
கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடும் விதமாக கிறிஸ்துமஸ் தாத்தாவுடன் உரையாடும் வசதியை சாட்ஜிபிடி (ChatGPT) அறிமுகப்படுத்தியுள்ளது.
டிசம்பர் மாதம் பிறந்தாலே ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்தான். அனைவரும் பண்டிகை கொண்டாட்டங்களில் மூழ்கி போவோம். பொருள்களை விற்பனை செய்யும் நிறுவனங்கள் தள்ளுபடி அறிவிக்கும். கணினி நிறுவனங்கள் மட்டும் சும்மாவா இருக்கும்? செயற்கை நுண்ணறிவு நிறுவனமான ஓப்பன்ஏஐ (OpenAI), இந்த பண்டிகை காலத்தை இன்னும் சிறப்பானதாக மாற்றிட தனது சாட்ஜிபிடி செயலியில் புதிய அம்சம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. கிறிஸ்துமஸ் தாத்தாவான சான்டா கிளாஸுடம் உரையாடும் வசதிதான் அது.

செயற்கை நுண்ணறிவு ஆய்வு நிறுவனமான ஓப்பன்ஏஐ, 2022ஆம் ஆண்டின் பிற்பகுதியில் அறிமுகப்படுத்திய செயலி சாட்ஜிபிடி என்பது நாம் அறிந்ததே. இந்த செயலி சேகரித்து வைத்த தரவுகளைக் கணப்பொழுதில் கொடுக்கும். கடினமான கணக்குகளுக்குத் தீர்வு காண்பது, கட்டுரைகளை எழுதுவது எனப் பல்வேறு பணிகளை நொடிப்பொழுதில் முடித்துவிடும். மருத்துவம் தொடங்கி, மாணவர்களின் வீட்டுப்பாடம் வரைக்கும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் இல்லாத இடமே இல்லை. செயற்கை நுண்ணறிவின் ஆதிக்கம் துரித வளர்ச்சி அடைந்து நிற்கிறது. கிறிஸ்துமஸை முன்னிட்டு பன்னிரண்டு நாள்களுக்கு புதுப் புது அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது ஓப்பன்ஏஐ. ஆப்பிள் இன்டெலிஜென்ஸ், கேன்வா, சோரா உடன் சாட்ஜிபிடி கைகோக்கப் போகிறதாம். இந்த அறிவிப்புகளை நாள்தோறும் வெளியிட்டுக் கொண்டுள்ளது ஓப்பன் ஏஐ.
தற்பொழுது குழந்தைகளையும் தன் பக்கம் ஈர்க்கும் விதமாக ஒரு புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. சாட்ஜிபிடியில் உள்ள சான்டா மோடு (Santa Mode) வசதி மூலம் பயனர்கள் சான்டா கிளாஸிடம் உரையாடலாம். சான்டா கிளாஸ் தனக்கே உரிய குதூகல குரலால் உற்சாகமூட்டும் வகையில் பயனர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கிறது. அது மட்டுமல்லாமல், பண்டிகை காலம் தொடர்பான ஆலோசனைகளையும், சுவாரஸ்யமான கதைகளையும் சொல்கிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் மகிழ்விக்க இது போதாதா? சான்டா, பல்வேறு உள்ளூர் மொழிகளிலும் பேசும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
சாட்ஜிபிடி செயலியில் உள்ள பனித்துகள் (Snoflakes) பொத்தானை அழுத்தினால் போதும். சான்டாவின் குரலைக் கேட்கலாம். சாட்ஜிபிடி குரல் மெனுவிலிருந்தும் இதைத் தேர்ந்தெடுக்கலாம். காணாெளி மூலம் சான்டாவிடம் பேசும் வசதியும் உள்ளது. ஆனால் இது தேர்ந்தெடுக்கப்பட்ட நாடுகளில் உள்ள மிகச் சில பயனர்களுக்கு மட்டுமே சாத்தியம். குரலானாலும் காணொளியானாலும் குறுகிய காலக் கொண்டாட்டம் மட்டுமே. கிறிஸ்துமஸ் முடிந்ததும் சான்டாவும் கிளம்பிவிடுவார். டிசம்பர் மாதம் 31ஆம் தேதி வரை மட்டுமே இவை செயல்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.