பட்டாசு தொழிற்சாலை விபத்து – நேரில் சென்று ஆறுதல் கூறிய துரை வைகோ MP

விருதுநகர் மாவட்டத்தில் சாத்தூர், சிவகாசி, விருதுநகர் உள்ளிட்ட வட்டங்களில் ஏழ்மை நிலையில் உள்ள எளிய அடித்தட்டு மக்களின் முக்கிய வாழ்வாதாரமாக பட்டாசு தொழில் விளங்குகிறது. வானம் பார்த்த வறண்ட இந்தப் பகுதியில் பெருமளவு வேலைவாய்ப்பை வழங்கி, ஆயிரக்கணக்கான குடும்பங்களின் உணவு, உடை, இருப்பிடத் தேவைகளை நிறைவேற்றி வரும் ஒரு முக்கிய தொழிலாக இது திகழ்கிறது.

ஆனால், சுரங்கம் அல்லது வெடிமருந்து தொழிற்சாலைகளைப் போன்று அதிக ஆபத்து நிறைந்த தொழில்களில் இல்லாத அளவுக்கு, இங்கு ஆண்டுதோறும் தொடர் உயிரிழப்புகள் ஏற்படுவது மிகுந்த வேதனையையும் கவலையையும் ஏற்படுத்துகிறது.

ஒவ்வொரு விபத்துக்குப் பின்னரும் தொடர் சோதனைகள், சட்ட நடவடிக்கைகள், பாதுகாப்புப் பயிற்சிகள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் நிவாரண உதவிகள் மேற்கொள்ளப்படுகின்றன. எனினும், விபத்துகளும் உயிரிழப்புகளும் தொடர்ந்து குறையாமல் இருப்பது மனதைப் புண்படுத்துகிறது.

விருதுநகர் மாவட்டம், கட்டனார்பட்டி கிராமத்தில் உள்ள ஒரு பட்டாசு ஆலையில் நேற்று (19.04.2026) ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த கொடிய வெடி விபத்தில், இதுவரை 25 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். ஆறு பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்ற தகவல் கிடைத்தவுடன்,

இன்று (20.04.2026) மாலை விபத்து நடந்த பட்டாசு ஆலைக்கு நேரில் சென்று பார்வையிட்டேன்.
அதனுடன், விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தவர்களைச் சந்தித்து, அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து மருத்துவர்களிடம் விசாரித்தேன். மேலும், சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரைச் சந்தித்து, அவர்களது துயரத்தில் பங்குகொண்டு துக்கம் விசாரித்தேன்.

மாண்புமிகு அமைச்சர்கள் அண்ணன் கே.கே.எஸ்.எஸ்.ஆர் மற்றும் அண்ணன் தங்கம் தென்னரசு ஆகியோரும், மாவட்ட ஆட்சியரும் விபத்து இடத்துக்குச் சென்று, மீட்புப் பணிகளையும், காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை ஏற்பாடுகளையும் மேற்கொண்டு வருவதை அறிந்துகொண்டேன். தேர்தல் விதிமுறைகள் அமலில் இருப்பதால், அரசின் நிவாரண உதவிகள் அறிவிப்பதில் சில தாமதம் ஏற்பட்டிருப்பதையும் தெரிந்துகொண்டேன்.

ஏழ்மை மற்றும் குடும்பச் சூழ்நிலை காரணமாக, கிடைக்கும் வேலைவாய்ப்பு மற்றும் ஊதியத்துக்காக பட்டாசு ஆலைகளில் பணியாற்றும் பெண்கள் இத்தகைய விபத்துகளில் உயிரிழக்கும்போது, அவர்களை நம்பியிருக்கும் குழந்தைகளும் குடும்பங்களும் முற்றிலும் நிலைகுலைந்து போகின்றன.

அவர்களுக்கு வழங்கப்படும் எந்த உதவித்தொகை அல்லது நிவாரணமும், அந்தக் குடும்பத்துக்கு ஏற்பட்ட இழப்பை ஒருபோதும் ஈடுசெய்ய முடியாது. இந்த இழப்பு ஆழமான, நிரந்தரமான வடுவை ஏற்படுத்துகிறது.

இந்த துயரமான நேரத்தில், பட்டாசு உற்பத்தியாளர்களும், பொறுப்புள்ள அதிகாரிகளும் பாதுகாப்பு விதிமுறைகளையும், அம்சங்களையும் பொறுப்புணர்வோடும், கண்டிப்போடும், உறுதியாகக் கடைபிடிக்க வேண்டும் என்று மனமுருகிக் கேட்டுக்கொள்கிறேன்.

அத்துடன், பணியில் உள்ள தொழிலாளர்கள் ஒவ்வொருவரும் தங்கள்இன் சிறிய கவனமின்மை கூட, பலரின் உயிர்களையும், வாழ்க்கையையும் அழித்துவிடக்கூடியது என்ற புரிதலோடு பணியாற்ற வேண்டும்.

பணியிடங்களின் விபத்துகள் ஏற்படுத்தும் கோரங்களை படம்பிடித்து அமைக்க வேண்டும். இது, தொழிலாளர்கள் எப்போதும் கவனமாக இருக்க காரணமாக அமையும்.

இதுபோன்ற தீராத துயரங்கள் இனி இந்தப் பகுதியிலோ, பட்டாசு ஆலைகளிலோ ஒருபோதும் நிகழக்கூடாது என்று அனைவரும் உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

உயிரிழந்த அனைவரின் ஆன்மாக்களும் அமைதி பெறட்டும். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இறைவன் பலம் அளிக்கட்டும்.

துரை வைகோ
நாடாளுமனற உறுப்பினர் (திருச்சி)
முதன்மைச் செயலாளர்
மறுமலர்ச்சி திமுக
20.04.2026

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    யேமன் நாட்டில் தமிழர் மரணம் – துரை வைகோ எம்.பி முயற்சியால் உடல் தமிழகம் கொண்டுவரப்படுகிறது

    யேமன் நாட்டு நிறுவன எண்ணெய் கப்பலில் பணியாற்றி வந்த தூத்துக்குடி மாவட்டத்தைச் சார்ந்த திரு. ஃபெர்னாண்டோ ரெமிசியன் சுரேஷ் 08.03.2026 அன்று, கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தில் கடுமையான பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக யேமனின் ஹொதெய்தா நகரிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்களின் தீவிர…

    திருச்சி – திருப்பதி இடையே இரயில் இயக்கப்படும் என்று ஒன்றிய இரயில்வே அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளதை வரவேற்கிறேன் – துரை வைகோMP

    திருச்சி – திருப்பதி இடையே இரயில் இயக்கப்படும் என்று ஒன்றிய இரயில்வே அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளதை வரவேற்கிறேன். திருச்சி நாடாளுமன்றத் தொகுதி மக்களின் நீண்டகால கோரிக்கையான திருச்சி – திருப்பதி இடையேயான பகல் நேர இரயில் சேவைக்கு ஒன்றிய இரயில்வே அமைச்சகம்…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *