

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் விவசாய அணியின் மாநில நிர்வாகியும் ஸ்ரீரங்கத்தின் அரசியல் பிரமுகருமான கோவிந்தராஜன் என்கின்ற கோவிந்தன் பண மோசடி வழக்கில் இன்று காவல்துறையினரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
திருச்சிராப்பள்ளி மாவட்டம் ஸ்ரீரங்கம் தெற்கு தேவி தெருவில் உள்ள சுமார் 17 ஏக்கர் நிலத்தை அதன் உரிமையாளராக சென்னையை சேர்ந்த ரங்கசாமி கோவிந்தன் வசம் கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு குத்தகைக்கு கொடுத்திருந்தார். அதில் கோவிந்தன் தென்னை நாற்றங்கால் பண்ணை அமைத்து விவசாயம் செய்து வந்தார்.

ஆயிரம் தென்னை மரங்களும் ஐநூறு மாமரங்களும் மூன்று செம்மரங்களும் வளர்க்கப்பட்டு பராமரிக்கப்பட்டும் வந்தன. தென்னை நாற்றுக்கள் விற்பனைக்கான பிரதான இடமாக செயல்பட்டு வந்தது.
இந்த சூழலில் கோவிந்தன் ஆந்திராவை சேர்ந்த தேவராஜன் என்கின்ற நபரிடம் போலியான ஆவணங்கள் தயார் செய்து நிலத்தை 19 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ய முயற்சி செய்துள்ளதாகவும் முன் பணம் ஆக ரூபாய் ஐந்து கோடி பெற்றுக் கொண்டார் என்றும் கூறப்படுகின்றது.

ஒரு கட்டத்தில் உண்மை அறிந்த தேவராஜன் பணத்தை திரும்பக்கேட்டு கோவிந்தனுக்கு அழுத்தம் தந்துள்ளார். பலகட்ட பேச்சுவார்த்தைக்குப்பிறகு கோவிந்தன் தன் மனைவி கணக்கில் இருந்து மூன்று கோடிக்கு காசோலை தந்துள்ளார். ஆனால் போன வேகத்தில் வங்கியிலிருந்து ரிடர்ன் ஆகியது காசோலை.
இந்த நிலையில் பணத்தை கொடுத்து ஏமாந்த தேவராஜன் காவல் நிலையத்தில் கோவிந்தன் மீது புகார் அளித்திருந்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் இன்று காலையில் திருச்சிராப்பள்ளி காவல்துறையினர் கோவிந்தராஜனையும் அவரது மனைவி கீதா கோவிந்தராஜனையும் அவர்களது இல்லத்தில் வைத்து கைது செய்துள்ளனர்.
நில மோசடி வழக்கில் பாஜக நிர்வாகி கைது செய்யப்பட்டு இருப்பது திருச்சியில் பரபரப்பான சூழலை உருவாக்கியுள்ளது.
குறிப்பிட்ட அந்த நிலத்தில் தான் தற்பொழுது தமிழகத்தின் பிரம்மாண்டமான ரியல் எஸ்டேட் நிறுவனமான ஜி ஸ்கொயர் இன் வில்லாக்கள் அமைய உள்ளது குறிப்பிடத்தக்கது.
