

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே உள்ள சேமலைக் கவுண்டம்பாளையத்தில், கடந்த 28-ஆம் தேதி அன்று, மர்ம கும்பலால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சகோதரர் செந்தில் குமார் அவர்களது இல்லத்துக்குச் சென்று, அவரின் மனைவி, சகோதரி கவிதா மற்றும் அவரது குழந்தைகளை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்த பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை

தாய், தந்தை, மகன் என ஒரே நாளில், எந்தத் தவறும் செய்யாத மூன்று பேரை தங்கள் குடும்பத்தில் இழந்த சகோதரி கவிதா மற்றும் அவர் குழந்தைகளின் துயரத்திற்கு, ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை. சகோதரி கவிதா, குற்றவாளிகளை விரைவில் கண்டறிந்து, சட்டத்தின்படி தகுந்த தண்டனை வாங்கித் தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். சகோதரி கவிதா அவர்கள் குடும்பத்தினருக்கு, விரைவாக நியாயம் பெற்றுத் தருவோம் என்று உறுதி அளித்தோம்.
குற்றம் நடந்து ஒரு வாரத்திற்கு மேல் ஆகியும், வழக்கு விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை. தமிழகக் காவல்துறை, 14 தனிப்படைகள் அமைத்தும் குற்றவாளிகள் பற்றிய எந்த விவரமும் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டதாகத் தெரியவில்லை. தமிழகக் காவல்துறையினரின் திறமை மீது எந்த ஐயமும் இல்லை. ஆனால், தமிழகக் காவல்துறையினருக்கு இருக்கும் சில கட்டுப்பாடுகளோ, தொழில்நுட்ப வசதி குறைபாடுகளோ, வழக்கு விசாரணை முன்னேற்றத்தில் தாமதத்தை ஏற்படுத்தி இருக்க வாய்ப்பு இருக்கிறது.
வழக்கு விசாரணை தாமதமாவதால், இந்தப் பகுதி மக்கள் அனைவருக்கும் அச்ச உணர்வு ஏற்பட்டிருக்கிறது. இந்த வழக்கில் ஏற்படும் ஒவ்வொரு நாள் காலதாமதமும், குற்றவாளிகள் தப்பிக்க வாய்ப்பு அளிப்பதாக இருக்கிறது. எனவே, இனியும் காலதாமதமின்றி, வழக்கு விசாரணையை, சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று தமிழக பாஜக சார்பாகக் கோரிக்கை வைக்கவிருக்கிறோம்.
