திமுக தலைமை’ என்ற கருவறைக்குள் ஆ.ராசாவால் நுழைய முடியுமா? தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் அறிக்கை

‘திமுக தலைமை’ என்ற கருவறைக்குள் ஆ.ராசாவால் நுழைய முடியுமா?

டாக்டர் அம்பேத்கர் அவர்களால் குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட ‘ஆரிய – திராவிட’ இனவாத கோட்பாட்டை சொல்லி எத்தனை காலம்தான் மக்களை ஏமாற்றுவீர்?

சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய நடிகை கஸ்தூரிக்கு பதில் அளிக்கிறேன் என்ற பெயரில் திமுக துணைப் பொதுச் செயலாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ.ராசா அவர்கள், “கி.மு. 3000-ம் ஆண்டில் மத்திய ஆசியாவிலிருந்து ஆரியர்கள் தங்கள் ஆடு, மாடுகளுக்கு மேய்ச்சல் இடம் தேடி கைபர் போலன் கணவாய் வழியே உள்ளே நுழைந்தனர். கொஞ்ச காலத்தில் பிராமணர்கள் மதத் தலைமையைக் கைப்பற்றினார்கள். அவர்களின் மனுதர்மம் வடக்கே உள்ள வாழ்வியல் முறையை வகுத்துத் தந்தது. பிறப்பால் பிராமணர்கள், சத்திரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள் என்று மக்கள் பிரிக்கப்பட்டனர்” என்று நீதி கட்சி தொடங்கப்பட்ட காலம் முதல் பாடிவரும் பழைய பல்லவியை மீண்டும் பாடியிருக்கிறார்.

இந்துக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தி, அவர்களை மதம் மாற்றுவதற்காக, ராபர்ட் கால்டுவெல் போன்ற கிறிஸ்தவ பாதிரியார்கள் உருவாக்கிய கற்பனை கதை தான் ஆரிய – திராவிட இனவாதம். இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் அவர்கள் ஆரிய – திராவிட இனவாத கோட்பாட்டிற்கு சரியான இடம் குப்பை தொட்டிதான் என்று கூறியிருக்கிறார். இதை வசதியாக மறைத்துவிட்டு ஆராசா போன்றவர்கள் ஆரிய – திராவிட இனவாத கோட்பாட்டை மீண்டும் மீண்டும் சொல்லி தமிழ்நாட்டில் இனவாத அரசியலை தக்க வைத்துக் கொள்ள முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்து மதத்தில் ஜாதி வேறுபாடுகள் இருப்பது உண்மைதான். அது கொஞ்சம் கொஞ்சமாக மாறிக் கொண்டிருக்கிறது. இந்துக்கள் அனைவரும், தங்களை ‘இந்துக்களாக உணர்ந்தால்’ ஜாதி வேறுபாடுகள் அறவே ஒழியும். அதற்கான முயற்சிகள் காலம் காலமாக நடந்து கொண்டிருக்கின்றன. மக்கள் மனங்களில் இருந்து ஜாதி வேறுபாடுகளை களைய ஸ்ரீராமானுஜர் போன்ற மகான்கள் ஆற்றிய பணிகளை நாம் அனைவரும் அறிவோம். கடந்த நூறாண்டுகளாக ஆர்.எஸ்.எஸ் அமைப்பு ஜாதி வேறுபாடுகளை களைய, மக்கள் மனங்களில் மாற்றங்களை ஏற்படுத்த களப்பணியாற்றி வருகிறது. அதற்கு மிகப்பெரிய வெற்றியும் கிடைத்திருக்கிறது. ஆர்.எஸ்.எஸ் தலைவராக இருந்த தேவரஸ் அவர்கள், ‘தீண்டாமை பாவம் இல்லை என்றால், இந்த உலகில் வேறு எதுவும் பாவமில்லை’ என்று கூறியிருக்கிறார். இந்து மதத்தில் தீண்டாமைக்கு இடமில்லை என்பதை இதைவிட யாரும் அழுத்தம் திருத்தமாக கூறிவிட முடியாது.

ஆனால், மொழி வெறியையும், இனவெறியையும் தூண்டி, குடும்ப அரசியல் நடத்திவரும் சில கட்சிகள், இந்துக்களை ஜாதி ரீதியாக பிரித்து அரசியல் ஆதாயம் அடைந்து வருகின்றன. இந்துக்களில் ஒரு பிரிவினரின் வாக்குகளையும், சிறுபான்மை மதத்தினரின் வாக்குகளையும் பெற்று ஆட்சி அமைக்கும் இக்காட்சிகள், இந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக நடத்துகின்றன. இந்து மதத்தில் ஜாதி வேறுபாடுகள் நீடிப்பதற்கு இது போன்ற கட்சிகளின் சுயநல சூழ்ச்சி அரசியலே காரணம்.

