
தமிழில் ராணுவ வீரர்களை பற்றிய இந்திய ராணுவத்தை பற்றிய ஒரு தேச பக்தி படம் வந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன இப்பொழுது இந்த தீபாவளிக்கு மீண்டும் ஒரு ராணுவ வீரரின் வாழ்க்கை வரலாற்றை ஒரு சில சமரசங்களோடு வெள்ளித்திரைக்கு கொண்டு வந்திருக்கின்றனர்
அமரன்
தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் பயோபிக் தான் அமரன்.
அவர் வாழ்வின் முக்கிய அங்கமான இரண்டு விஷயங்களை மட்டும் கையில் எடுத்திருக்கிறார்கள். ஒன்று ராணுவத்தில் பணிபுரிவது. இரண்டாவது அவரது காதல் வாழ்க்கை. இந்த இரண்டையும் முழுமையாக காட்சிப்படுத்தியிருக்கிறது அமரன்.
படத்திலும் ராணுவம் மற்றும் சாய் பல்லவி காட்சிகள் தான் மாறி மாறி வருகிறது. ஆனால் அவை அனைத்துமே க்ளைமேக்ஸோடு சம்பந்தபட்டவை என்பதால் அவசியமான காட்சிகள் தான். ராணுவத்தில் முகுந்த் பணிபுரிந்த போது அவர் முன்னின்ற ஆபரேஷன்களை உண்மைக்கு நெருக்கமாக காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.
சிவகார்த்திகேயன் முகுந்தாகவே வாழ்ந்திருக்கிறார். அட்டகாச பர்பாமன்ஸ். அச்சு அசல் ஒரு ராணுவ வீரனாக வந்து நிற்கிறார். போஸ்டர்களில் அவர் பிஸிக் பார்த்து கொஞ்சம் சந்தேகம் இருந்தது. ஆனால் படத்தில் பக்காவாக இருக்கிறார்.
இந்துவாக சாய் பல்லவி. பிரில்லியண்ட் பர்பாமன்ஸ். சின்ன சின்ன கியூட் ரியாக்ஷன்களில் மனதைக் கவரும் சாய் பல்லவி, இறுதிக்காட்சியில் அவர் அழாமல், தியேட்டரில் அனைவரையும் அழ வைக்கிறார். அதிலும் கணவர் இறந்த செய்தி கேட்டு அழுகையை கட்டுப்படுத்தி, துக்கத்தை அப்படியே முழுங்கிக் கொண்டு கண்ணைத் துடைத்துக் கொண்டு நிற்பது அட்டகாசம். மிகச்சிறந்த நடிப்பு.
படத்தின் இன்னொரு ஹீரோ ஜி வி பிரகாஷ்குமார். ஆக்ஷன் காட்சிகளில் தடதடக்கும் இசை, செண்டிமெண்ட் காட்சிகளில் மனதை வருடுகிறது. ஜி விக்கு அட்டகாசமான கம்பேக்.
படத்தின் குறைகள் என்றால் மிக மெதுவாக நகரும் காட்சிகளை சொல்லலாம். மேலும் சில காட்சிகளை முடிக்க வேண்டிய இடத்தில் முடிக்காமல், இழுத்துக் கொண்டே செல்கிறார்கள். ராணுவ வீரனின் பயோபிக்கில், தீவிரவாதிகளைப் பற்றி இத்தனை டிடெயிலிங் தேவையா? இயக்குனருக்கு என்ன அழுத்தமோ. ராணுவ எபிசோடும், மேஜரின் பர்சனல் வாழ்க்கையும் மாறி மாறி வருவதால் சில இடங்களில் சலிப்பு ஏற்படுவதை தடுக்க முடியவில்லை. இன்னும் கொஞ்சம் இழுத்துப் பிடித்து நறுக்கியிருகலாம்.
ராஜ்குமார் பெரியசாமி எனும் பெயரும் முதல் வரிசை இயக்குனர்கள் பட்டியலில் இடம்பெறும். இறுதிக்காட்சிகளை அட்டகாசமாக கொடுத்திருக்கிறார். அதை பார்க்கும் போது கண்ணீர் விடாதவர்களே இருக்க முடியாது. இசை, நடிப்பு, இயக்கம் அனைத்தும் டாப்நாட்ச்.
ஒரு பிராமணரின் வாழ்க்கை வரலாறாக இருந்தாலும், அவரை பிராமணராக காட்டுவதில் தமிழ் சினிமாவுக்கு இருக்கும் சங்கடங்களை புரிந்து கொள்ள முடிகிறது. ஒரு பிராமணரை நல்லவனாகவோ, வீரனாகவோ, புத்திசாலியாகவோ காட்டுவதற்கு தமிழ் சினிமாவில் எழுதப்படாத தடை இருக்கிறது. அதற்கு இந்தப் படமும் விதிவிலக்கில்லை. எப்படி சூரரைப் போற்று திரைப்படத்தின் இயக்குனர் இந்த விஷயத்தில் சாறுக்கினாரோ அதே விஷயத்தில் அமரனின் இயக்குனரும் சறுக்கியிருக்கின்றார். தமிழகத்தின் சிறுபான்மை சமூகமான பிராமணர்களை உயர்த்திக் காட்ட வேண்டிய அவசியம் இல்லை என்பதை இயக்குனர் நன்றாக புரிந்து கொண்டிருக்கிறார் போலிருக்கிறது.
அதனால் தான் நாயகன் தந்தையை நயினா என்று அழைக்க வைத்து யாருக்கு விசுவாசத்தை காட்ட வேண்டுமோ அதை இயக்குனர் நன்றாகவே காட்டியிருக்கிறார்.
மற்றபடி அமரன் கண்டிப்பாக குடும்பத்துடன் பார்க்கலாம்.
இந்த தீபாவளி கண்டிப்பாக அமரன் தீபாவளி தான்.