
தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் அறிக்கை
தேசத் தலைவர்களை கொண்டாடுவதில் தமிழக அரசு பாகுபாடு பார்க்கக் கூடாது
நேரு மட்டும் இந்தியா அல்ல ; அனைத்து தலைவர்களின் தியாகங்களையும், சாதனைகளையும் திமுக அரசு போற்ற வேண்டும்.வரலாற்றை மாற்றியமைக்க நினைத்தால், வரலாறு உங்களை மாற்றும். எனவே மாணவ சமுதாயத்தின் வெள்ளந்தி மனதில் அரசியல் சாயம் பூச முயற்சிக்காமல், தேசத் தலைவர்களை கொண்டாடுவதில் பாகுபாடு பார்க்காமல் தமிழக அரசு செயல்பட வேண்டும்.
நாட்டின் முதல் பிரதமர் பண்டிட் ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாளை முன்னிட்டு நவம்பர் 12, 13-ம் தேதிகளில் பேச்சு போட்டி நடத்தப்படும் என்று, தமிழ் வளர்ச்சித் துறை அறிவித்துள்ளது. நாட்டின் விடுதலைக்காகவும், விடுதலைக்குப் பிறகு நாட்டின் வளர்ச்சிக்காகவும் பாடுபட்ட தலைவர்களை நினைவுகூரும் வகையில், அவர்களது பிறந்த நாள், நினைவு நாளில் பேச்சுப் போட்டி போன்ற போட்டிகள் நடத்தப்படுவது வரவேற்கத்தக்கது. அதன் மூலம் நாட்டின் நாளைய தலைவர்களான இளம் தலைமுறையினருக்கு, தேசத்தின் தலைவர்களை பற்றிய புரிதல் ஏற்படும். போட்டிக்காக அந்த தலைவர்களைப் பற்றி படிக்கும்போது அவர்களின் நிறை, குறைகளை தெரிந்து கொள்வார்கள். அந்த வகையில் தமிழ் வளர்ச்சித் துறையின் இந்த முயற்சி பாராட்டுக்குரியது.
*நேருவும், அவரது குடும்பமும் மட்டும் இந்தியா அல்ல. நாட்டின் விடுதலைக்காகவும், நாட்டின் வளர்ச்சிக்காகவும் பாடுபட்ட தலைவர்கள் ஏராளம் இருக்கிறார்கள். பண்டிட் ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாளுக்கு பேச்சுப் போட்டி நடத்துவது போல, மற்ற தலைவர்களுக்கும் பேச்சுப் போட்டிகளை தமிழ் வளர்ச்சி துறை நடத்துவதாக தெரியவில்லை.
மகாகவி பாரதியார், வ.உ. சிதம்பரம் பிள்ளை, சுப்பிரமணிய சிவா, சுப்பிரமணிய பாரதி, பால கங்காதர திலகர், சுபாஷ் சந்திர போஸ், பாபாசாகேப் அம்பேத்கர்,சர்தார் வல்லபாய் பட்டேல் உள்ளிட்ட சுதந்திரப் போராட்ட தலைவர்கள், விடுதலைக்குப் பிறகு நாட்டின் வளர்ச்சிக்கு பாடுபட்ட லால்பகதூர் சாஸ்திரி, ஜெயபிரகாஷ் நாராயணன், அடல் பிஹாரி வாஜ்பாய், அப்துல் கலாம் போன்ற தலைவர்களின் பிறந்த நாள் நினைவு நாளிலும் பேச்சு, கட்டுரை போட்டி போன்ற போட்டிகளை மாணவர்களுக்கு தமிழ் வளர்ச்சித் துறை நடத்த வேண்டும்.
மாறாக, திமுகவுக்கு பிடித்த, திமுகவின் கொள்கைகளுக்கு உகந்த தலைவர்களின் பிறந்த நாள், நினைவு நாளில் மட்டும் அரசின் சார்பில், பேச்சுப் போட்டிகளை நடத்துவது சரியாக இருக்காது. இதை திமுக அரசு கவனத்தில் கொண்டு பண்டிட் ஜவஹர்லால் நேரு மட்டுமல்லாது, மற்ற தலைவர்களின் பிறந்த நாள், நினைவு நாளிலும் மாணவர்களுக்கு போட்டிகளை நடத்த வேண்டும்.
1947-ல் விடுதலை கிடைத்த பிறகு, மகாத்மா காந்தியின் விருப்பத்தின் பேரில் பண்டிட் ஜவஹர்லால் நேரு பிரதமர் ஆனார். மகாத்மா காந்தி மற்றும் சர்தார் வல்லபாய் பட்டேல் மறைவுக்கு பிறகு காங்கிரஸ் கட்சி நேருக்கு குடும்பத்தின் வசமானது. காங்கிரசுக்கு மாற்றாக எந்த கட்சியும் தலையெடுக்காமல் நேரு தடுத்து விட்டதால், எதிர்க்கட்சிகளே இல்லாத சூழல் உருவானது. அதனால், விடுதலைக்குப் பிறகு 55 ஆண்டுகள் இந்தியா நேரு குடும்பத்தின் பிடியில் சிக்கிக் கொண்டது.
இதனால், நேரு, இந்திரா காந்தி, ராஜிவ் காந்தி என்று நேரு குடும்பம் மட்டும்தான் இந்தியா என்று கட்டமைக்கப்பட்டது நாட்டின் எந்த திட்டமாக இருந்தாலும் நேரு குடும்பத்தின் பெயர்களே வைக்கப்பட்டன. மோதிலால் நேரு, கமலா நேரு, ஜவஹர்லால் நேரு இந்திரா காந்தி ராஜிவ் காந்தி, சஞ்சய் காந்தி என்று ஆயிரக்கணக்கான திட்டங்களுக்கும் அரசின் கட்டிடங்களுக்கும் நேரு குடும்பத்தின் பெயர்கள் வைக்கப்பட்டுள்ளன.
1998-ல் அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையில் கூட்டணி அரசு அமைந்த பிறகுதான், இந்தச் சூழல் மாறத் தொடங்கியது. அதன் பிறகு தான் காங்கிரசால் இருட்டடிப்பு செய்யப்பட்ட சர்தார் வல்லபாய் பட்டேல் லால்பகதூர் சாஸ்திரி போன்ற தலைவர்களின் பெயர்களை வெளியில் தெரியத் துவங்கின. நாட்டின் வளர்ச்சிக்காக பாடுபட்ட தலைவர்களை இருட்டடிப்பு செய்யும் காங்கிரஸின் கலாசாரத்தை, திமுகவும் பின்பற்ற தொடங்கியுள்ளதோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவைக் காரணம் காட்டி அரசின் அனைத்து திட்டங்களுக்கும், கட்டிடங்களுக்கும் கருணாநிதியின் பெயர் சூட்டப்பட்டு வருகிறது. இது தவறான முன்னுதாரணமாகிவிடும் என்பதை திமுக அரசுக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களே, தவறான வரலாற்றை நீங்கள் உருவாக்க நினைத்தால், வரலாறு உங்களை மாற்றி அமைக்கும் என்பதை பணிவுடன் தெரிவிக்க விரும்புகிறேன். எனவே, அனைத்து தலைவர்களின் தியாகங்களையும் சாதனைகளையும் போற்றி மகிழ திமுக அரசு உரிய நடவடிக்கை வேண்டும்.
ஏ.என்.எஸ்.பிரசாத்,
தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர்,
கைபேசி : 98401 70721.
