
இந்தப்படம் தியேட்டரில் ஓடியபோது விமர்சனங்களைச் சந்தித்தது. ஆனால் அதுவே OTTயில் வந்தபோது அனேகம் பேரால் கொண்டாடப்படுகிறது. அதற்குக் காரணம் இது உண்மையாக தியேட்டரில் கூட்டமாக இருந்து பார்க்கக்கூடிய படம் இல்லை. தனியாக இருந்து கவனிக்கவேண்டிய உரையாடல். இங்கு உரையாடல் என்று நான் குறிப்பிடுவது அரவிந்த்சாமிக்கும், கார்த்திக்குமான உரையாடலை அல்ல. நமக்கும் மெய்யழகனுக்குமிடையேயான உரையாடலை.
இங்கு நம்மில் அனேகம் பேர் இதில் வரும் அரவிந்த்சாமி போலத்தான். எங்கோ ஒரு இடத்தில் உறவுகளிடமோ, நண்பர்களிடமோ, காதலிலோ ஏமாந்திருப்போம். அதன் வலிகளிலிருந்து எம்மைப் பாதுகாப்பதாகச் சொல்லி எம்மை நாமே ஒரு தனிமைச் சிறைக்குள் பூட்டிக்கொள்வோம். ஆனால் ஒவ்வொரு கதைக்கும் நாம் பார்க்காத பக்கங்கள் இருக்கின்றன. எம் கதைகளில் நாம் கவனிக்கமறந்த அதேசமயம் எம் மீது உண்மையான அன்பும், விசுவாசமும் கொண்ட மெய்யழகன்கள் எப்போதும் இருக்கவே செய்கிறார்கள். இதில் வரும் அரவிந்த்சாமி சொல்வது போல “என்னப் பத்தி நானே உன்மூலமா தான் தெரிஞ்சுக்கிட்டேன்” என்பது போல அனேக சமயங்களில் இந்த மெய்யழகன்கள் தான் எம்முடைய உண்மையான இயல்பை வெளிக்கொண்டு வருவார்கள். அந்த உரையாடலை எம்மோடு நிகழ்த்திய இயக்குனர் பிரேம்குமாருக்கு நன்றி
இந்தப் படம் ஆரம்பித்ததிலிருந்து வரக்கூடிய இயல்பான நகைச்சுவைக் காட்சிகள் வெகுவாக ரசிக்கவைத்தன. அதே போல் உணர்ச்சி மிகுந்த காட்சிகளும் கண்களைக் கலங்க வைத்தன. நடித்தவர்கள் பூராகவும் தேர்ந்த நடிகர்கள் வேறு. ஆளாளுக்கு கிடைத்த சீன்களிலெல்லாம் ஸ்கோர் பண்ணிவிட்டார்கள். ராஜ்கிரண், ஜெயப்பிரகாஷ் தொலைபேசி உரையாடல் கண்களைப் பனிக்கச் செய்தது. கிட்டத்தட்ட நம் குடும்பங்களில் ‘இனி எப்போது உறவுகளைச் சந்திப்பேனோ’ என்று புலம்பும் பெரியவர்களுக்கே உண்டான பயத்தையும், பாசத்தையும் அற்புதமாகக் கொட்டித் தீர்த்து விட்டார். அதேபோல ஜெயப்பிரகாஷும் இனிமையான வார்த்தைகள் மூலம் தன் பிடிவாதத்தை விட்டுக்கொடுக்காத போதும் அந்தப்பக்கம் விம்மி விம்மி அழும் காட்சியில் மனதைப் பிசைந்து விட்டார். இன்னொரு புறம் ஸ்வாதி கோண்டேயுடனான அண்ணன் – தங்கை உறவுக்காட்சி வேறு எந்தவிதமான சினிமாத்தனமும் இல்லாமல் மனதைத் தொட்டது.
ஆனால் இவை அனைத்துக்கும் மேலாக அரவிந்த்சாமி – கார்த்தி சம்பந்தப்பட்ட காட்சிகள் தான் படத்தை அடுத்த கட்டத்துக்கு உயர்த்தியிருக்கின்றன. தன்னை ஒரு மூடிய சிறைக்குள் முடக்கிக்கொண்ட அரவிந்த்சாமி, கார்த்தியின் கண்களில் ஒரு பரந்துபட்ட எண்ணம் கொண்ட கதாநாயகனாகத் தெரிவார். வெறும் பணத்துக்காக தன் சிறுவயதில் தன்னை ஒதுக்கிய உறவுகள் மத்தியில் அவனுக்கு உறவாக இருந்த அரவிந்த்சாமி குடும்பத்தின் மீது அவனுக்கு இருந்த அலாதியான பாசமும், அரவிந்த்சாமி மீது இருந்த அபரிமிதமான அன்பும் அவ்வளவு உண்மையாக இருந்தது. அன்று வீட்டை விட்டுப் போகும்போது அரவிந்த்சாமி விட்டுப் போன சைக்கிள் கார்த்தியின் குடும்பத்துக்கே கடவுளானது. சொந்த உறவுகளால் கைவிடப்பட்ட அதே அரவிந்த்சாமி மீது கண்மூடித்தனமான அன்பு கொண்ட அதேநேரம் அறிமுகமேயில்லாதவனாக கார்த்தி கதாபாத்திரம் தோன்றும்.
அரவிந்த்சாமிக்குள் இருக்கும் தேர்ந்த நடிகனுக்கு இது தரமான தீனி. மனவழுத்தம், வெறுப்பு என அனைத்துமிருந்தாலும், அவற்றை மீறிய புன்னகையில் அழகாகத் தெரிகிறார். அதேபோல கிராமத்து வெள்ளந்தி மனிதனாக அடிக்கடி நம்மைச் சிரிக்க வைத்தாலும் உணர்வுபூர்வமான காட்சிகளில் தன்னுடைய தேர்ந்த நடிப்பால் கட்டிப் போடுகிறார் கார்த்தி.
கடைசியாக கார்த்தியிடம், அரவிந்த்சாமி வெடித்து அழும்போதும், கார்த்தியும் கலங்கி அழும்போதும் அந்த உணர்வு நம்மையும் வருடிச் செல்லும். ஆயிரம் பேரிடம் ஏமாந்தாலும், எங்கோ நம்மைப் புரிந்துகொள்ள ஒரு உறவு வரும் என்ற நம்பிக்கையுடன் வாழ்வது தானே வாழ்க்கை என்பதை நமக்கு நாமே சொல்லிக்கொள்ள வைக்கிறது மெய்யழகன்