

திருச்சிராப்பள்ளி மாவட்டம் திருப்பராய்த்துறை கிராமத்தில் கீழத்தெரு பகுதியில் கடந்த இரு தினங்களாக குடிநீர் மஞ்சள் நிறத்தில் வருவதால் பொதுமக்கள் நோய் அபாயத்தில் சிக்கி உள்ளனர்.
கடந்த இரு தினங்களாகவே நகராட்சி நிர்வாகத்தால் வழங்கப்படும் குடிநீரானது மஞ்சள் நிறத்தில் கலங்கலாக வந்து கொண்டிருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதனால் மழைக்காலத்தில் ஏற்படும் தொற்றுநோய் அபாயம் உள்ளதாகவும் ஏற்கனவே டெங்கு காய்ச்சல் தமிழகம் முழுவதும் பரவி வரும் சூழலில் குடிநீர் இப்படி கலங்கலாக வருவதால் எங்கே குழந்தைகளும் வயதானவர்களும் நோய் தொற்றால் பாதிக்கப்படுவார்களோ என்று கிராம மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
திருப்பராய்த்துறை ஊராட்சி நிர்வாகம் அமைச்சர் பெருமக்கள் சட்டமன்ற உறுப்பினர் அரசு அதிகாரிகள் உடனடியாக இந்த பிரச்சனையில் தலையிட்டு சுத்தமான சுகாதாரமான குடிநீர் மக்களுக்கு கிடைப்பதற்கு வழிவகை செய்ய வேண்டும் என்பதே திருப்பராய்த்துறை கீழத்தெரு கிராம மக்களின் கோரிக்கையாக உள்ளது.