இன்று தமிழகத்தில் எந்த ஜாதி பெயரையும் சொல்லியும் யாரையும் இழிவு படுத்திவிட முடியாது. ஆனால், பிராமணர்களை, அவர்கள் இழிவு சொல்லாக கருதும் ‘பார்ப்பான்’ என்ற பெயரை சொல்லியும், அவர்களின் பழக்க வழக்கங்கள், பேச்சு மொழியையு கேலியும் கிண்டலும் செய்து வருகின்றனர். சமூக ஊடகங்களில் வெளிப்படையாகவே எழுதுகின்றனர். அவர்கள் குறித்து புகார் அளித்தால் காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. புகார் கொடுக்க வந்தவர்களையே விரட்டியடிக்கும் நிலை தான் தமிழகத்தில் இருக்கிறது. அதனால்தான், பிராமணர்கள் தங்களுக்கு சட்டப் பாதுகாப்பு வேண்டும் என்று கோரி போராட்டம் நடத்தி இருக்கிறார்கள். கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்த இந்திய அரசியலமைப்பு சட்டம் அனைவருக்கும் உரிமை வழங்கி இருக்கிறது.

தமிழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வரும் திமுக மீது மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். எங்கும் எதிலும் ஊழல் தலைவிரித்தாடுகிறது. மின் கட்டண உயர்வால் குறு, சிறு, நடுத்தரத் தொழில் பெரும் சரிவை சந்தித்து வருகின்றன. சொத்து வரி, பால் விலை, மின் கட்டணம் என்று அனைத்தும் உயர்ந்து விட்டன. இதிலிருந்து மக்களின் கவனத்தை திசைதிருப்ப, மீண்டும் ‘இனவாத அரசியலை’ திமுக கையில் எடுத்திருக்கிறது இதைத்தான் ஆ.ராசா அவர்களின் அறிக்கை வெளிப்படுத்துகிறது.

பிறப்பின் அடிப்படையில் இந்து மதத்தில் வேறுபாடுகள் இருப்பதாகவும், அதை பிராமணர்கள் ஏற்படுத்தியதாகவும் ஆகும் ஆராசா கூறுகிறார். ‘அனைவரும் சமம், சமத்துவம். என்பது தான் திமுகவின் கொள்கை என்றும் அவர் கூறியிருக்கிறார். இது உண்மையானால் ‘திமுக தலைமை’ என்ற கருவறைக்குள் ஆ.ராசா அவர்களால் நுழைய முடியுமா? ஆ.ராசா போன்ற திறமையும், அனுபவமும் வாய்ந்த தலைவர்கள் திமுக தலைவராக, முதல்வராக முடியுமா? பெரம்பலூர் பொது தொகுதி ஆன பிறகு, ஆ ராசா, நீலகிரி தனித் தொகுதியில் போட்டியிடும் சூழல் ஏன் உருவானது? ஆ.ராசா போன்ற முக்கிய தலைவர்களையே பொதுத் தொகுதியில் நிறுத்த முடியாத அளவுக்கு திமுகவில் தீண்டாமை தலைவிரித்தாடுகிறதா?

பிறப்பின் அடிப்படையில் திமுக தலைமை நிரப்பப்படுவது பற்றி ஆராசாவின் கருத்து என்ன? இது பிறப்பின் அடிப்படையிலான தீண்டாமை இல்லையா? இதை நவீன மனுதர்மம் அல்லது திராவிட மனு தர்மம் என்று கூறலாமா? பட்டியலினத்தைச் சேர்ந்த ஒருவரை துணை முதல்வராக்க வேண்டும் என்று பலர் வலியுறுத்தியும், அதை துளியும் மதிக்காமல் தங்களின் மூன்றாம் தலைமுறை வாரிசான உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சராக்கி இருக்கிறது திமுக தலைமை. ‘தந்தை – மகன் – பேரன்’ என்று கட்சி தலைமைக்கு பிறப்பின் அடிப்படையில் தலைவர்களை தேர்ந்தெடுக்கும் ஒரு கட்சியில் இருந்து கொண்டு மனுதர்மம் பற்றி பேசுவதற்கு வெட்கப்பட வேண்டும். வேதனைப்பட வேண்டும். மக்கள் விழித்துக் கொண்டு விட்டார்கள். திமுகவின் இனவாத அரசியல் இனி எடுபடாது.

ஏ.என்.எஸ்.பிரசாத்
தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர்
கைப்பேசி: 9840170721

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    திமுக டோக்கன் விவகாரம் – பெண் தற்கொலை – பரஞ்சோதி கண்டனம்

    மண்ணச்சநல்லூரில் திமுக வேட்பாளர் கதிரவன் வழங்கிய பரிசு பொருட்கள் தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினையால் பிச்சாண்டார்கோவில் பகுதியை சேர்ந்த சிந்துஜா என்பவர் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர்,…

    மக்கள் உற்சாக வரவேற்பில் ஸ்ரீரங்கம் அஇஅதிமுக வேட்பாளர் மனோகரன்

    அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக வெற்றி வேட்பாளர் திரு ஆர் மனோகரன் அவர்கள் இன்று காலை 8 மணி முதல் மணப்பாறை வடக்கு ஒன்றிய கழகத்திற்கு உட்பட்ட அழகியரெட்டிபட்டி சித்தானந்தம் கரிச்சான்பட்டி தாதம்பட்டி டிஎன்பிஎல் குடியிருப்பு குப்பனார்பட்டி குப்பனார் பட்டி…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *