LC No.317 ஆகிய இடங்களில் முன்மொழியப்பட்டுள்ள ரயில்வே மேம்பாலப் பணிகளின் தற்போதைய நிலை, நிலுவையில் உள்ள பணிகள் மற்றும் எதிர்பார்க்கப்படும் நிறைவு காலம் குறித்த விரிவான நிலவர அறிக்கையை கேட்டுள்ளார்.
துரை வைகோ எம்.பி அவர்களது கோரிக்கைகளை திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் கவனமாகக் கேட்டுக் கொண்டு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் எடுத்துச் சென்று உரிய முறையில் பரிசீலித்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக உறுதியளித்தார்.
#DuraiVaiko #tvk #mdmk #cmvijay #trichy





