தமிழகம் கண்ட தவப்புதல்வர் பொதுவுடமைப் போராளி
அய்யா
ஆர். நல்லகண்ணு அவர்கள் நினைவை நெஞ்சில் ஏந்துவோம்..
தமிழகப் பொதுவாழ்விற்குக் கிடைத்த பெருமைக்குரிய தவப்புதல்வர்களில்
முதன்மையானவரான
அய்யா
ஆர். நல்லகண்ணு அவர்கள்,
தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள திருவைகுண்டம் பெரும்பத்து பகுதியில், இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சி உதயமான அதே 1925 ஆம் ஆண்டில் பிறந்த பெருமைக்குரிய பெருமகன் ஆவார்.
பள்ளி பருவத்திலேயே வீதிகளில் விடுதலை முழக்கம் எழுப்பி, அடிமைப்பட்டு கிடந்த விவசாயக்
கூலிகளுக்காக நியாயம் கேட்டுப் போராடி, நெல்லை சதி வழக்கில் கைதாகி,
இந்திய விடுதலைப் போராட்டங்களிலும் இயக்கப் போராட்டங்களிலும் பங்கேற்று சுமார் ஏழு ஆண்டு காலத்தை சிறையில் கழித்த செம்மல்.
சுதந்திர இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சி தடைசெய்யப்பட்ட போது,
இரண்டு ஆண்டு காலம் தலைமறைவு வாழ்க்கை மேற்கொண்டவர்.
போராட்டக் களங்களில் கடுமையான சித்திரவதைகளுக்கு
ஆளாகி,
தமது பொது வாழ்வையே தியாக வாழ்வாக்கிக் கொண்ட புரட்சியாளர் ஆவார்.
பொதுவுடமை இயக்கம் பின்பற்றுகின்ற
அப்பழுக்கற்ற அரசியலை
தமது 101 ஆண்டு கால பொது வாழ்வு முழுவதிலும் பின்பற்றி வந்தவர்.
தமது 80 ஆவது பிறந்த நாளில் நாடெங்கிலும் கட்சித் தோழர்கள் திரட்டித்தந்த ஒரு கோடி ரூபாய் நிதியை, அந்த விழா மேடையிலேயே கட்சிக்கு திரும்ப ஒப்படைத்துவிட்டு;
நாள் தோறும் ஆட்டோவில் அன்றாடம் அலுவலகம் வந்து செல்கிற முன்மாதிரி தலைவர் இவர்.
இப்படி தியாகமே வாழ்வாகிப்போன அய்யா அவர்கள், உள்ளாட்சி அமைப்புகளிலோ, சட்டமன்ற நாடாளு
மன்றங்களிலோ,
இடம் பெற்றுக் கடமை ஆற்றும் வாய்ப்பைக் கடைசி வரை பெற முடியவில்லை
என்பது தமிழக அரசியல் பொதுவாழ்விற்கு நேர்ந்த வரலாற்றுச் சோகமாகும்.
எந்தப்பெரும் பதவியிலும் இல்லை என்றாலும்,
கட்சி, சாதி, மத எல்லை கடந்து தமிழ்நாட்டின் அத்தனை மக்களும் நேசிக்கிறஉயர்தனித் தலைவரான
விளங்குபவர் அய்யா
ஆர். நல்லகண்ணு அவர்கள்.
சுமார் மூன்றாண்டுகளுக்கு முன்பு,
இந்தப் பெருமகனாரை அழைத்துவந்து, தாயகத்தில் எனக்கென ஒதுக்கப்பட்ட அறையை திறக்கச் செய்து, அவரையே என் பொதுவாழ்வின் முன்மாதிரியாக கொண்டு என் பயணத்தை தொடங்கியதை
பெரும் பேறாகக் கருதுகிறேன்.
அரசியல் பொதுவாழ்வில் இருப்போருக்கும்,
இனி வருவோருக்கும்
அய்யாவின் வாழ்வும், வரலாறும் வழிகாட்டியாக திகழும்.
நூறு வயதை நிறைவு செய்து, 101 ஆவது வயதில்
அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தியாகசீலர் அய்யா ஆர் நல்லகண்ணு அவர்களை இன்று(25.02.2026) சில மணி நேரத்திற்கு முன்பு தான் பார்த்து விட்டு வந்தேன்.
தற்போது அப்பெருமகனார் மறைந்து விட்டார் என்ற தகவல் கிடைக்கப்பெற்று
பெருந் துயருற்றேன்.
சுமார் 15 வயதில் போராட்டத்தைத் தொடங்கி, நினைவு தப்பும் நாள் வரை சமூகம் மேம்பட ஓயாது உழைத்து வந்த
தமிழ்நாட்டின்
பெருமைக்குரிய தலைவர்,
அய்யா
ஆர்.நல்லகண்ணு அவர்களின் மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அய்யா ஆர் நல்லகண்ணு அவர்களின் தியாகம் நிறைந்த தூய பொதுவாழ்வை நெஞ்சில் ஏந்திப் பயணிப்பதே நாம் அவருக்குச்செலுத்தும் உண்மையான மரியாதையாகும்.
ஆறாத் துயருடன்,
துரை வைகோ,
முதன்மைச்செயலாளர்
ம.தி.மு.க.
25.02.2026






