

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் சிவாச்சாரியார்களின் தலைமை குருக்கள் ரமேஷ் அவர்களை ஹிந்து அறநிலையத்துறை இணை ஆணையர் ஜோதி அவர்கள் தரக்குறைவாக, ஒருமையில் பேசியதற்காக அனைத்து குருக்களும் தர்ணாவில் ஈடுபட்ட விவகாரம் அதிர்ச்சியளித்தாலும், வரவேற்கத்தக்கதே. ஏதோ, குருக்கள், பட்டாசார்யார்கள் ஆகியோரை ஹிந்து அறநிலையத்துறை அதிகாரிகள் தங்களின் எடுபிடிகளாக நினைத்து கொண்டு அதிகாரம் செலுத்துவது வழக்கமாகி விட்டது. அவர்கள் மீது தவறே இருந்தாலும், கோவிலின் அறங்காவலர் குழு தான் பிரச்சினையை அணுக வேண்டுமேயன்றி, ஹிந்து அறநிலையத்துறை கண்டிப்பதற்கு எந்த உரிமையும் கிடையாது. மேலும், குருக்கள் ஹிந்து அறநிலையத்துறையின் வேலையாட்களும் அல்ல, சம்பளமும் பெறுவதில்லை என்பதை உணரவேண்டும்.
https://youtube.com/shorts/1XVg3G4EPPM?si=f6YvuiLdHhwO7dLR
ஹிந்து அறநிலையத்துறை என்பது, பிரச்சினைகள் இருப்பின் கோவில் நிர்வாகத்தை நடத்தும் அறங்காவலர் குழுவை மேற்பார்வையிடும் அமைப்பு மட்டுமே என்பதும், கோவில்களின் அன்றாட நிகழ்வுகளில் தலையிடுவதற்கு எந்த உரிமையும் இல்லை என்பதும் சட்டம். ஆனால், அந்த நிர்வாகத்தையே தன் வசப்படுத்திக்கொண்டு தாங்கள் தான் கோவில்களின் சொந்தக்காரர்கள் என்பது போன்று ஹிந்து அறநிலையத்துறை அதிகாரிகள் நடந்து கொள்வது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
இந்த விவகாரத்தில் கோவில் குருக்கள் அனைவரும் தர்ணாவில் ஈடுபட்டது வரவேற்கத்தக்கது. குட்டக் குட்ட குனிந்து கொண்டேயிருந்தால் குட்டிக் கொண்டே தான் இருப்பார்கள். யாருடனும் வம்பு வேண்டாம், சண்டை வேண்டாம் என்று சகிப்புத் தன்மையோடு, பெருந்தன்மையோடு ஒதுங்கி செல்லும் சமுதாயத்தை சீண்டி பார்ப்பதை இனியாவது நிறுத்திக்கொள்வது நல்லது. இரு நாட்களுக்கு முன்னர், தட்டில் பணம் போடுவது குறித்த விவகாரத்தில், இனி ஹிந்து அறநிலைய துறை ஆக்கிரமித்திருக்கும் கோவில்களில் குருக்களை, பட்டர்களை கேவலப்படுத்தும் விதத்தில் யாரேனும் நடந்து கொண்டால் தன்மானத்தோடு ஹிந்து அறநிலையத்துறை ஆக்கிரமித்திருக்கும் கோவில்களில் கடமையாற்றிக்கொண்டிருக்கிறவர்கள் வேறு பணிக்கு செல்வது தான் ஒரே வழி என்று நான் குறிப்பிட்டிருந்த நிலையில், நேற்று திருவண்ணாமலையில் கோவில் தலைமை குருக்கள் ரமேஷ் அவர்களுக்கு ஏற்பட்டிருக்க கூடிய மரியாதைக்குறைவு அந்த எண்ணத்தை வலுப்படுத்துகிறது.
கோவில் குருக்கள், பட்டர்கள் சம்பளத்திற்கு பணியாற்றுபவர்கள் அல்ல, மக்களை மகேசனிடம் (இறைவனிடம்) அழைத்து செல்லும் கடமையாற்றுபவர்கள். ஆனால், தொடர்ந்து ‘திராவிட மாடல்’ என்று மார்தட்டிக் கொள்பவர்கள், அவர்களை இழிவுபடுத்தி பேசுவதற்கு காரணம், அவர்களின் பொறுமை மற்றும் சகிப்புத்தன்மையே. ஹிந்து அறநிலையத்துறை அதிகாரிகள் தங்களின் பணியினை மேற்கொள்வதோடு நிறுத்திக் கொள்ளாமல் கோவிலின் அன்றாட பணிகளில் தலையிடுவதை நிறுத்தி கொள்ள வேண்டும்.
2026ல் தமிழகத்தில் பாஜக ஆட்சி அமையும் போது கொள்ளையர்களின் கூடாரமாக கோவில்கள் ஆகிவிடக்கூடாது என்ற சிந்தனையோடு ஹிந்து அறநிலையத்துறையை அகற்றி விட்டு உரிய மாற்று ஏற்பாடுகளை மேற்கொள்ளும்.
தலைமை குருக்கள் ரமேஷ் அவர்களை ஒருமையில் பேசி அவமரியாதை செய்த இணை ஆணையாளர் ஜோதி மீது நடவடிக்கை எடுப்பதோடு இனி இது போன்ற தவறுகள் நடைபெறாது தடுக்கப்பட வேண்டும். இல்லையேல், அரசே ஆலயத்தை விட்டு வெளியேறு என்ற கோஷம் மேலும் வலுவாக ஒலிக்கும்.
நாராயணன் திருப்பதி,
மாநில துணைத் தலைவர்,
பாரதிய ஜனதா கட்சி.